11 ஜூலை, 2015


சொந்த மண்ணில் சம்பூர் மக்கள் உடனே மீளக்குடியமர முடியும் : தடை மனுவைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
சம்பூரில் மக்களின் மீள்குடியமர்வுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


இதன் மூலம் சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வர்களது சொந்த மண்ணில் உடனடியாக மீளக்குடியமர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் ஆகியோரினால் சம்பூர் மக்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்ட வழக்கிலேயே நீதிமன்றம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

சம்ப+ரில் முதலீட்டுச் சபைக்கு வழங்கிய காணி இரத்துச் செய்து,ஜனாதிபதி மைத்திரிபாலவினால் வர்த்தமானிப் பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிராக தனியார் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

தனியார் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து ஜனாதிபதியின் வரத்தமானி அறிவித்தல் சரியானது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மகிந்த ஆட்சிக் காலத்தில் போர் காரணமாக 2006ஆம் ஆண்டு சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.

போர் முடிந்த பின்னரும்,ஆயிரத்து 55 ஏக்கர் நிலப்பரப்பு மக்கள் மீள்குடியமர்வுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.அதில் 237 ஏக்கரைக் கடற்படையினர் தமது பயிற்சி முகாமுக்காகக் கைப்பற்றி வைத்திருந்தனர்.எஞ்சிய 818 ஏக்கரும்,முதலீட்டுச் சபையினால் 2012ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மைத்திரிபால தலைமையிலான புதிய ஆட்சி அமைந்த பின்னர்,சம்பூர் மக்களின் நிலம் விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமையக் கடற்படையினர் கைப்பற்றிய 237 ஏக்கர் நிலப் பரப்புக்கு பதிலாக அவர்களுக்கு வேறு இடத்தில் பயிற்சி முகாம் அமைக்க புதிய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.இதனையடுத்து குறித்த நிலப் பரப்பிலிருந்து கடற்படையினர் வெளியேறத் தொடங்கியிருந்தனர்.

818 ஏக்கர் காணி முதலீட்டுச் சபைக்கு வழங்கியதை இரத்துச் செய்து ஜனாதிபதி மைத்திரிபால கடந்த மே மாதம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து,சம்பூர் மக்கள் குறித்த காணிகளில் மீளக்குடியமர முயற்சித்திருந்தனர்.

திடீரென தனியார் நிறுவனம் ஒன்று முதலீட்டுச் சபையின் குறித்த காணியில் முதலீடு செய்துள்ளதாகவும்,எனவே ஜனாதிபதியின் வர்த்தமானி  அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டும் எனவும்,மக்கள் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படக்கூடாது எனவும் தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

குறித்த வழக்கில் உடனடியாக இடைக்காலத் தடை வழங்கப்பட்டிருந்தது.பின்னர்,இடைக்காலத் தடை நீக்கப்பட்டிருந்தாலும் வழக்குத் தொடர்ந்து இடம்பெற்றது.

குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்;கப்பட்டது.அதன் பிரகாரம் தனியார் நிறுவனத்தின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் சம்பூர் மக்கள் குறித்த காணியில் குடியமர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சுமந்திரன்  தெரிவித்தார்.