14 பிப்., 2016

சட்டமன்ற தேர்தல்: பிரசாரத்துக்கு தயாராகும் நடிகர்-நடிகைகள் அரசியல் கட்சிகள் தீவிரம்

 

நடிகர்-நடிகைகள் தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகிறார்கள். அவர்களை களம் இறக்க அரசியல் கட்சிகள் தீவிரமாகின்றன.

தேர்தல்

தமிழக சட்டமன்றத்துக்கு மே மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்விலும் கூட்டணி அமைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

அ.தி.மு.க., தி.மு.க தலைமையில் இரண்டு அணிகள் மோதுகின்றன. வைகோவும், திருமாவளவனும் கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து இன்னொரு அணியாக நிற்கிறார்கள். விஜயகாந்தை தி.மு.க.வும், பாரதீய ஜனதாவும் இழுக்க முயற்சிக்கின்றன. தேர்தலில் மூன்று முனை போட்டியா? அல்லது நான்கு முனை போட்டி ஏற்படுமா? என்பது விரைவில் தெரியவரும்.

நடிகர்-நடிகைகள்

இந்த மாத இறுதியில் முதல் வேட்பாளர் பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் தேர்தல் பிரசாரத்தை தொடங்க கட்சி தலைவர்கள் தயாராகிறார்கள். இரண்டு மாதங்கள் தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் இருக்கும். பிரசாரத்தில் நடிகர்-நடிகைகளும் குதிக்கிறார்கள். அவர்களுக்கான பிரசார சுற்றுப்பயண நிகழ்ச்சி தயாராகி வருகின்றன.

அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர்கள் ராமராஜன், செந்தில், ஆனந்தராஜ், மனோபாலா, சிங்கமுத்து, வையாபுரி, சரவணன், குண்டு கல்யாணம், தியாகு, அஜய்ரத்னம், பொன்னம்பலம், நடிகைகள் விந்தியா, சி.ஆர்.சரஸ்வதி, குயிலி, வாசுகி, டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், நாஞ்சில் அன்பழகன் ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர்.

நடிகை குஷ்பு

தி.மு.க.வுக்கு நடிகர்கள் வாகை சந்திரசேகர், குமரிமுத்து, வாசுவிக்ரம் ஆகியோர் ஆதரவு திரட்டுகிறார்கள். நடிகர்கள் உதயநிதி, அருள்நிதி ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது.

நடிகைகள் நக்மா, குஷ்பு ஆகியோர் காங்கிரசில் சேர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் அந்த கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றனர்.

பாரதீய ஜனதா 

பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக நடிகர்கள் எஸ்.வி.சேகர், விசு, நடிகை காயத்ரி ரகுராம், டைரக்டர் கஸ்தூரி ராஜா, இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.