புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 பிப்., 2016

' புலி இசை வெளியீட்டு விழா மன உளைச்சலை தந்தது' - டி.ஆர். வருத்தம்!

'புலி ' பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு பிறகு,  தான் தொடர்ந்து மன உளைச்சலுக்குள்ளானதாக 'போக்கிரிராஜா'
பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய டி. ராஜேந்தர், "கதாநாயகியை தொடாமலேயே 35 வருடங்கள் சினிமாவில் இருந்திருக்கிறேன். இதற்கு  யாராவது விருது தருவார்கள் என்றால் இல்லை. எனக்கு அப்படி விருதும் தேவையில்லை. நான் விருதுக்காக அலைபவனும் அல்ல" எனக் கூறினார்.
ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் பி.டி. செல்வகுமார் தயாரிப்பில் 'போக்கிரி ராஜா' பட பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய  நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர், " 'புலி' பட இசை விழா வெளியீட்டு விழாவுக்கு பிறகு எந்த விழாவில் கலந்து கொள்ளவேண்டாமென்றுதான் இருந்தேன். ஆனால் எனக்கு 'புலி'  என்ற வார்த்தை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஈழத்தமிழர்கள் மீது மிகுந்த பற்று வைத்திருப்பவன். அந்த வகையிலும்' புலி 'எனக்கு பிடிக்கும். இலங்கை தமிழர் விவாகரத்திற்காக எனது பதவியை கூட ராஜினாமா செய்துள்ளேன். அந்தளவுக்கு நான் பிழைக்கத் தெரியாமல் இருந்துள்ளேன். அதனால்தான் 'புலி' 'புலி' என்று தொடர்ச்சியாக பேசினேன். 

அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய பிறகு, யார் யாரெல்லாம் எப்படியெல்லாம் பார்த்தார்கள்,  கிண்டலடித்தார்கள் என்பது அந்த கடவுளுக்குதான் தெரியும். அந்த நிகழ்வுக்கு பின் நான் கடும் மன உளைச்சலுக்குள்ளானேன். அதற்கு பின்னும் பல விழாக்களில் கலந்து கொள்ள என்னை பலர் கூப்பிட்டனர்.  ஆனால் நான்  எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வரவில்லை என்று கூறி விட்டேன்.

இங்கும் ஒரு நண்பனாக மட்டும் வருகிறேன் என்றுதான் சொன்னேன். ஆனால்  'வாலு' படம் பிரச்னையின் போது எனக்கு ஆதரவாக வந்து நின்ற ஒரே இதயம் பி.டி.செல்வக்குமார்தான். கடவுள் நம்பிக்கை, தன்னம்பிக்கை, ஜோதிட நம்பிக்கை மட்டும் இல்லையென்றால் நான் மட்டும் ஆகியிருப்பேன் மொக்கை. இப்படி பேசுவதால்தான் என்னிடம் கொடுத்திருக்கின்றனர் மைக்கை. டி.ராஜேந்தர் எப்படியெல்லாம் அடுக்குவான் என்று உங்களுக்கு தெரியாதா? 

நீ கிண்டல் செய்தால் நானும் நக்கல் செய்வேன். வாழ்க்கையில் யார்தான் கிண்டலுக்குள்ளாகவில்லை. நான் அத்தனை 'புலி'யை அடுக்கினேன்.  'புலி' என்று தலைப்பு வைப்பதற்கே தனி 'தில் ' வேண்டும். அந்த 'தில்' எனக்குள் இருந்தது. அதனால்தான் அந்த சொல் வந்தது. 

வேறு ஒருவர் தயாரித்திருந்த  'வாலு' படத்தை நான் வாங்கி கடன்பட்டு வெளியிட ஏற்பாடு செய்தேன். 'தாறுமாறு 'என்ற பாடலை அந்த தயாரிப்பாளர் எடுத்திருக்கவில்லை.  அந்த பாடலை நான் ஒரு கோடி ரூபாய் செலவில் எடுக்க நினைத்தேன். அந்த சமயத்தில் ஹன்சிஹா, டி.ஆர். அங்கிள் கேட்டாரென்றால் நான் வந்து நடித்து கொடுக்கிறேன் என்று வந்து நடித்தார். ஹன்சிஹா ஒரு குழந்தை மாதிரி. 

நான் அடுத்தவர்களை மாற்ற முற்படுவதை விட என்னை மாற்றிக் கொள்கிறேன். எதுகை மோனை, அடுக்கு மொழி எல்லாமே எனக்குத் தெரியும். கதாநாயகியை தொடாமலேயே 35 வருடங்கள் சினிமாவில் இருந்திருக்கிறேன். இதற்கு  யாராவது விருது தருவார்கள் என்றால் இல்லை. எனக்கு அப்படி விருதும் தேவையில்லை. நான் விருதுக்காக அலைபவனும் அல்ல. அது எனக்கு தேவையும் இல்லை ''என்றார்.