புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2014


பொருத்தமான நிறைவான தமிழருக்கான  தீர்வுத் திட்டம் ஒன்றினை தயாரிக்க கூட்டமைப்பு தீர்மானம்
தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தீர்வு திட்டம் ஒன்றினைத் தயாரிப்பதற்கு த.தே.கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக தெரிவத்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், இதற்காக தமிழ் மக்களிடமிருந்து
கருத்துக்களை அறிந்து கொள்ளும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோப்பாய் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தீர்மானித்ததன் பிரகாரம் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ் மக்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக tna proposal@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அல்லது,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சி அலுவலகங்களின் முகவரிக்கோ, வடகிழக்கு தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் இனப்பிரச்சினை தீர்வு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் தங்களிடம் இருக்கும் கருத்துக்களை தெரிவிக்க முடியும்.
இதனடிப்படையில் தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் எதனை எதிர்பார்க்கிறார்கள் என்பதனை நாங்கள் தீர்மானிக்க முடியும்.
இதுவரை காலமும் சிறீலங்கா அரசாங்கத்துடன் பல பேச்சுவார்த்தைகள், தீர்வு முயற்சிகள் ஆயுதப் போராட்ட இயங்கங்களின் காலம் தொடக்கம் முன்வைக்கப்பட்டபோதும். எதுவித முன்னேற்றமும் எட்டப்படாத நிலையில் தமிழ் மக்கள் தமக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை கூறவேண்டும். அவர்களுடைய கருத்துக்களை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என தீர்மானித்திருக்கின்றோம்.
மேலும் இவ்விடயம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்களை உள்ளடக்கியதாக ஒரு குழு உருவாக்கப்படும்.
அவர்கள் மக்களுடைய கருத்துக்களின் அடிப்படையில் தீர்மானத்தை எடுக்கும். இந்நடவடிக்கை ஒரு காலத்தின் கட்டாயமாக முன்னெடுக்கப்படுகின்றது.
ஏனெனில் இந்திய அரசாங்கம் 13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் படியும், இலங்கை அரசாங்கம் தெரிவுக்குழுவிற்கு வரும்படியும், தமிழக அரசு தனித் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தும் படியும் கோரி வருகின்றன.
எனவே இந்நிலையில் ஈழத்தமிழர்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள் என்பதனை தீர்மானிக்க வேண்டிய அல்லது தெரிந்து கொள்ள வேண்டிய, மேலும் முக்கியமாக அதனை வெளிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது என்ற அடிப்படையில் இந்த முயற்சியை தாம் எடுத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad