20 டிச., 2014

எதிர்காலத்தில் மாற்றங்கள் வருவது நிச்சயமே : அடித்துக்கூறுகிறார் முதலமைச்சர் 
நாங்கள்  உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கொன்றைத் திறக்கக் கூட ஆளுநர் அனுமதிக்கிறார் இல்லை. ஆனால் தன்னுடைய  பெயரில் நம்பிக்கை பொறுப்பு வங்கிக் கணக்கு  ஒன்றை செயற்படுத்தி வருகின்றார், என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
 
முழங்காவில் கற்பகா கணனிப் பயிற்சி நிலையத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
மேலும் அவர் உரையாற்றுகையில்,
 
நாங்களும் தனிப்பட்ட கணக்குகளைத் திறக்கலாம். ஆனால் அதிக பணம் குறித்த கணக்குகளுக்கு வந்து சேர்ந்தால்  அலுவலர்கள் உடனேயே கொழும்பிலிருந்து வந்துவிடுவார்கள்.
 
 
  இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? யார் அனுப்பினார்கள்?, இது இங்கிருந்து சென்ற கறுப்புப் பணம் வெள்ளைப் 
பணமாக மாற்றம் பெற்றதா? தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கள் அனுப்பிய பணமா? புலிகளின் பணமா? 
பூனையின் பணமா? என்றெல்லாம் ஆராயத் தலைப்படுவார்கள். 
 
 
இப்பொழுது வெளிநாட்டுப் பணத்தை நாங்களே நேரடியாக மக்கள் நலன் கருதிப் பாவித்து வருகின்றோம். அதாவது வெளிநாட்டிலுள்ள எமது உறவுகள் தாமாகவே நேரடியாக எமக்கு உதவிசெய்து வருகின்றனர். 
 
மேலும் இந்தப் பிரதேசத்துக்கு கணணிப் பயிற்சி நிலையம் அமைக்கப்படுவது சாலப்பொருந்துமே. எமது மக்கள் கணனிப் பயிற்சி பெறுவது ஏதோ ஒரு சொகுசுச் செயல் என்ற காலம்போய், கட்டாயத் தேவையாகி வருகின்றது.
 
நான் சுமார் 10, 12 வருடங்களுக்கு முன்னர் கணனிப் பயிற்சி எதுவும்  பெறாதவனாகத்தான் இருந்தேன். எம்மைச் சுற்றி உலகம் மிக வேகமாகச்  செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. நாம் அதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் செயற்பட மறுத்தால் நாம் புறக்கணிக்கப்படுவதோடு பின்னடைவுகளுக்கும் உள்ளாவோம்.
 
 
எனினும் மாற்றங்கள் வரப்போவது நிச்சயமே. எனவே நாங்கள் கட்டாயமாக முன்னேற வேண்டிய ஒரு கால கட்டத்தில் வாழ்கின்றோம். எம்மைச் சுற்றிப் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. 
 
 
கணனியானது அந்த மாற்றங்களை எல்லாம் உடனுக்குடன் எமக்குத் தெரிவிக்கும் வல்லமை வாய்ந்தது. இந்தக் கணனிப் பயிற்சி நிலையம் இங்குள்ள மக்களுக்கு, பயனழிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=651823741020206263#sthash.Y72S350H.dpuf