புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2014

அன்பழகன் தரப்பின் வாதம்!

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், மே 19 ஆம் தேதி ஒருவழியாக அரசு தரப்பு இறுதி வாதத்தை நிறைவுசெய்தார். இந்த வழக்கில் தி.மு.க பொதுச்செயலாளர் க. அன்பழகன் தரப்பு மூன்றாம்
தரப்பு வாதி என்பதால், இறுதி வாதத்தை நேரடியாக வாதிட முடியாது. அதனால், அவரது தரப்பு வழக்கறிஞர்கள் குமரேசன், சரவணன், நடேசன் ஆகியோர் நீதிபதி முன்பு 428 பக்க எழுத்துபூர்வமான ஆவணத்தைச் சமர்ப்பித்தனர்.

அன்பழகன் தரப்பு சமர்ப்பித்த ஆவணத்தின் சாராம்சம்...

‘’இந்த வழக்கின் ஏ1 ஆக இருக்கும் ஜெயலலிதா 1984 - 89 வரை எம்.பி-யாகவும் 1989 - 91 வரை எம்.எல்.ஏ-வாகவும் 1991-96 வரை தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார். 
இந்த வழக்கின் ஏ2 ஆக இருக்கும் சசிகலா, கேசட் கடை நடத்தி வந்தார். அவரது கணவர் நடராஜன் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் அதிகாரியாக இருந்து 1991 ல் அந்தப் பணியை ராஜினாமா செய்தார்.

இந்த வழக்கின் 3ஆவது குற்றவாளியாக சேர்க்கப்​ட்டுள்ள சுதாதரன், சசிகலாவின் சகோதரி மகன். இவரை ஜெயலலிதா தன் வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டார்.
இந்த வழக்கின் 4ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள இளவரசி, 2 ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவின் சகோதரர் ஜெயராமனின் மனைவி. 1996 ல் ஜெயராமன், ஜெயலலிதாவுக்குச் சொந்தமான, ஆந்திராவில் உள்ள திராட்சை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார். கணவர் இறந்த பிறகு ஜெயலலிதாவின் சொந்த வீடான போயஸ் கார்டனுக்கு இளவரசி வந்துவிட்டார்.

ஜெயலலிதா 1964 - 72 வரை திரைத் துறையில் நடிகையாக இருந்தார். அவரது அம்மா சந்தியா 1971 ல் காலமானார். அப்போது அவருக்கு நாட்டிய கலாநிகேதன் என்ற இசைப் பள்ளியும் போயஸ் கார்டனில் வீடும், ஆந்திரா மாநிலத்தில் ஸ்ரீநகரில் ஒரு வீடும், ரங்காரெட்டி தாலுக்காவில் 10.20 ஏக்கரில் திராட்சைத் தோட்ட பண்ணை வீடும், பஷீராபாத்தில் 3.25 ஏக்கர் நிலமும் மட்டுமே இருந்தது. அவை ஜெயலலிதாவின் பெயருக்கு மாற்றப்பட்டது. 

1987 ல் ஜெயலலிதாவின் மொத்த அசையா சொத்துகள் 7.5 லட்சமும், வங்கி இருப்பு ஒரு லட்சமும் மட்டுமே இருந்தன. 1989 ல் எம்.பி-யாக இருந்தபோது நான்கு கார்கள் (மதிப்பு ரூ9,12,129) ஒரு ஜீப் (மதிப்பு ரூ.1,04,000) வாங்கி இருக்கிறார். இதுவே வருமானத்துக்கு அதிகமாக வாங்கப்பட்டுள்ளது. 1988 முதல் 1990 வரை ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், நமது எம்.ஜி.ஆர் என்ற கம்பெனிகளைத் தொடங்கி நடத்திவந்தாலும் வரவு, செலவுகள் செய்யாமல் வருமானம் இல்லாமல் இருந்தது. 1991 வரை ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 2,01,83,957 ஆக இருந்தது.

1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நலிந்த நிறுவனங்களான மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ஜே.எஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், ஜெயா கன்ஸ்ட்ரக் ஷன், நமச்சிவாயா கன்ஸ்ட்ரக் ஷன், சக்தி கன்ஸ்ட்ரக் ஷன், மார்பிள் அண்ட் மார்பிள்ஸ், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், கிரீன் கார்டன், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சூப்பர் டூப்பர் பிரைவேட் லிமிடெட் என 32 கம்பெனிகளை வாங்கி, அதில் நேரடி மற்றும் மறைமுக பங்குதாரர்களாக நுழைந்து, புதியதாக வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, 1991-96 வரை ஐந்து வருடங்கள் இந்த 32 நிறுவனங்களில் 898 முறை பணம் டெபாசிட் மட்டுமே செய்திருக்கிறார்கள். இந்த நிறுவனங்களுக்கு இன்கம் டாக்ஸ், சேல்ஸ் டாக்ஸ் எதுவும் கிடையாது. இந்த நிறுவனங்களின் பெயரில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலம், கட்டடம், விளைநிலங்களை வாங்கி வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைக் குவித்திருக்கிறார்கள்.

1991 ல் ரூ.2,01,83,957- ஆக இருந்த ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு, 1996 ல் 66,44,73,573 ஆக உயர்ந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் இவருக்கு எந்த வருமானமும் இல்லை. முதல்வராக இருந்ததற்குக்கூட சம்பளம் வாங்காமல் மாதம் ஒரு ரூபாய் வீதம் ஐந்து வருடங்களுக்கு 60 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியிருக்கிறார். பொதுச் சேவையில் இருந்துகொண்டு வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வாங்கியுள்ளனர்.

இவை அரசுத் துறை சாட்சியங்கள், ஆவணங்கள், நேரடியாக கைப்பற்றப்பட்ட பொருட்களை வைத்து நிரூபிக்கப்பட்டதால் இவர்களுக்கு ஊழல் தடுப்பு சட்டம் 2டி பிரிவில் இந்தியத் தண்டனை சட்டம் 109 (குற்றவாளிக்கு உடந்தையாக செயல்படுதல்) மற்றும் 120 பி ( கூட்டுச் சதி ) ஆகிய பிரிவுகளில் தண்டனை வழங்க வேண்டும்’’ - இவ்வாறு தி.மு.க தனது இறுதி வாதத்தை சமர்ப்பித்தனர்.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், நீதிபதியிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், ‘’ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரின் தாயார் இறந்துவிட்டதால், எங்களுடைய இறுதி வாதத்துக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும்‘’ என்று கேட்டிருந்தனர்.

அதையடுத்து நீதிபதி, ‘’ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரின் இறுதி வாதத்தை 2.6.2014 அன்று தொடங்கலாம் என்றும், மற்ற ஏ2 சசிகலா, ஏ3 சுதாகரன், ஏ4 இளவரசி மூவரும் நாளையில் இருந்து தங்களது இறுதி வாதத்தைத் தொடங்க வேண்டும்‘’ என்றும் கூறினார்.

அதையடுத்து ஏ2, ஏ3, ஏ4 மூவரும் 21 ஆம் தேதி மீண்டும் நீதிபதியிடம் மனு கொடுத்தார்கள். அதில் ‘‘ஏ1 பொதுத் துறையில் இருப்பதால் அவருடைய இறுதி வாதம் நிறைவடைந்த பிறகுதான் நாங்கள் இறுதி வாதத்தைத் தொடங்க முடியும். அன்பழகன் தரப்பு சமர்ப்பித்த ஸ்டேட்மென்ட்டைப் படித்துப் பார்க்க வேண்டும். அதற்காக எங்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்‘’ என்று கூறப்பட்டிருக்கிறது.

நீதிபதி அந்த மனுவைத் தள்ளுபடி செய்து, ‘நாளை முதல் இறுதி வாதத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்று கண்டிப்புடன் உத்தரவிட்டார்.

ad

ad