புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2014

மீனவர்கள் தொடர்பில் ராஜபக்சவின் கருத்துக்கு ஜெயலலிதா கடும் கண்டனம்
மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கருத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு மஹிந்த ராஜபக்ச அளித்த பேட்டியில் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க மாட்டோம் என்று கூறி இருந்தார்.
பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. அத்துடன் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து கொள்கிறது.
இதனிடையே மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்பில் இன்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக் கடித்தத்தில் உள்ளவை வருமாறு:
தமிழக மீனவர்கள் பாக் ஜலசந்தியில் உள்ள தங்களது பாரம்பரியமான மீன் பிடிக்கும் பகுதிக்கு செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினரால் தாக்கி கடத்தி செல்லப்படுவது பற்றி நீங்கள் கடந்த மே மாதம் பதவி ஏற்றதிலிருந்து பல தடவை உங்களுக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன்.
சிறிது இடைவெளிக்கு பிறகு இலங்கை மீண்டும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தொடங்கி உள்ளது. கடைசியாக இது தொடர்பாக உங்களுக்கு நான் கடிதம் எழுதிய பிறகு தமிழக மீனவர்கள் கடத்தி செல்லப்படுவது 3 தடவை நடந்துள்ளது.
கடந்த 10–ந் திகதி இராமேசுவரத்தில் இருந்து 6 படகுகளில் கச்சதீவு அருகே மீன் பிடிக்க சென்ற 30 மீனவர்கள் கடத்தி தலைமன்னாருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மற்றொரு சம்பவத்தில் நாகப்பட்டிணத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 23 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டுள்ளனர். 3–வது சம்பவமாக தஞ்சை மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றிருந்த 4 மீனவர்களை இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் சட்ட விரோதமாக கைது செய்து காங்கேசன்துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று உள்ளனர். இந்த பிரச்சினையில் உங்களது அரசு மேற்கொள்ளும் சரியான அணுகுமுறைக்கு நான் ஏற்கனவே பாராட்டி உள்ளேன்.
உங்களது அதிகாரிகள் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட நமது மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகளில் சரியான முறையில் செயல்பட்டனர். என்றாலும் இலங்கையின் அணுகுமுறை மாறவில்லை. அவர்கள் தொடர்ந்து கடுமையான போக்கையே கடைபிடிக்கிறார்கள்.
அப்பாவி தமிழக ஏழை மீனவர்களுக்கு நிரந்தரமாக பாதிப்பு ஏற்படும் வகையில் அவர்கள் தந்திரமாக செயல்படுகிறார்கள். இதுபற்றி நான் ஏற்கனவே உங்களுக்கு கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளேன். அவர்கள் தமிழக மீனவர்களை விடுவித்து இருந்தாலும் 64 படகுகளை இன்னும் விடுவிக்கவில்லை.
இந்த போக்கு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் தீர்வு காண முடியும்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்தால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும். இந்த தகவலை உயர்மட்ட அளவில் கொண்டு சென்று பேச வேண்டியது அவசியமாகும்.
ஏனெனில் தமிழக மீனவர்களுக்கு எதிரான இந்த சதி திட்டம் இலங்கையின் உயர்மட்டத்தில் இருந்து தோன்றி இருப்பது தெரிய வந்துள்ளது.
இன்று காலை வெளியான ஒரு நாளிதழில் இலங்கை ஜனாதிபதி கொடுத்துள்ள பேட்டியில் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க மாட்டோம் என்று கூறி இருப்பதிலிருந்து இது உறுதி ஆகி இருக்கிறது.
இந்த பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண நீண்ட கால முறையில் நடவடிக்கைகளை அமுல்படுத்த வேண்டியது உடனடி தேவை என்பதை உங்களுக்கு வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கிறேன்.

ad

ad