புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2014




அன்புள்ள கேப்டன், வணக்கம்.

உங்ககிட்டே சில நிமிடங்கள் நான் மனம் விட்டு பேசப்போகிறேன். இப்படிச் சொன்னதும் ""ஏய்... நீ யாரு... எனக்கு எல்லாம் தெரியும். உன் வேலையைப் போய்ப் பாரு...'' என நீங்கள் என்னைப் பார்த்து வழக்கம்போல நாக்கைத் துறுத்த முடியாது. காரணம் நான் கடிதம் மூல மாகத்தான் பேசுகிறேன். உங்களை நம்பியிருக்கும் முப்பது லட்சம் தொண்டர்களில் நானும் ஒருவன். கிளை, நகரம், ஒன்றியம், மாவட்ட நிர்வாகப் பொறுப்பு வரை வளர்ந்து வந்தவன். தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் என பலரோடும் தொடர்பில் இருப்பவன். பெரும் பாலான விபரங்களை அறிந்தவன் என்பதால் தான் வெளிப்படையாகவே இதை எழுதுகிறேன்.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அடுத்த நிலையில் பலம் வாய்ந்த கட்சி நமது தே.மு.தி.க. 2011-ல் நாம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கு முன்புவரை  சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தனித்து நின்று ஒவ்வொரு தேர்தலிலும் நாம் முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட ஓட்டுகள் வாங்கினோம். இப்போது இதே நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்து படுதோல்வியை தழுவிவிட் டோம் என்பது மட்டுமல்ல, அரசியலில் வெற்றிடத்தை அடைந்துள்ளோம். ஏன் இந்த நிலை? இதற்கு யார் காரணம்? நமது கட்சியின் நிர்வாகிகளா? அல்லது நீங்களா? மனசாட்சிப்படி கூறுங்கள்... நூறு சதவீதம் நீங்கள்தான் கேப்டன். இதை நான் பகிரங்கமாக கூறிவிட்டேன் என நீங்கள் வருத்தப்படக்கூடாது. மனதில் சுமை இல்லாமல் வெளியே கொட்டிவிடுவது ஆரோக் கியத்திற்கு நல்லது.

2011-ல் நாம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 சட்டமன்றத் தொகுதிகளில் வென்றோம். அப் போது நாம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆக அது மக்கள் விரும்பிய கூட்டணி. ஆனால் இப்போது மக்கள் விரும்பாத கூட்டணி பி.ஜே.பி.  மக்கள், நாம் கூட்டு சேருவோம் என  எதிர்பார்த்தது தி.மு.க. வோடுதான். அது நடக்க வில்லை. அதன் விளைவுதான் இப்போது தோல்வி என்ற நெருப்பாற்றில் நீந்திக் கொண்டுள்ளோம்.

இந்த நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் பரபரப்பாய் காட்சியளிக்கும் போது ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும், பொது மக்களும் ஏன் நமது தொண்டர்களிடம் கூட தே.மு. தி.க. யாருடன் கூட்டு என்ற எதிர்பார்ப்புகள் கூடி நின்றது. சென்ற ஜனவரி மாதம் பொங்கல் விழாவை நமது தலைமைக்கழகத்தில் கொண்டாடினோம். அப்போது நீங்கள் என்ன சொன்னீர்கள்? கட்சிப் பொதுக்குழு கூடி கூட்டணியா? தனித்தா என்பதை நிர்வாகிகளிடம் கேட்டு முடிவு செய்வேன் என்றீர்கள்.  அதே நேரத்தில் நமது தே.மு.தி.க.வை அழிக்கப் பார்க்கும் ஜெயலலிதாவை நாற்பது தொகுதிகளிலும் தோற்கடிப்பேன் என்றீர்கள். கேப்டன் நல்ல முடிவை நோக்கித்தான் பயணப்படுகிறார் என எங்களின் தொடக்க  நம்பிக்கையாக அது இருந்தது.

செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டினீர்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள். யாருடன் கூட்டணி என கருத்துக் கேட்டீர்கள். ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் 60 சதவீதம்பேர் பா.ஜ.க. கூட்டணி என்றும் 40 சதவீதம் பேர் தி.மு.க. கூட்டணி என்றும் கருத்துக் கூறியிருந்தார்கள். பொதுக்குழு நிறைவில் நீங்கள் எந்தக் கூட்டணி என அறிவிப்பீர்கள் என தமிழ்நாடு முழுதும் உள்ள நம் தொண்டர்கள், அரசியல் கட்சியினர் எதிர்பார்த்தார்கள். ஆனால் நீங்கள் அதிரடியாக விழுப்புரத்தில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்பேன் என்றீர்கள்.

இதற்கிடையே உங்களை காங்கிரஸ் சார்பாக வாசன், இளங்கோவன், ஞானதேசிகன் ஆகியோரும், பா.ஜ.க. சார்பாக பொன்.ராதாகிருஷ்ணன், தமிழருவி மணியன், இல.கணேசன், மோகன்ராஜுலு இவர் களும், தி.மு.க. சார்பாக திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி நண்பர்கள் என மூன்று கட்சி களிலிருந்தும் தனித்தனியாக உங்களை சந்திக்கிறார்கள். யாரிடமும் எந்த உறுதியும் நீங்கள் கொடுக்கவில்லை.

அடுத்து பிப்ரவரி 2 அன்று விழுப்புரத் தில் நடைபெறும் மாநாட்டுக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என நிர்வாகிகள் கருத் துச் சொன்னபோது, நாடாளுமன்றத் தேர்தல் நேரம். காவேரி, முல்லைப்பெரியாறு என நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத் தை வஞ்சிக்கிறது. ஆகவே தமிழக உரிமை மீட்பு மாநாடு என வைக்கலாம் என்று நிர்வாகிகள் கூறியபோது, நீங்கள் அந்தப் பேரு வேண்டாம், ஊழல் எதிர்ப்பு மாநாடு என பேர் வைக்கலாம் என வைத்தீர்கள். அப்போதுதான் டெல்லியில் ஆம் ஆத்மி கெஜ்ரிவால் ஆட்சியைக் கைப்பற்றிய நேரம். கெஜ்ரிவாலை மனதில் வைத்துதான் இந்தப் பேரை நீங்கள் வைத்தீர்கள். 

அப்படி ஊழல் எதிர்ப்பு மாநாடு என பெயர் வைத்த நீங்கள் மாநாடு முடிந்த ஐந்தாறு நாட்களில் ஊழலின் ஊற்றுக் கண்ணான காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கை, எம்.எல்.ஏ.க்களை அழைத்துக்கொண்டு போய் பார்க்கலாமா? சரி...  இதை அடுத்து கூறுகிறேன்.  விழுப்புரத்தில் நடந்த மாநாடு சாதாரணமானது அல்ல... சமீபத்தில் எந்த அரசியல் கட்சிக்கும் கூடாத கூட்டம்... லட்சக்கணக்கானோர் வந்திருந்தனர்.

அந்த மாநாட்டின் மூலம் ஒட்டுமொத்த மாக எதிர்பார்ப்பு என்பது என்ன? உங்க ளுடைய பேச்சுதான். ஆனால் கேப்டன் அவர்களே கோபப்படாதீர்கள்... நீங்கள் என்ன பேசினீர்கள் என்பது யாருக்கும் தெரியாது. மாநாட்டின் பெயர் ஊழல் எதிர்ப்பு. மருந் துக்குக்கூட ஊழலைப் பற்றி நீங்கள் பேசவே இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நமது நிலை என்ன என்பது பற்றியும் தெளிவாக அறிவிக்கவில்லை. தனித்துப்போட்டியிடலாமா என்று நீங்கள் கேட்க, முன்வரிசைகளில் இருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்ய, யாருக்கும் எதுவும் கேட்கவுமில்லை. புலப்படவுமில்லை. ஒட்டுமொத்த தொண்டர்களும் ஏமாந்து போனோம்.

அடுத்து என்ன நடந்தது? தேர்தலில் போட்டியிடுபவர்களிட மிருந்து விருப்ப மனு பெற அறிவித்தீர்கள். தொகுதி வாரியாக நூற்றுக்கணக் கானோர் நேர் காணலில் கலந்து கொண்டார்கள். அவர்களிடமும் தனித் துப் போட்டியிட லாமா? கூட்டணி வைத்தால் யாருடன் என கேட்டீர்கள். அதில் எண்பது சதவீதம் பேர் சொன்ன கருத்து பா.ஜ.க. வுடன் கூட்டணி சேர்ந்தால் அதிக ஓட்டு பெறலாம், தி.மு.க. வோடு கூட்டணி சேர்ந்தால் அதிக தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்பதுதானே? அதற்கும் பதில் இல்லை.

