13 அக்., 2015

மென்டோசா ‘ஹாட்ரிக்’: கோல் மழையால் முதல் வெற்றியை ருசித்தது சென்னை

கோவா அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்று நடந்த 9வது லீக் போட்டியில், கோஹ்லி சக உரிமையாளராக உள்ள கோவா அணியும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், டோனி சக உரிமையாளர்களாக இருக்கும் சென்னை அணியும் மோதின.
இதில் தொடக்கத்தில் இருந்து சென்னை அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இந்த ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் சென்னை அணியின் மென்டோசா முதல் கோல் அடித்தார்.
பின்னர் 43வது நிமிடத்தில் சென்னை அணியின் ஜெயேஷ் ரானே ‘பாஸ்’ செய்த பந்தில் எலானோ கோலடித்து அசத்தினார்.
இதற்கு கோவா அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் சென்னை அணி 2–0 என முன்னிலை வகித்தது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது பாதியின் 63வது நிமிடத்தில் எலானோ ‘பாஸ்’ செய்த பந்தில் மென்டோசா 2வது கோல் அடித்தார்.
அதே போல் மென்டோசா, 75வது நிமிடத்தில் புரூனோ பெலிசாரி ‘பாஸ்’ செய்த பந்தில் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார்.
இதன் மூலம் அவர் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார்.
இதற்கு முன், கடந்த ஆண்டு நடந்த தொடரில் புனே அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை அணியின் ஆன்ட்ரி மோரிட்ஸ் (பிரேசில்) இச்சாதனையை படைத்தார்.
கடைசி நிமிடம் வரை போராடிய கோவா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர இறுதியில் சென்னை அணி 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை.
chennai_win_004