புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2015

தமிழ் அரசுக் கட்சிக்கு அழைப்பு இல்லை – நிபுணர் குழுவில் இடம்பெற்றது எப்படி?

அரசியல் தீர்வுத் திட்டத்தை உருவாக்குவதற்கு தமிழ் மக்கள் பேரவை உருவாக்கியுள்ள நிபுணர் குழுவில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் இருவர் இடம்பெற்றுள்ள
போதிலும், இந்தப் பேரவையில் இணைந்து கொள்ள தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தின் முடிவில், நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், அரசியல் தீர்வுத் திட்டத்தை உருவாக்க 15 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிபுணர் குழுவில் பேரவையில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளால், தலா இருவர் முன்மொழியப்பட்டுள்ளதாக இணைத் தலைவர் பி.லக்ஸ்மன் அறிவித்திருந்தார்.
அதேவேளை, தமிழ் அரசுக் கட்சிக்கு பேரவையில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டதா என்று எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், தாம் அந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறியிருந்தார்.
அப்போது, கட்சி தலைமையின் அனுமதியுடன் தான் பேரவையில் பங்கேற்கிறீர்களா என்று, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பேராசிரியர் சிற்றம்பலத்தை பதிலளிக்க விடாமல், குறுக்கீடு செய்த சுரேஸ் பிரேமச்சந்திரன், அதை தமிழ் அரசுக் கட்சியிடம் போய் கேளுங்கள் என்று சீறியிருந்தார்.
இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா,
“இந்த அமைப்பு உருவாக்கப்படும் போது எமக்கு அறிவிக்கவில்லை. அழைப்புக்களும் விடுக்கப்படவில்லை.
அதேபோன்று தமிழ் அரசு கட்சியின் மூத்த உபதலைவரான பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து எமக்கு எவ்விதமான அறிவித்தல்களையும் விடுக்கவில்லை. அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை.
தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பு வரைவு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்தும் பொதுமக்கள் சார்ந்த விடயங்களையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இரண்டு அமர்வுகளே இடம்பெற்றிருக்கின்றன.
அவ்வாறான நிலையில் அவ்வமைப்பின் செயற்பாடுகளை நாம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்நிலையில் நாம் அந்த அமைப்பு தொடர்பாக வீணான விமர்சனங்களை வெளிப்படுத்த விரும்பவில்லை. பொதுமக்கள் சார்ந்து உண்மையான ஜனநாயக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் அதனை நாம் முழுமையாக வரவேற்கிறோம்.
அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முழுமையான அனைவருமே உரித்தும் உடையவர்கள்.
எனினும் தனிப்பட்டவர்களின் சுயவிருப்பு வெறுப்பின் அடிப்படையில் மக்களை வீணாக குழப்பும் செயற்பாடுகளை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதற்கு ஒருபோதும் இடமளிக்கவும் போவதில்லை.
மேலும் அரசியல் அமைப்பு சார்ந்த விடயங்கள் உட்பட பேரவை முன்னெடுக்கும் விடயங்கள் நாம் மக்கள் சார்ந்து முன்னெடுக்கும் விடயங்களுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றன.
ஆகவே அவ்விடயங்களில் அவர்களையும் இணைத்துக் கொண்டு ஒருமித்துச் செயற்படுவதா? இல்லையா? என்பது குறித்து நாம் தீர்மானிக்கவில்லை.
விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் உட்பட்டோர் விரைவில் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம். அதில் பேரவை குறித்த தீர்மானத்தை எடுக்கவுள்ளோம்” என்று தெரிவித்தார்.

ad

ad