இதற்கிடையே பா.ஜ.க.  மோகன் ராஜுலு, பொன்.ராதாகிருஷ்ணன்,  பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்யுங்கள் என்றபோதும் நீங்கள் யாருக்கும் எந்தப் பிடியும் கொடுக்க வில்லை. திடீரென நண்பனின் இல்லத் திருமணத் திற்கு மலேசியா கிளம்பிப் போய்விட்டீர்கள். மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து போட்டோ அனுப்பினீர்கள். கேப்டன், தி.மு.க. கூட்டணி என்ற பாதையை தேர்ந்தெடுத்துவிட்டார் என நாங்களெல்லாம் உளமார நம்பினோம். அந்த நம்பிக்கைக்கு  உதாரணமாக அண்ணன் சுதீஷ் அவர்களை தி.மு.க. சைடில் பேசுவதற்கு சிக்னல் கொடுத்தீர்கள். 

ஆரம்பத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும் அண்ணன் சுதீசும் நேரிடையாகப் பேசினார்கள். சீட் எண்ணிக்கையால் ஒரு கட்டத்தில் இந்தப் பேச்சு அப்படியே நிற்க இரு கட்சிகளுக்கும் வேண்டப்பட்ட நண்பர்கள் முயற்சியால் மீண்டும் பேச்சுத் தொடர, மு.க.ஸ்டாலின் தரப்பிலிருந்து நேரில் வரச்சொல்லி அதிகாரபூர்வமான நபர்கள் மூலம் தகவல் வந்தது. நமக்கு ஒதுக்கப்படும் 12 தொகுதிகளுக்கான செலவுகளையும் தி.மு.க. ஏற்றுக்கொள்வதாகப் பேசப்பட்டது. 

இவையெல்லாம் 90 சதவீதம் முடிந்த நிலை. நீங்கள் மலேசியாவிலிருந்து திரும்பி நமது தலைமைக் கழகத்திற்கு வந்தபோது நிர்வாகிகள் 30 பேர் அண்ணன் சுதீஷ் உட்பட அங்கு இருந்தார்கள். தி.மு.க. கூட்டணிக்கான அவசியத்தை ஒவ்வொருவரும் விளக்கினார்கள். அப்போது நீங்கள் என்ன கூறினீர்கள்? "சரிப்பா... நாம ஜெயிக்கணும், ஜெயலலிதாவுக்கு பாடம் கற்பிக்கணும். தி.மு.க. கூட்டணி ஓ.கே. 12 சீட். மேற்படியெல்லாம் பேசிக்கங்க' என நீங்கள் கூறினீர்கள். அந்த நிர்வாகிகளும் ஒருவருக் கொருவர் கை குலுக்கிக்கொண்டு ஆனந்தத்தில் மிதந்தார்கள்.

தி.மு.க.வுடன் பேச வேண்டிய நபர்களு டன் பேச்சு நடந்தது. மதியம், இரவு, அடுத்த நாள் காலை என இறுதி கட்டத்தை நோக்கிப் போனது.  அன்று மதியம் தி.மு.க.வும், கூட்ட ணிப் பேச்சு வார்த்தை என அறிக்கை கொடுக்க வேண்டியதுதான் பாக்கி. நீங்கள் தலைமைக் கழகத்திலிருந்து மதியம் வீட்டுக்குப் போனீர் கள். சிறிது நேரத்திலேயே சுதீஷ் அண்ணனுக்கு போன் போட்டீர்கள். அந்த போன்தான் எங்கள் தலையில் விழுந்த பேரிடியாக இருந்தது. "இல்லப்பா... தி.மு.க. கூட்டணி ஒத்துவராது. அது வேண்டாம்... பி.ஜே.பி. கூட்டணிதான். பி.ஜே.பி. கூட்டணினு அறிக்கை விட்டுடுங்க.' இப்படித்தானே சொன்னீங்க. 

நீங்கள் வீட்டுக்குப் போன பிறகு அங்கு என்ன நடந்தது? யாருக்குமே தெரியாது. அண்ணி சொன்னதை ஏற்றுக்கொண்டீங்கனு மட்டும் தெரிந்தது. சுதீஷ் அண்ணன் உட்பட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக மனம் உடைந்து போனார்கள். யாரும் எந்த அறிக்கையும் தயா ரிக்கவில்லை. கடைசியா நீங்களே சாயங்காலம் நம்ம கேப்டன் டி.வி.க்கு போன் போட்டு "பா.ஜ.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணிப் பேச்சு வார்த்தை' என செய்தி போடச் சொன்னீங்க. 

