20 டிச., 2014


பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 505 ரன்களை குவித்து ஆட்டமிழந்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் கப்பா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முரளிவிஜயின் சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 408 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது. அறிமுக பவுலர் ஹாஸ்லேவுட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.  நேற்றைய ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 221 ரன்கள் சேர்த்திருந்தது. ஸ்டீவன் சுமித் 65 ரன்களுடனும் (88 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), மிட்செல் மார்ஷ் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 


இந்த நிலையில், இன்று  மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா அணியில்  மேற்கொண்டு நான்கு ரன்களை சேர்த்த மார்ஷ்(11), இஷாந்த் சர்மா பந்தில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த பிராடு ஹேடீன் 6 ரன்களில் ஆரோன் பந்தில் வெளியேறினார். சதம் அடித்த ஸ்மித்


ஆனால், மறுமுனையில் நங்கூரம் போல் நிலைத்து நின்று எந்த சிரமும் இன்றி ரன்களை சேகரித்த ஸ்மித், கேப்டனாக களம் இறங்கிய முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.  சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த 6வது சதம் இதுவாகும். அவருக்கு பக்கபலமாக அதிரடி காட்டிய ஜான்சன் அரைசதம் அடித்து அசத்தினார். சர்வதேச அரங்கில் அவரது 10 வது அரைசதம் இதுவாகும்.


இந்த ஜோடியை ஒரு வழியாக இஷாந்த் சர்மா பிரித்தார். மிட்சல் ஜான்சன் ஆஃப் சைடில் டிரைவ் செய்ய முயன்ற போது அது பேட்டின் விளிம்பில் பட்டு தோனியின் கைகளில் தஞ்சம் புகுந்தது. ஸ்மித் -ஜான்சன் ஜோடி 148 ரன்கள் குவித்து குறிப்பிடத்தக்கது. இதைதொடர்ந்து சிறிது நேரத்தில் கேப்டன் ஸ்மித்தும் 133 ரன்களில் இஷாந்த சர்மா பந்தில் போல்டு ஆனார். 

அப்போது ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 398 ரன்களை குவித்து இருந்தது.  இதைதொடர்ந்து களம் இறங்கிய ஸ்டார்க்க்கும் லயனும் ஓரளவு சிறப்பாக ஆட இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை ஆஸ்திரேலிய கடந்தது. லயன் 23 ரன்களில் ஆரோன் பந்தில் வெளியேறினார். கடைசி விக்கெட்டுக்க்கு களம் புகுந்த ஹேசல்வுட்டும் சளைக்காமல் ஆடினார். இறுதியில் அரைசதம் அடித்த ஸ்டார்க்க் (53 ரன்கள்) அஷ்வின் சுழலில் சிக்கினார்.  ஹேசல்வுட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 32 ரன்களுடன்  களத்தில் இருந்தார்.   இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 109.4 ஓவர்களில் 505 ரன்களை குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் இந்திய அணியை விட 96 ரன்கள் முன்னிலை பெற்றது. 

இதைதொடர்ந்து, இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் களம் இறங்கி ஆடி வருகிறது.  சற்று முன்பு வரை இந்தியா விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்துள்ளது.  ஆஸ்திரேலியாவை விட இந்திய இன்னும் 63 ரன்கள் பின் தங்கியுள்ளது. முரளி விஜய் 21 ரன்களும் , தவான் 11 ரன்களும் எடுத்து ஆடிவருகின்றனர்.