புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2015

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் தொடக்கத்தை முன்னிட்டு 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்: வேல்முருகன்




தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் தொடங்குவதை முன்னிட்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும்10 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த அனைத்து கைதிகளையும்  தமிழக முதல்வர் அவர்கள் விடுதலை செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சிகள் வேண்டுகோள்!!

ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரை இன்று நான் சந்தித்து பேசினேன். அப்பொழுது 3 தமிழரின் மரண தண்டனையை குறைக்க வலியுறுத்தி சட்டசபையில் தமிழக முதல்வர் முன்மொழிந்த தீர்மானம் குறித்தும், 7 தமிழரை விடுதலை செய்வது குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்தது; மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது உள்ளிட்ட இடைவிடாத முயற்சிகளுக்காக முதல்வருக்காக கண்ணீருடன் நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

அதேபோல் கட்சி பேதம் இல்லாமல் அனைவரும் ஓரணியில் தங்களுக்காக குரல் கொடுத்ததற்கு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர். 

தற்போதைய நிலையில் 7 தமிழர்களை 432/433 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவுகளில் விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும் என்று டிசம்பர் 2- ந் தேதியன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு கூறுகிறது. ஆனால் 3 தமிழரின் மரண தண்டனை குறைப்பையே எதிர்த்து சீராய்வு மனு (Review Petition) தாக்கல் செய்த காங்கிரஸ் அரசும், குறைதீர்ப்பு மனு (Curative Petition) தாக்கல் செய்த ஆளும் பாரதிய ஜனதா அரசும் தற்போது 7 தமிழர் விடுதலைக்கான கோரிக்கையை தமிழக அரசு முன்வைத்தாலும் அதை ஏற்குமா? என்பது கேள்விக்குறியே.

தமிழக உணர்வுகளையும் சிறையில்வாடும் தமிழர்களின் பக்கம் இருக்கும் நியாயத்தையும் சிறிதளவேனும் புரிந்து கொள்ளும் நிலையில் மத்திய அரசு இல்லை என்பது தெள்ளத் தெளிவான ஒன்றாக உள்ளது.  ஆகையால் டிசம்பர் 2 ஆம் தேதி வெளிவந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி இவர்களை விடுதலை செய்ய முட்டுக்கட்டை விழுந்துள்ளது என்பது உண்மையே;

அதே தீர்ப்பில் அரசியலமைப்பின் 161, 72 ஆகிய பிரிவுகள் மாநில ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் கட்டற்ற அதிகாரங்கள் வழங்கியிருப்பதையும் அந்தத் தீர்ப்பு சுட்டி காட்டி இருக்கின்றது.

ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிய புலனாய்வு அதிகாரி வீ.தியாகராஜன் தன் தவற்றை உணர்ந்து அவர்கள் நிரபராதி என்று கூறுவதையும், தூக்கு தண்டனையை உறுதி செய்த நீதியரசர் கே.டி.தாமஸ் இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறுவதையும் நீதிமன்றங்களில் ஆய்வு செய்யவோ, விசாரிக்கவோ நம் சட்ட புத்தகத்தில் இடமில்லை.

இப்படி ஒரு மாறும் சூழலில் பயன்படவே நம் அரசியல் அமைப்பின் முன்னோடிகள் 161, 72 ஆகிய மன்னிக்கும்/தண்டனை குறைக்கும்/ரத்து செய்யும் அதிகாரங்களை உருவாக்கினர்.   ஆகவே இவர்களின் நன்னடத்தை, 25 ஆண்டுகால சிறைவாசம், காவல்துறை அதிகாரியே நிரபராதிகள் என்று முன்வைக்கும் சட்டப்பூர்வமான வாக்குமூலம், இவர்களின் குற்றத் தன்மையின் மேல் எழுந்துள்ள சந்தேகம் உள்ளிடவைகளைக் கணக்கில்கொண்டு; அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரை தமிழக வாழ்வுரிமைக் கட்சி அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

தமிழினத்தின் இழந்த வாழ்வுரிமைகளை மீட்டு, இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழருக்காக ஆறுதலாக உறுதிமிக்க தீர்மானங்களை தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றி, 7 தமிழர் விடுதலையில் சட்டப் போராட்டங்களை உறுதியோடு நடத்தி உலகத் தமிழினத்துக்கு உறுதுணையாக இருக்கும் தமிழக முதல்வர்  17-1-2016 -ல் தொடங்க இருக்கும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் தொடக்கத்தை முன்னிட்டு 7 தமிழர் விடுதலைக்காக அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்; 10 ஆண்டுகாலம் கைதிகளாக இருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.’’என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ad

ad