14 பிப்., 2016

62.73 கோடியில் புதிய கலைவாணர் அரங்கம்: ஜெ., திறந்து வைத்தார் ( படங்கள் )தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

’’சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இருந்த கலைவாணர் அரங்கம் கடந்த திமுக ஆட்சியில் இடிக்கப்பட்டது என்றும் காலியாக உள்ள அந்த இடத்தில் விரைவிலேயே இந்த அரசு ஒரு பிரம்மாண்டமான கலை அரங்கத்தைக் கட்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தார். அதன்படி, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 1,92,000 சதுர அடி கட்டட பரப்பளவில், 62 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான முறையில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கலைவாணர் அரங்கத்தினை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.nakeeran 

கலைவாணர் அரங்கமானது, மூன்று தளங்களுடன் முழுவதும் குளி ரூட்டப்பட்ட வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கு, கலையரங்கமாகவும், நவீன திரையரங்கமாகவும் பயன்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. அரங்கத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் 1100 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் காணும் வசதியும், மூன்றாவது தளத்தில் நவீன வசதிகளுடன் சுமார் 1300 பேர் அமரக்கூடிய அளவில் பல்நோக்கு அரங்கமும் கட்டப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக மூன்று தளங்களுக்கும் சென்று வர நகரும் படிக்கட்டு வசதியும், மின்தூக்கி வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த அரங்கிற்குத் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில் உயர்சக்தியுள்ள மின்னாக்கி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தப் புதிய கலைவாணர் அரங்கத்தின் தரைத் தளத்தில் அலுவலர்களுக்கான அறைகளும், முதல் தளத்தில் உணவு மையங்களும், இரண்டாம் தளத்தில் விருந்தினர்கள் தங்குவதற்கான அறைகளும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களில் கூட்டரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கலைவாணர் அரங்கத்தின் முன்பாகத் தரைத் தளத்தில் சுமார் 200 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 500 இருசக்கர வாகனங்கள் நிறுத்திடவும், கட்டடத்தின் அடிதளத்தில் சுமார் 50 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 100 இருசக்கர வாகனங்கள் நிறுத்திடவும் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய கலைவாணர் அரங்கத்தில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதால் இங்கு வருகை புரியும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

மேலும், கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்ட பொழுது, அருகில் செயல்பட்டு வந்த மாநில செய்தி நிலைய அலுவலகக் கட்டடமும் இடிக்கப்பட்டது. இதனால் மாநில செய்தி நிலைய அலுவலகம் தற்காலிகமாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் இயங்கி வந்தது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா இதனை கருத்தில் கொண்டு சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மாநில செய்தி நிலையத்திற்கு என தனியே ஒரு அலுவலகம் கட்ட ஆணையிட்டார்.

அதன்படி சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், புதிய கலைவாணர் அரங்கத்திற்கு அருகில் 2 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநில செய்தி நிலையக் கட்டடத்தினை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

மாநில செய்தி நிலைய கட்டடமானது தரை மற்றும் இரண்டு தளங்களுடன், மொத்தம் 17,100 சதுர அடி கட்டட பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மாநில செய்தி நிலையத்தில், நூலகம் அமைக்க தேவையான இடவசதியும், பொதுமக்கள் அமர்ந்து படிக்கக் கூடிய வகையில் தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக் கட்டடத்தில் ஏராளமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதால் இங்கு வருகை புரியும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் உதயச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.’’