யாழ்.நவக்கிரி விபத்துத் தொடர்பில் பக்கச்சார்பாக நடக்கவில்லை: பொலிஸார்- சாரதிக்கு விளக்கமறியல்
இன்றைய தினம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே பொலிஸார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
விடயம் தொடர்பாக மேலும் அவர்கள் கூறுகையில்,
குறித்த விபத்துச் சம்பவத்தில் கர்ப்பவதி பெண் ஒருவர் உயிரிழந்தார். உடனடியாக பொலிஸார் அந்தப் பகுதிக்குச் சென்று அங்கே உயிரிழந்த நிலையிலிருந்த பெண்ணை மீட்டனர். அவ்வாறு மீட்கப்பட்டபோது அந்தப் பெண் உயிரிழந்துவிட்டார் என எமக்கு தெரியாது.
அவ்வாறே தெரிந்தாலும் அதனை பொலிஸார் உறுதிப்படுத்த முடியாது. வைத்தியரே உறுதிப்படுத்த வேண்டும்.
ஒருவேளை அவர் காப்பாற்றக் கூடிய நிலையில் இருந்திருக்கலாம். அதற்காக நாங்கள் சாட்சிகளை அழித்தோம் என அர்த்தப்படாது. மேலும் குறித்த விபத்துச் சம்பவத்தில் வாகனத்தை தீயிட்டு கொழுத்தியவர்களை, அடையாளம் காண முடியவில்லை.
எனவே நாங்கள் இதுவரையில் எவரையும் கைது செய்யவில்லை. மேலும் குறித்த வாகனம் மகேஷ்வரி நிதியத்திற்குச் சொந்தமானது. எனவே அந்த வாகனத்தில் ஏற்றிவரப்பட்ட மணலுக்கு ஆவணம் உள்ளதா? என நாம் கேட்டோம். ஆனால் அவர்களிடம் ஆவணம் இல்லை.
ஆவணம் எரிந்துவிட்டதாக கூறியிருக்கின்றார்கள். ஆனாலும் குறித்த ஆவணத்தை மீளப் பெற்றுக் கொள்ளலாம். எனவே பெற்றுக் கொடுப்பதாக கூறுகின்றார்கள்.
கர்ப்பிணித் தாய் பலி- சாரதிக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம், நவக்கிரி சரஸ்வதி வீதியில் நின்றுகொண்டிருந்த கர்ப்பிணித் தாய் மீது டிப்பர் வாகனத்தை மோதிய சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி செப்டெம்பர் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றில் குறித்த சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நவக்கிரி சரஸ்வதி வீதியில் 25 வயதான கசிந்திரன் சுபாசினி என்ற கர்ப்பிணித் தாயொருவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில், அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது. விபத்துக்குக் காரணமான வாகன சாரதி தப்பியோடியதையடுத்து, ஆத்திரமுற்ற ஊர்மக்கள் டிப்பர் வாகனத்தை தீயிட்டு எரித்தமை குறிப்பிடத்தக்கது.