நிர்வாகிகள் மனம் நொந்துபோய் எந்த ஒட்டும் உறவும் இல்லாத நிலையில் பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைத்தீர்கள். சரி... கூட்ட ணிப் பேச்சுவார்த்தைக்கு ஒரு குழுவைப் போட்டீர்களே அது எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லை. எல்லாம் நீங்களே பேசினீர்கள். பா.ம.க., ம.தி.மு.க. உட்பட கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கான சரியான வேட்பாளர்களை தேர்வு செய்து தொகுதியை கேட்டுப் பெற் றார்கள். நீங்கள் தொகுதியை வாங்கிக்கொண்டு அதன்பிறகு வேட்பாளர்களைத் தேர்வு செய்தீர்கள். சென்னை தவிர வட மாவட்டங்களில் திருவள்ளூர், விழுப்புரம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, சேலம் இந்த ஐந்து தொகுதிகளில் நாம் போட்டியிட்டோம். திருவள்ளூர், விழுப்புரம் தனித் தொகுதிகள்.  மீதி மூன்றில் இரண்டு நாயுடு ஒன்று பிள்ளை சமூக வேட்பாளர்கள். வடமாவட்டத்தில் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட நாம் வேட்பாளராக நிறுத்தவில்லை.

சரி... அடுத்து தேர்தல் பிரச்சாரம். இதில் நீங்கள் இரண்டு முறையும், அண்ணியும் நமது  வேட்பாளர் களுக்கு கடுமையாகப் பிரச்சாரம் செய்தீர்கள். உண்மையில் நீங்கள் என்ன பேசினீர்கள்? "ஏய்... உட்காரு, கொடிய ஆட்டாதே, தள்ளி நில்லு, அப்புறம் மக்கழே...' இதைத் தவிர என்ன உருப்படியா பேசினீங்க? இதைக் குறையாகச் சொல்லவில்லை. உங்களுக்காகத்தான் கூட்டம் கூடுகிறது. அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் எங்களின் வருத்தம்.

அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் உள்ள கட்சிகளில்  அதன் தலைவர்கள் மட்டுமல்ல முன்னணி நிர்வாகிகள், பேச்சாளர்கள் பிரச்சாரம் எல்லாம் அவரவர் மீடியாக் களில் வந்தது. நமது கட்சியிலும் முன்னணி நிர்வாகிகள் பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் நமது டி.வி.யில் கூட ஒளிபரப்பு செய்யவில்லை. அதேபோல் நிர்வாகிகள் முதல் வேட்பாளர்கள் வரை யாரும் எந்தப் பத்திரிகைக்கும், மீடியாவுக்கும் பேட்டி கொடுக்கக்கூடாது என தடை விதித்தீர்கள். சர்வாதிகாரத்தனமாக நடத்தப்படும் கட்சியான அ.தி.மு.க.வில் கூட அக்கட்சியின் கருத்துக்களை எல்லா மீடியாவிலும் பேசுவதற்கு ஆட்கள் இருந்தார்கள். ஆனால் நாம் எந்தக் கருத்தையும் பேச நீங்கள் விடவில்லை. உங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள், தேர்தல் பணபேர குற்றச்சாட்டு எதற்கும் நாம் பதில் சொல்லவில்லை. மவுனம் சம்மதத்திற்கு சமம் என மக்கள் நினைத்துவிட்டார்கள்.

கடைசியாக, தேர்தல் ரிசல்ட் வந்தபோது 14 தொகுதி களிலும் நாம் தோல்வியடைந்தோம். நமது தொண்டர்கள், மகளிர் அணியினர் தலைமைக் கழகத்தில் இருக்கிற நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு கண்ணீர் விட்டுக் கதறுகிறார்கள். அந்த மே 16 அன்று நீங்கள் பொள்ளாச்சி யில் இருந்தீர்கள். அன்றைய தினம் ஒரு பெட்ரோல் பங்க்கில் சூட்டிங். உங்கள் மகனுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தீர்கள். அன்று மாலைவரை சூட்டிங் நடத்திவிட்டு பிறகு ஓய்வெடுக்கப் போனீர்கள். 

தலைமைக் கழகத்தில் நிர்வாகிகள் உங்கள் வருகைக் காகக் காத்திருந்தபோது... நீங்களும் அண்ணியும் டெல்லிக்கு கோவையிலிருந்து போய்வீட்டீர்கள். சுதீஷ் அண்ணனை சென்னையிலிருந்து வரச் சொல்லியுள்ளீர் கள். டெல்லிபோய் நரேந்திமோடியையும் பா.ஜ.க. தலை வர்களையும் பார்த்துவிட்டு திரும்பி கோவைக்குப்போய் பொள்ளாச்சியில் சூட்டிங்கிற்குப் போய்விட்டீர்கள். கட்சி என்றால் நீங்களும், அண்ணியும், உங்கள் மைத்துனரான சுதீஷ் இந்த மூவர் மட்டும்தானா? நமது கட்சி நிர்வாகிகளை நீங்கள் நம்பவேயில்லை. அவர்களுக் கான மரியாதையைத் தரவேண்டும். கட்சி என்றால் நீங்கள்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் உங்களுக்காக இரவு பகலாக ரத்த மும் வேர்வையும் சிந்தி உழைக்கும் தொண்டனுக்கும் நிர்வாகிகளுக்கும் என்ன அங்கீகாரம் தந்துள்ளீர்கள்?

வேறெந்த கட்சியிலும் இல்லாத அளவில் கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் தங்கள் சொந் தப் பணத்தை செலவழித்தது நம் தே.மு.தி.க.வில்தான் என்பது உங்களுக்கே தெரியும் கேப்டன். நீங்கள் நடிகராக இருந்தபோதே ரசிகர் மன்றங்களை உருவாக்கி உங்கள் உத்தரவுப்படி ஊர் ஊருக்கு விளையாட்டுப் போட்டிகள், பொங்கல் விழாக்கள் நடத்தியவர்கள்தான் நம் தொண்டர்கள். அதன்பின் கட்சி ஆரம்பிக்கும் முன்பே 2001 உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் கட்டளைப்படி போட்டியிட்டு கைக்காசை செலவழித்தார்கள். கட்சி தொடங்கிய 2005-ஆம் ஆண்டிலிருந்து உங்கள் பிறந்தநாளிலும் கட்சி தொடக்க நாளிலும் நலத்திட்ட உதவிகளை சொந்த செலவில் செய்து வருகிறார்கள். அப்புறம், 2 உள்ளாட்சித் தேர்தல், 2 சட்டமன்றத் தேர்தல், 2 நாடாளுமன்றத் தேர்தல் எனப் பல செலவுகள். ஒவ்வொரு தொண்டனும் சராசரியாக 10ஆயிரம் ரூபாய் செலவழித்திருப்பான். கிளை நிர்வாகிகள் ஒவ்வொருவரும் லட்சத்தில் செலவழித்திருப்பார்கள். மற்ற நிர்வாகிகள் பத்து லட்சத்திலிருந்து கோடி வரை சொந்தக்காசை செலவழித்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் இதுவரை ஏதாவது ஆதாயம் அடைந் துள்ளார்களா? எவ்வளவு காலத்திற்கு சொந்தக் காசை செலவழிக்க முடியும்?

ஒவ்வாத, மக்கள் விரும்பாத, தோல்விக் கூட் டணியை ஏற்படுத்தியது நீங்கள்தான். அதற்காக உங் களைக் குற்றம் சொல்லவில்லை. தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். அரசியல் அதிகாரம் நம் கைக்கு வரவேண்டும். சரிவிலிருந்து மீள வேண்டும்.

இந்தக் கடிதம் உங்கள் பார்வைக்கு வரும் போது மாவட்ட, மாநில நிர்வாகிகளிடமும் வேட் பளர்களிடமும் ஆலோசனை கூட்டம் நடத்துவீர் கள். அதிலாவது வெளிப்படையாக மனம்விட்டுப் பேசுங்கள். எல்லோருக்கும் உரிய மரியாதை கொடுங் கள். கட்சி நிர்வாகத்தை முறைப்படி நடத்துங்கள். ஜன நாயக முறைப்படி எல்லோரையும் இயங்க விடுங்கள். உங்களிடம் உள்ள குறைகளைப் போக்க நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

2016-ல் ஜெயலலிதாவை வீழ்த்த யாருடைய துணை தேவை என்பதை இப்போதே முடிவு செய்து தே.மு.தி.க.வின் நிஜகேப்டனாக உருவெடுங்கள். இயக்கத்தின் வாழ்வும், தேய்வும் உங்கள் கையில்தான் உள்ளது கேப்டன்.

-அன்புடன் 
உங்களின் உண்மை விசுவாசி, கட்சித்தொண்டன்

ad

ad