13 அக்., 2015

கனடிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களின் பட்டியல்: வெற்றி பெறுவது யார்?


கனடா நாட்டில் எதிர்வரும் அக்டோபர் 19ம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் இலங்கையில் பிறந்து கனடாவில் குடியேறியுள்ள 5 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கனடா நாட்டின் அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில், அக்டோபர் 19ம் திகதி நடைபெறள்ள நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான அனல் பறக்கம் பிரச்சாரங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த பொது தேர்தலில் கனடா நாட்டின் முக்கிய 3 கட்சிகளில் இலங்கையில் பிறந்து கனடாவில் குடியேறியுள்ள 5 தமிழ் வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வருகின்றனர்.
1. ராதிகா சிற்சபைஈசன் என்பவர் இலங்கையில் பிறந்து 5 வயதாக இருந்தபோது தனது குடும்பத்துடன் கனடாவில் உள்ள றொரண்றோ மாகாணத்தில் குடியேறினார்.
பல்வேறு சமுதாயப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ராதிகா, கடந்த 2012ம் ஆண்டில் இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை முன்னெடுத்து காட்டியதற்காக “Personality of the Year” என்ற விருதையும் வென்றுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழ் பூர்வீகம் கொண்ட முதல் கனடிய குடிமகளாக தேசிய ஜனநாயக கட்சியில் சேர்ந்து Scarborough–Rouge River ஆசனத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
தற்போது, மீண்டும் தேசிய ஜனநாயக கட்சி சார்பில் Scarborough North ஆசனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார்.
2. ஹரி ஆனந்தசங்கரி என்ற இலங்கை தமிழர் கனடா நாடு மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ்பெற்ற மனித உரிமைகள் வழக்கறிஞர் ஆவர். கனடாவில் குடியுரிமை பெற்றுள்ள இவர், அங்குள்ள தமிழ் அமைப்புகள் பலவற்றில் சில உயரிய பொறுப்புகளை வகித்தவர்.
தற்போது கனடாவின் சுதந்திர கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளராக Scarborough Rouge-Park ஆசனத்தில் போட்டியிட்டு வருகிறார்.
3. Rev.KM சாந்திகுமார் என்பவர் இலங்கையில் பிறந்து இந்தியாவில் கல்வி பயின்றவர். 30 வருடங்களுக்கு முன்னர் கனடாவில் குடியேறிய சாந்திகுமார், அங்குள்ள தொலைதொடர்பு துறையில் பணியாற்றி வருகிறார்.
தற்போது, தேசிய ஜனநாயக கட்சியில் சேர்ந்துள்ள அவர், Scarborough Rouge-Park ஆசனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார்.
4. ரோஷன் நல்லரத்தினம் என்பவர் இலங்கையில் பிறந்து இந்தியாவில் வாழ்ந்தவர். கடந்த 2005ம் ஆண்டில் கனடாவில் குடியேறிய அவர், சட்டம் மற்றும் தொழில்முறை அமலாக்கல் துறையில் பணியாற்றி வருகிறார்.
தற்போது ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில் சேர்ந்துள்ள ரோஷன் Scarborough Southwest ஆசனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
நாடாளுமன்ற பொது தேர்தல் தொடர்பான முன்கூட்டிய வாக்கெடுப்பு நடந்து வரும் நிலையில், இந்த தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்து கணிப்புகளும் வெளியாகிவருகின்றன.
இன்று காலை வரை வந்த கருத்து கணிப்புகளின் அடிப்படையில், எதிர்க்கட்சியான சுதந்திர கட்சி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், ஆளுங்கட்சியான கன்சேர்வேட்டிவ் கட்சி குறைந்த வாக்குகள் எண்ணிக்கையில் மட்டுமே பின் தங்கி உள்ளதால் இறுதி தேர்தலில் அதிரடி மாற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
5. செந்தி செல்லையா மார்க்கம் - தோர்ன் ஹில் தொகுதியில், கனடிய தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான  திரு.செந்தி செல்லையா NDP கட்சி சார்பில் போட்டியிடுகிறார் NDP கட்சி ஆட்சி அமைக்குமானால் C - 51 bill ஐ உடனடியாக இல்லாது ஒழிக்க, தமது கட்சி முன்வந்துள்ளதாக செந்தி செல்லையா உறுதி அளித்துள்ளார்.
மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் அஞ்சல் தலையை வெளியிட்டு அதன்மூலம் பெறப்பட்ட நிதியை ஈழத்திற்கு அனுப்பியிருந்தவர்.

கனடாவின் குடிவரவாளர்களில் சிறந்த 75 நபர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.