புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2015

பொறுப்புக்கூறலுக்கு மார்ச் மாதத்துக்குள் விசேட நீதிமன்றம்!

இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கான உள்நாட்டு விசேட
நீதிமன்றப் பொறிமுறை எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் நிறுவுவதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துள்ளது.
அத்துடன், குறித்த விசேட நீதிமன்றப் பொறிமுறையில் சர்வதேச நீதிமன்றங்களில் கடமையாற்றிய இலங்கை நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என அரச தரப்புப் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு விசேட நீதிமன்றம் அமைப்பதற்கான சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இறுதிப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில், பொறுப்புக்கூறல் செயல்முறைக்கு உள்ளக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படவேண்டுமென இலங்கையின் அனுசரணையுடன் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கடந்த செப்ரம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக, விசேட நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் கொண்ட குழு ஆராய்ந்து வருகின்றது. இதன் முதலாவது நடவடிக்கையாக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக, விசேட நீதிமன்றம் அமைப்பதற்கான விசேட சட்ட வரைவு தயாரிக்கப்பட்டது.
இந்த விசேட சட்ட வரைவு விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த விசேட நீதிமன்றுக்கு சர்தேச நீதிமன்றங்களில் கடமையாற்றிய இலங்கை நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.குறித்த பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபையின் அமைர்வுக்கு முன்னர் நிறைவு செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன் குறித்த விசேட நீதிமன்றம் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் சபையின் மார்ச் மாத அமர்வில் அரசு அறிவிக்கவுள்ளது என அந்தப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளக் கூடிய வகையில், இப்போதே செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகப் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்­ டி சில்வா தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அடுத்த கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
போர்க்குற்ற விசாரணைகளை எத்தகைய பொறிமுறையின் ஊடாக கையாள்வது என்பது தொடர்பிலான கலந்தாலோசனைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகும். ஜனவரியில் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் முக்கிய கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு மார்ச் மாதத்தினுள் எவ்வாறு விசாரணைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பாக தீர்வு எட்டப்படும்.
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான பொறிமுறைகள் துரிதமாக கையாளப்பட்டு வருகிறது. யாரையும் திருப்திப்படுத்த பக்கசார்பான நடவடிக்கைகள் எவற்றையும் முன்னெடுக்க முடியாது. பொறுப்புக்கூறல் விவகாரத்தை அரசு சரியாக கையாளும். அத்துடன், எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளக்கூடிய வகையில் இப்போதே செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்” – என்று கூறியுள்ளார்.

ad

ad