புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2014

ஐ.நா.விசாரணைக் குழுவிற்கு விசா அளிக்கக்கோரி 
செப்., 14ல் நாம் தமிழர் கட்சி போராட்டம்

நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
’’இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் அந்நாட்டுப் படைகளால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனிதாபிமற்ற குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் நியமித்துள்ள பன்னாட்டு விசாரணை குழு, இந்தியாவிற்கும் வந்து, தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் இருந்துவரும் ஈழத் தமிழ் ஏதிலிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

ஈழத் தமிழரை திட்டமிட்டு இன அழிப்பு செய்த இலங்கை இனவாத அரசு நடத்திய அந்த சாட்சிகளற்ற போரின் வாழும் சாட்சிகளாக இருப்பவர்கள், இன்றளவும் ஈழத்திலும், தமிழ்நாட்டின் முகாம்களிலும் வாழும் தமிழர்களே. போரினால் தங்கள் உறவுகளை இழந்து, உடமைகளை இழந்த பல தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து அயல் நாடுகளுக்கும் சென்று தஞ்சமடைந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்படும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற நவநீதம் பிள்ளை அவர்கள் கூறியிருந்தார்கள்.

இந்த நிலையில், மார்டி அட்டிசாரி தலைமையிலான ஐ.நா. பன்னாட்டு விசாரணைக் குழு, இந்தியா வருவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது என்று பரவலாக பேசப்படுகிறது. இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தந்திரோபாயக் குழுவின் தலைவராக இருக்கும் சுப்ரமணியன் சாமி இலங்கை சென்று, அங்கு அளித்த பேட்டிகள் அனைத்தும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆதரவாக நிற்குமோ என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

ஈழத் தமிழினத்தின் அரசியல் சம உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி, தமிழினத்தையே திட்டமிட்டு அழித்தொழித்த இலங்கை இனவாத அரசின் கோர முகத்தை அம்பலப்படுத்த பன்னாட்டு விசாரணைக் குழு இந்திய வர அனுமதிக்க வேண்டும் என்பது தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வாகும். இதனை பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்தான் எடுத்துரைக்க வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சி விடுக்கும் கோரிக்கையாகும்.

கடந்த மாதம் 31ஆம் தேதி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சி நடத்திய பட்டினி – தொடர் முழக்கப் போராட்டத்தில் 3 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஒன்று, தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழ் மக்களிடம் ஐ.நா. விசாரணைக் குழு நேரிடையாக விசாரணை நடத்த மத்திய அரசு விசா வழங்கிட வேண்டும். இரண்டாவதாக, விசாரணை நடத்த வரும் ஐ.நா. குழுவிடம் அகதிகள் முகாம்களில் உள்ளவர்கள் உண்மைகளைக் கூற, உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேணடும், ஏனெனில், ஐ.நா. குழுவின் விசாரணையில் பங்கேற்றாலும், அவர்களிடம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக பேச வேண்டும் என்று முகாம் வாழ் ஈழத் தமிழ் மக்கள் மிரட்டப்படுகின்றனர். சென்னையில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் ஈழத் தமிழர் தலைவர் (!) ஒருவர், தமிழக காவல்துறையின் கியூ பிரிவின் துணையுடன் இந்த மிரட்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை நாங்கள் தொடர் முழக்க போராட்டத்தில் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். மூன்றாவதாக, ஐ.நா.விசாரணைக் குழு இந்தியா வர அனுமதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசே முன்மொழிந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, ஐ.நா. விசாரணைக் குழுவை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவரும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை ஐ.நா. பொது அவையில் உரையாற்ற அனுமதிக்கக் கூடாது என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனை வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, சேப்பாக்கத்திலுள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகை அருகே நாம் தமிழர் கட்சி போராட்டத்தில் ஈடுபடும். இதே கோரிக்கையை வலியுறித்தி மீண்டும் இம்மாதம் 26ஆம் தேதியும் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டங்களில் நாம் தமிழர் கட்சியினரும், தமிழின உணர்வாளர்களும் பெரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’’என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad