புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2015

'வாட்ஸ்-அப்' யுவராஜ் கதை!

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் அக்டோபர் 11ஆம் தேதி (நேற்று) நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சரண் அடைவதாக ஏற்கெனவே வாட்ஸ்அப் மூலம் தெரிவித்து இருந்தார். இதனால் உஷார் அடைந்த போலீஸார், அன்றைய தினம் நாமக்கல் டி.எஸ்.பி ராஜேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

சேலம்- மதுரை பைபாஸ் சாலையில் உள்ள முதலைப்பட்டியில் சோதனை சாவடி அமைத்து அனைத்து வாகனங்களையும் கண்காணித்தனர். சேலம் ரோடு, திருச்செங்கோடு ரோடு ஆகியவற்றிலும் வாகன சேதனை நடத்தினர். சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு
வருபவர்களை போலீஸார் எக்ஸ்ரே கண்களுடன் கண்காணித்து வந்தனர். இந்தப் பணியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர். 

இதற்கிடையில் யுவராஜ் சரண் அடையப்போவதாக வந்த தகவலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் சி.பி.சி.ஐ.டி அலுவலகம் முன்பு குவியத்தொடங்கினர். அவர்களை போலீஸார் கலைந்து போகுமாறு அறிவுறுத்தினர். காலை 9.30 மணியளவில் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் யுவராஜ் வந்துவிட்டதாக தகவல் பரவியது. உடனடியாக அங்கு போலீஸார் விரைந்தனர். ஆனால் அவர் வரவில்லை. இவ்வாறு அடிக்கடி அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சமயத்தில் போலீஸ் அதிகாரிகள் சிலர் ஒரே ஜீப்பில் அங்கு அவசரமாக வந்தனர். காலை 10 மணியளவில் கரூரைச் சேர்ந்த வக்கீல் ஆனந்த், 'போலீஸ் கெடுபிடியால் யுவராஜ் சரண்டர் ஆவதில் காலதாமதம் ஏற்படுகிறது' என்று தெரிவித்தார். இதன்பிறகு மீண்டும் அலுவலகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான போலீஸார் அங்கு சென்றனர். அப்போது அலுவலக வாயில் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த சமயத்தில் மின்னல் வேகத்தில் ஒரு பைக் அலுவலகம் வாயில் அருகே வந்தது. அதன் பின்னால் கருப்பு பனியன், கண்ணாடி, சிவப்பு தொப்பி, கழுத்தில் துண்டு, நீலநிற லுங்கி அணிந்துக் கொண்டு யுவராஜ் வந்து இறங்கினார். இதை சற்றும் போலீஸார் எதிர்பார்க்கவில்லை.

யுவராஜ் வந்ததும் அவரது ஆதரவாளர்கள் வாழ்க கோஷமிட்டனர். ஆதரவாளர்களை போலீஸார் தடுத்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தொப்பியை கழற்றி வீசிய யுவராஜ், கருப்பு பேண்ட், வெள்ளை சட்டையுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துவிட்டு வக்கீலுடன் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்குள் புகுந்தார். அப்போது இன்ஸ்பெக்டர் பிருந்தாவிடம் சரண்டர் கடிதத்தை ஒப்படைத்தார். பிறகு தரையில் அமர்ந்து போலீஸார் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார். போலீஸாரின் பல கேள்விக்குப் பதில் அளிக்காமல் அமைதியாகவே இருந்துள்ளார் யுவராஜ்.

யுவராஜ் சரண்டராகுவதற்கு முன்பு அவரை கைது செய்ய வேண்டும் என்று திட்டமிட்ட போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்தது தனிக்கதை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். 

சி.பி.சி.ஐ.டி அலுவலகம் அருகில் உள்ள பொன்நகரில் இருசக்கர வாகன ஷோரூமுக்கு காலை 9 மணியளவிலேயே யுவராஜ் வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தப் பகுதியில் பதுங்கி இருந்துக்கொண்டு போலீஸாரின் அனைத்து நடவடிக்கைகளையும் அவர் பார்த்துக்கொண்டே இருந்துள்ளார். வழக்கமான கெட்டப்பில் இல்லாமல் தொப்பி, பனியன், லுங்கி என மாறுவேடத்தில் அவர் இருந்ததால் போலீஸார் எளிதில் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுவே யுவராஜுக்கு சாதகமாகினால் அதே கெட்டப்பில் சி.பி.சி.ஐ.டி அலுவலகம் வரை வந்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
 
சரண்டரான யுவராஜை போலீஸ் காவலில் எடுக்க திட்டமிட்ட சி.பி.சி.ஐ.டி போலீஸார், அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். யுவராஜை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் காவலில் எடுக்கப்படும் யுவராஜிடம் கோகுல்ராஜ் கொலை வழக்கு, விஷ்ணுபிரியா தற்கொலை, தலைமறைவாக இருந்த இடங்கள், யார் யார் அடைக்கலம் கொடுத்தார்கள், வாட்ஸ்அப் அனுப்ப உதவியவர்கள் யார் உள்ளிட்ட கேள்விகளை கேட்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "யுவராஜிக்கு உதவி செய்தவர்களை நாங்கள் நெருங்கிவிட்டோம். அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தியதில் முக்கியமான சில தடயங்கள் எங்களிடம் சிக்கின. அவரது டிரைவர் அருண் தலைமறைவாக இருக்கும் இடமும் கண்டறியப்பட்டுவிட்டது. இவ்வாறு பலவகையில் யுவராஜுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் தப்பிக்க வழியில்லாமல் அவர் திணறினார். இதனால் சரண்டராவதைத் தவிர வேறுவழியின்றி அவர் தவித்தார். இதற்காகவே அவர், சரண்டராகும் நேரம், தேதி ஆகியவற்றையும் முன்கூட்டியே அறிவித்தார். தலைமறைவு காலத்தில் எவ்வளவு பப்ளிசிட்டி செய்ய முடியுமா அதை அவர் செய்துவிட்டார். இதற்குப் பிறகும் காலதாமதத்தினால் தனக்கு சிக்கல் ஏற்படும் என்று கருதிய அவர் சரண்டராகிவிட்டார்.
அவர் வெளியிட்ட ஆடியோ மெசேஜில் விஷ்ணுபிரியா நல்லவர் என்று குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால் அவரிடமே யுவராஜ் சரண்டாகி இருந்தால், அவர் தற்கொலை செய்து இருக்கமாட்டார். யுவராஜ் தலைமறைவாக இருந்தால்தான் விஷ்ணுபிரியா தற்கொலை செய்துள்ளார். இதனால் அவரது சாவுக்கும் யுவராஜ் ஒரு காரணம் எனலாம். யுவராஜுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் பெரும்பாலும் வடமாநிலங்களில் தொழிலதிபர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் விவரங்களைச் சேகரித்துவிட்டோம். அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தி அடைக்கலம் கொடுத்தது தெரியவந்தால் அவர்களும் கைது செய்யப்படுவார்கள். தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் யுவராஜ் பல்வேறு தவறுகளைச் செய்துள்ளார். அதுவும் இப்போது அவருக்கு மட்டுமல்லாமல் அவருக்கு உதவியவர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது. தவறுக்கு மேல் தவறு செய்த யுவராஜை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பதே காவல்துறையின் கடமை" என்றார்.

ad

ad