14 பிப்., 2016

மலையக பெண்களுக்கு சட்டவிரோத கருக்கலைப்பு

மலையக தோட்டங்களில் பெண்களுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் நடவடிக்கைகள் குறித்து பிரதேச சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தோட்டப்புற பெண்களை இலக்கு வைத்து கருக்கலைப்பு செய்யும் விளம்பர அட்டை ஒன்றை நுவரெலியா கொட்டகலை பிரதேசத்தில் விநியோகித்துள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேரத்ன தெரிவித்துள்ளார்.
மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றின் அனுமதியின்றி பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் சம்பந்தமான அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று கர்ப்பமடைந்த பெண்களை கருக்கலைப்புக்கு உட்படுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
சட்டவிரோத கருக்கலைப்பு மையங்கள் குறித்து தகவல்களை வெளியாகியுள்ள போதிலும் முதல் முறையாக விளம்பரம் செய்து நடத்தி வரும் கருக்கலைப்பு மையம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
தோட்ட தொழிலாளிகள் நடமாடும் இடங்களில் தொலைபேசி இலக்கங்களுடன் இந்த விளம்பரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பிரதேச பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் எந்த பயனும் ஏற்படவில்லை.
பாரியளவில் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுவதால், இது குறித்து பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்க தீர்மானித்தாகவும் தோட்டங்களில் இருப்பவர்கள் மிகவும் அப்பாவிகள் என்பதால், தான் இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் ஜனத் அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி கருக்கலைப்பு நடவடிக்கை காரணமாக சிறுவர் மற்றும் பெண்கள் சுகாதாரத்தை மேம்படுத்தும் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவான அரசசார்பற்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதி தொகையின் அடிப்படையில், மாவட்டத்தின் சிறுவர் மற்றும் பெண்களின் சுகாதாரம் மேன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
25 ஆயிரம் ரூபா முதல் 30 ஆயிரம் ரூபா வரை அறவிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தினரை சட்டத்தின் பிடியில் சிக்க வைத்த போதிலும் அவர்கள் மீண்டும் அந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீதிமன்றம் வழங்கும் தண்டனை போதுமானதாக இல்லை என்ற காரணத்தினாலேயே இவர்கள் மீண்டும், மீண்டும் இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் மருத்துவர் ஜனத் அபேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
மலையகத்தில் மக்கள் தொகையில் வீழ்ச்சியை ஏற்படுத்த பல காலமாக இந்த கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.