புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

29 ஆக., 2014

ஆணாதிக்கத்திற்கு மத்தியிலும் எனது சக்திக்கு அப்பாற்பட்டு சேவையாற்றியிருக்கின்றேன்; மார் தட்டுகிறார் யாழ் மாநகர சபை முதல்வர் 
ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் ஒரு பெண்ணாக பல சவால்களுக்கு மத்தியிலும் எனது சேவையை திறம்பட செய்துள்ளேன் என
யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

மாநகர சபையின் பதிவுக்காலம் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இந்த நிலையில் யாழ். மாநகர சபையின் 2014ஆம் ஆண்டுக்கான 8ஆவது கூட்டமும் சபையின் இறுதிக்கு கூட்டமும் முதல்வர் தலைமையில் இன்று நண்பகல்  ஆரம்பமாகி நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

யாழ். மாநகர சபையினை பொறுப்பு எடுத்த போது நீண்ட கால திட்டங்கள்  மற்றும் குறுகிய கால திட்டங்கள் என்பனவற்றினை நாங்கள் சவாலாக எதிர்கொண்டோம். பதவியேற்ற போது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டது போன்றே நாம் மக்களுக்கு உள்ளதை உள்ளபடி கூறினோம்.

நீண்ட காலமாக தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்  உரிமைகளையே மக்களுக்கு தேர்தலின் போது தெரிவித்தனர். ஆனால் நாங்கள்  அபிவிருத்தி குறித்து தெரிவித்து வந்தோம். அதற்கு அமையவே இப்போது எங்களது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் எம்மால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக செய்யப்படவில்லை. அவற்றுக்கும்  காரணம்  இருக்கின்றது. இதற்கு எங்கள்  மத்தியில்  காணப்பட்ட ஒற்றுமையின்மை என்பதை நான்  வெளிப்படையாக தெரிவித்துக் கொள்கின்றேன் .

மேலும்  நான்  பெண் என்ற ரீதியிலும் அரசியல் என்ற ரீதியிலும் எனக்கு பல சவால்கள்  ஏற்பட்டது. ஆனாலும் முரண்பாடுகள்  ஊடாக நான் சேவை ஆற்றியுள்ளேன்.  அத்துடன் இராணுவ அக்கிரமிப்பு , அழிபாடுகள்  இருந்தது. எனினும் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா அவர்கள் இணக்க அரசியல் ஊடாக இரணுவ தரப்புடன்  பேசி அவர்களை வெளியேற்றி மீள்குடியேற்றம் செய்யப்பட்டது.

வாழ்வாதார உதவிகள் எங்களுக்கு உரியது அல்ல எனினும் மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக மாநகர சபை அதனையும் மக்களுக்காக வழங்கியுள்ளது. எமது முஸ்லீம் பகுதிகளில் முஸ்லீம் மக்கள் வந்து மீள்குடியேறி இருக்கின்றனர். அவர்கள் தங்களுக்கு என வீதிகள் மற்றும் கால்வாய்களையும் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள் .

எனினும் கோரிக்கைகளை நாங்கள்  100 வீதம் செய்து விட்டோம் என்று கூறிக்கொள்ள முடியாது. மதவு, கால்வாய்கள் என்று அதிகளவான கோரிக்கை உள்ளது. எனினும் முக்கியத்துவத்தை அறிந்து அதற்கு ஏற்ப அவை நிவர்த்தி செய்யப்பட்டு இருந்தன.

அத்துடன் 30 வருடமாக இங்கு பணியாற்றிய அதிகாரிகள் பயிற்சிகள் இன்றி பணியாற்றியவர்கள் அந்தவகையில் திட்டமிட்டு நாம் செயற்பட கடினமாகவும் சவாலாகவும் இருந்தது. இயன்றவரை இருக்கும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆணையாளர்கள் அனைவரது பங்களிப்புடனும் தற்போது திட்டமிடுகின்றோம். இருப்பினும் சிறந்த திட்டமிடல் இருந்தால் எவ்வளவோ அபிவிருத்திகளை நாம் இன்னும்  அடைந்து இருக்கலாம்.

இவ்வாறான அமைந்துள்ள அபிவிருத்தியை மேலும் மெருகூட்ட வேண்டும். எமது காலத்தில் எவ்வளவோ செய்து இருக்கலாம் ஆனால் ஒத்துழைப்பு குறைவாக இருந்தது , கருத்து வேற்றுமை இருந்தது. எனினும் சக்திக்கு அப்பால் நின்று சேவையாற்றியுள்ளோம். இந்த சேவைகள் தொடர வேண்டும். ஆவணப்படுத்தல் தொடர வேண்டும் , தமிழ் மக்களது விழுமியங்கள் பாதுகாக்கப்பட   வேண்டும்.

இலங்கையில் தமிழர்களுடைய எந்த அடையாளங்களையும்  நாங்கள் விட்டுக் கொடுக்க கூடாது. அத்துடன் தமிழனாகவும் இலங்கையனாகவும் வாழப்பழகிக்  கொள்ள வேண்டும். மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மோடியுடன் சந்திப்பினை மேற்கொண்டுள்ளனர். அது வரவேற்கப்பட வேண்டியது.

எனினும் சிறுபான்மை கட்சியினர் ஒன்றிணைந்து எமது உரிமைக்காக பாடுபடுங்கள் . எனவே எல்லோரும் ஒன்றிணைந்து பேதங்கள்  இன்றி தமிழ் மண்ணை நாங்கள்  வளர்த்து எடுப்பதற்கும் எமது அடையாள சின்னங்களை பாதுகாப்பதற்கும் பாடுபட வேண்டும்.

இயன்ற வரையில் 1250 வேலை ஆட்களை வைத்து நடாத்தியிருக்கின்றேன். என்னைப் பொறுத்த வரை எனது சக்திக்கு அப்பால் நான் சேவையாற்றியுள்ளேன். எல்லோரும் ஒற்றுமைப்பட்டிருந்தால் இதற்கு மேலாகவும் சேவையாற்றி இருக்க முடியும். 

பிழைகள் இருப்பின் மன்னிக்க வேண்டும் என்றும்  அனைவரும் மக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்றும் அவர் மேலும்  தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=494043374829692275#sthash.CJUmDsow.dpuf