புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2014


இலங்கையைத் தொடர்ந்தும் இந்தியா நம்பப் போகிறதா?
ஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு அதன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் வழங்க முடியாது என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், அமைச்சருமான பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்து தங்களிடம் இந்தியா இதுவரை எதுவும் கூறவில்லை என்றும், இந்த விஷயத்தில் இந்தியா பொறுப்புடன் செயல்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் இலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அண்மையில் இந்தியா வந்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினர்.
அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்த பிரதமர், இலங்கையில், தமிழர்கள் சம உரிமை, கண்ணியம் மற்றும் சுயமரியாதையுடன் வாழும் வகையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறியிருந்தார்.
இலங்கைப் பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு என்ற போதிலும், பிரதமர் நரேந்திர மோடியின் யோசனை செயல்படுத்தப்பட்டால் தமிழர்களுக்கு ஓரளவாவது அதிகாரமும், உரிமையும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்தியாவின் யோசனையை நிராகரித்ததுடன், இருக்கும் அதிகாரத்தைக் கொண்டு இலங்கை வடக்கு மாநில நிர்வாகம் ஆட்சி செய்யட்டும் என்று இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியிருக்கிறார்.
இது ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க மறுப்பது மட்டுமின்றி இந்தியாவை அவமதிக்கும் செயல்.
ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் யோசனையை இலங்கை நிராகரிப்பது இது முதல் முறையல்ல. முந்தைய ஆட்சிக்காலத்தில், இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை செயல்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்திய போதெல்லாம், அதை ஏற்றுக்கொள்வதாக இங்கு கூறிவிட்டு இலங்கை சென்ற பின்னர் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க முடியாது என்று கூறுவதை சிங்கள ஆட்சியாளர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவியேற்பு விழாவில் விருந்தினராக பங்கேற்ற ராஜபக்சவுடன் பேச்சு நடத்திய நரேந்திர மோடி, இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின்படி ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும்படி வலியுறுத்தினார்.
இதை ராஜபக்ச ஏற்றுக்கொண்ட போதிலும், இலங்கைத் திரும்பிய பின்னர், தமிழர்களுக்கு காவல்துறை உள்ளிட்ட அதிகாரங்களை வழங்க முடியாது என்று அறிவித்தார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை சென்றிருந்தபோதும், இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின்படி தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அதை ஏற்பதாக சுஷ்மா சுவராஜிடம் ஒப்புக்கொண்ட ராஜபக்ச, இந்தியக்குழு தாயகம் திரும்பியதும், இனப்பிரச்சினையில் இந்தியாவுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று தமது அமைச்சர்கள் மூலம் அறிவித்தார். இவ்வாறாக இந்தியா நெருக்கடி அளிக்கும்போதெல்லாம் தமிழர்களுக்கு உரிமை வழங்குவதாக கூறுவதையும், பின்னர் மறுப்பதையும் இலங்கை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.
இதற்குப் பிறகும் ஈழத்தமிழர்களுக்கு சிங்கள அரசு அதிகாரம் வழங்கும் என்று இந்தியா நம்பிக் கொண்டிருக்கப் போகிறதா? அல்லது வேறு வழிகளில் ஈழத்தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றப் போகிறதா? என்பது தான் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.
இனப் பிரச்சினையைப் பொறுத்தவரை ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கப் போவதாக உலகை நம்பவைத்து நயவஞ்சகமாக ஏமாற்றுவதே இலங்கையின் வழக்கம் என்பது தான் வரலாறு நமக்கு சொல்லும் உண்மை ஆகும்.
எனவே, ஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு அதன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். ராஜபக்ச அரசுக்கு காலக்கெடு விதித்து அதற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
அதன்படி இனப்பிரச்சினைக்கு இலங்கை அரசு தீர்வு காண வில்லை என்றால், இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை இணைத்து தனித்தமிழ் ஈழம் அமைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலமாக உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என குறிப்பிடப்பட்டுள்ளது

ad

ad