அந்த ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்கவில்லை!
மோகன்தாஸ் சொன்னதை வழிமொழியும் ஃபெரோஸ் அஹ்மத்
''இப்படி ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்று என்னைத்
தூண்டியது தமிழகத்தின் டி.ஜி.பி-யாக இருந்த மோகன்தாஸ். அவர் ஒரு நாவல்
எழுதியிருக்கிறார் என்பதே பலருக்கும் தெரியாது. உண்மையில் அது நிஜக்கதை.
ராஜீவ் கொலைக்கான பின்னணி, காரணகர்த்தாக்கள் எல்லாம் இந்த நாவலுக்குள்
வருகிறார்கள். இந்த நாவலின் பெயர் ‘‘The Assassination’’ . 1993-ம் ஆண்டு
இந்த நாவல் வெளியானது. நாவலில் உள்ள தகவல்களை இந்திய 'ரா’ உளவுத் துறை
அதிகாரிகள் அவருக்கு கொடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இதை
வெளியிட்டது 'ரா’ சம்பந்தப்பட்ட பப்ளிகேஷன்[launchers]. இந்தப் புத்தகம்
மக்களிடம்
சென்று சேராமல் தடுத்துவிட்டனர். அப்போது நரசிம்மராவ் இந்தியாவின்
பிரதமராக இருக்கிறார். எனக்குக்கூட இந்தப் புத்தகம் பற்றிய தகவல்,
சுப்பிரமணியன் சுவாமியின் புத்தகத்தின் மூலம்தான் கிடைத்தது. இந்தப்
புத்தகத்தை தேடினேன். எங்கேயும் கிடைக்கவில்லை. இறுதியில் புலனாய்வுத் துறை
நண்பர் ஒருவர் கொடுத்த தகவலின்படி அந்தப் புத்தகத்தை வாங்கப்போனேன். அங்கே
அந்தப் புத்தகத்தின் ஜெராக்ஸ்தான் எனக்கு கிடைத்தது.
இந்தப் புத்தகம் அப்படியே ராஜீவ் கொலைச் சதியை
திட்டமிட்டவர்களை, பலனடைந்தவர்களை கதாபாத்திரங்களாக எடுத்து வைக்கிறது.
வில்லன் கேரக்டராக இருப்பவர் பாதர் மூன்சைன். இவர்தான் சந்திரா சாமி.
ராஜீவ் காந்தியாக ஜார்வின் என்கிற கேரக்டர் வருகிறது. சுந்தன் என்கிற
கேரக்டர் பிரபாகரனை வெளிப்படுத்துகிறது. ஐரோப்பிய மொழி ஒன்றில் 'ஒற்றை
கண்’ணுக்கு சைக்லேப்ஸ் என்று சொல்லப்பட... அந்தப் பெயர் சிவராசனுக்கு. இவர்
Delta Force II என்கிற சினிமா படத்தைப் பார்த்து மனித வெடிகுண்டு தணுவை
உருவாக்கும் கதை இந்த நாவலில் வருகிறது.
ராஜீவ் கொலையை நேரடியாக எழுதினால் அது அப்போதைய
ஆளுங்கட்சியை எதிர்நோக்க வேண்டியது இருக்கும் என்பதை எதிர்பார்த்து ஒரு
நாவலாகக் கொடுத்துள்ளார். அவருடைய பதவிக்காலத்தின் இறுதியில்
எல்.டி.டி.ஈ-க்கும் மோகன்தாஸுக்கு விரோதம் உண்டு. ஆனாலும், அவற்றையெல்லாம்
பொருட்படுத்தாமல் உண்மையை சொல்லியுள்ளார். இது 'கான்ட்ராக்ட் கில்லிங்’
என்கிறார். இந்த நாவலின்படி பாதர் மூன்சைன்னுக்கு (சந்திராசாமி) ஜார்வின்
(ராஜீவ் காந்தி) மீது போபர்ஸ் ராணுவ பீரங்கி பேரத்திலிருந்து விரோதம்
தொடங்குகிறது. பாதர் மூன்சைன் சுந்தனை தொடர்பு கொண்டு ஒப்பந்தம்
பேசுகிறார். ஜார்வினை தீர்த்துக்கட்டும் ஒப்பந்தம். சுந்தன் இந்த
ஒப்பந்தத்துக்கு முன்வரவில்லை. 'நான் இதுபோன்ற வேலையெல்லாம் செய்வது இல்லை’
என்கிறார் சுந்தன். இதற்கு சில காரணங்களையும் சுந்தன் சொல்கிறார்.
''அரசியல் ரீதியாக ஜார்வின் ஒழிந்து போய்விட்டார். அவர் அதிகாரத்துக்கு
திரும்ப வரப்போவதில்லை. அதிலும் எங்கள் இயக்கம் இது போன்ற
கான்ட்ராக்டையெல்லாம் எடுத்துச் செயல்படாது. எங்கள் இயக்கத்துக்கு
தேவைப்பட்டால் செய்வோம். அவருடைய ராணுவம் எங்களைக் கொல்ல திரும்ப
வரப்போவதில்லை. இப்படிப்பட்டவரைக் கொல்ல எங்கள் ஆட்களை வீணாக்க நான்
விரும்பவில்லை. ஆனால், பணத்துக்காக இப்படிப்பட்ட காரியங்களைச் செய்பவர்கள்
இருக்கிறார். அவர்களைப் பாருங்கள்’ என்று கூறியது நாவலில் வருகிறது. ஆனால்,
சுந்தன் தலையிடவில்லை. இரண்டு தடவை சந்திக்க ஏற்பாடு செய்ததோடு சரி என்று
நாவல் சொல்கிறது.
'எல்.டி.டி.ஈ-க்கு இதில் சம்பந்தம் இல்லை’ என்பதை
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நாள் முதல் 'ரா’ உளவு அமைப்பு சொல்லி வருகிறது.
1991 மே 21-ம் தேதி இரவு ராஜீவ் காந்தி கொல்லப்படுகிறார். 22-ம் தேதி
மத்திய அமைச்சரவைக் கூடுகிறது. அதில் ஐ.பி இயக்குநர், 'ரா’ அமைப்பின்
தலைவர் எல்லாம் இருக்கின்றனர். ஆனால், கூட்டத்தின் முடிவில் சுப்பிரமணியன்
சுவாமி, 'கொலைக்கான காரணம் எல்.டி.டி.ஈ’ என்று
அறிவிக்கிறார்.
'ரா’ தலைவர், 'இதில் எல்.டி.டி.ஈ இல்லை’ என்கிறார். அதன் பிறகு தமிழக
அரசியல்வாதிகள் இதனைக் கையில் எடுத்து எல்.டி.டி.ஈ-தான் காரணம் என்று சொல்ல
ஆரம்பித்தார்கள்.
எல்.டி.டி.ஈ-யின் முக்கிய புள்ளிகளிடம்
விசாரிக்கவில்லை. அந்த இயக்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு தமிழகத்தில்
திரிந்த கீழ்மட்டத்தைச் சேர்ந்த சிலரைப் பிடித்து வாக்குமூலத்தையும் சில
கடிதங்களையும் ஆதாரமாக வைத்து எல்.டி.டி.ஈ-யை சி.பி.ஐ குற்றவாளியாக
ஆக்குகிறது. தணுவும் சாந்தனும் பிரபாகரனுக்கு எழுதியதாகச் சொல்லப்படும்
கடிதங்களை இரும்பொறை என்பவரிடமிருந்து கைப்பற்றியதாகக் கூறியது சி.பி.ஐ.
இறந்து போனவர்களின் கடிதங்கள் இவை. கையெழுத்து உண்மையா என்பது இதுவரைத்
தெரியாது. ஆனால், சி.பி.ஐ சில சாட்சியங்களை அவர்களே உருவாக்கி
எல்.டிடி.ஈ-யைச் சம்பந்தப்படுத்தினர்.
ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளர் என்கிற அனுபவத்தில்
நான் சொல்லுவது, இதில் பல சாட்சியங்கள் உருவாக்கப்பட்டவை. இது ஒரு
ஒப்பந்தக் கொலை. பணத்துக்காக நடந்தவை. சிவராசன் ஒரு இரட்டை ஏஜென்ட். இந்திய
புள்ளிகள்தான் இந்த ஒப்பந்தக் கொலைக்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஜெயின்
கமிஷன் ரிப்போர்ட்படி பிரபல சவூதி அரேபிய ஆயுத வியாபாரியான அட்னான், அர்னி
மில்லர், சந்திராசாமி போன்றவர்களுக்கிடையே ஏராளமான மில்லியன் டாலர்
பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. ஜெயின் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட பின்னரும்
இந்த வெளிநாட்டுத் தொடர்பு தகவலை சி.பி.ஐ-யும் சிறப்புப் புலனாய்வும் ஏன்
கவனத்தில் எடுத்துகொண்டு இந்த கோணத்தில் விசாரிக்கவில்லை? என்பதுதான்
என்னுடைய கேள்வி. சிவராசன் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு 1991 மார்ச்
மாதம் சிங்கப்பூர், சவூதி அரேபியா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று
வந்துள்ளார். இது விசாரணையின் ஒரு பகுதி. ஆனால், இவற்றை ஏன் மூடி
மறைத்தனர்? இப்படி ஏராளமான கேள்விகள் உள்ளன.
கணவரைக் கொல்லக் காரணமானவர்களை சோனியா ஏன்
கண்டுபிடித்துச் சொல்லவில்லை? என்று நீங்கள் கேட்கலாம். அப்படி அவர் அதை
செய்திருந்தால் அவரது காங்கிரஸ் கட்சியையே குழி தோண்டிப்
புதைத்திருப்பார்கள். இப்படியொரு சூழ்நிலை உருவாவதைத் தடுக்கத்தான் சோனியா
மௌனமானார்'' என்று முடித்தார் ஃபெரோஸ் அஹ்மத்.
உண்மைக் குற்றவாளிகளை பி.ஜே.பி அரசாவது அடையாளம் காட்டுமா?