11 ஜூலை, 2015

தீவிரவாத தாக்குதலில் தமிழக வீரர் மரணம்: குடும்பத்தாருக்கு ஜெ. ரூ.10 லட்சம் நிதி

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கியதில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் அனிஷின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஜம்மு காஷ்மீர் மாநிலம், 62 ராஷ்டிரிய ரைபில்ஸ்  படைப் பிரிவில் துப்பாக்கியாளராகபணி புரிந்து வந்த, கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், சித்திரம்கோடு கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகன் அனிஷ் 8.7.2015 அன்று தெற்கு காஷ்மீர், ஷோபியான் மாவட்டம், பாராபக் எல்லை பகுதி அருகே தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு வீரமரணம் எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். வீர மரணம் எய்திய அனிஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். வீர மரணம் அடைந்த அனிஷின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.