14 பிப்., 2016

நாமலை அதிரடியாக கைது செய்ய நடவடிக்கை! வெலிக்கடையில் தயாராகும் மற்றுமொரு அறை

ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கு மற்றும் நிதி மோசடி ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் தரப்பிலிருந்து தகவல் கசிந்துள்ளது.
ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை தொடர்பில் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் அவர் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
தாஜுடீன் கொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நேரடியாக தொடர்புபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நிதி மோசடியில் நாமல் ராஜபக்ஷ நேரடியாக ஈடுபட்டுள்ளமை ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திம்பிரிகஸ்யாய பகுதியில் நாமலுக்கு சொந்தமான உள்ள நிறுவனங்களில் பில்லியன் கணக்கான ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. குறித்த நிறுவனங்களை கொண்டு நடத்த எவ்வாறு பணம் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் நாமல் பொய்யான தகவல்களை வழங்கிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அடுத்த வரும் நாட்களில் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெலிக்கடை சிறையில் யோஷித ராஜபக்ஷ தடுத்து வைக்கப்பட்டுள்ள அறைக்கு பக்கத்திலுள்ள மேலும் பல அறைகள், சிலரை அடைப்பதற்காக ஆயத்தங்கள் செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.