நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்கள் கடக்கும் முன்னர் மூன்று முக்கிய ஊழல் மோசடிகள் பற்றி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது
செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசிலிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
தற்போது வெளிநாட்டில் தங்கியிருக்கும் பசில் ராஜபக்சவை அழைத்து விசாரணை நடத்துவது அவ்வளவு சிரமமான விடயமல்ல என குறித்த அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச பாரியளவில் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊழல், மோசடிகள் தொடர்பில் பசில் ராஜபக்சவிடம் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நடந்த மிகப் பெரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்த ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிதி குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் விசாரணை நடத்த தயாராகி வருகிறது.
எதிர்காலத்தில் பசில் ராஜபக்சவிடம் இது சம்பந்தமாக விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட அவரது குடும்பத்தினர் அனைவருக்கு எதிராகவும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் பசில் ராஜபக்ச அவர்களில் ஒரு நபர் மாத்திரமே.
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து ஓரிரு நாட்களுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, தான் குடியுரிமை பெற்றுள்ள அமெரிக்காவுக்கு தனது மனைவியுடன் தப்பிச் சென்றார்.
அந்த நிலையில், ராஜபக்ச அரசாங்கத்தில் நடத்த சகல ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களை பசில் மீது சுமத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன