புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 பிப்., 2016

இது அரசியல் சதுரங்க வேட்டை!

மிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் இந்த சூழ்நிலையில்,  அரசியல் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று அனைத்து
தரப்பு  மக்களும் எதிர்பார்த்து விவாதித்து வரும் விஷயம், யாருடன் யார் கூட்டணி சேர்வார்கள் என்பதே. தமிழக அரசியலில் இன்று எந்த ஒரு கட்சியும் தனித்து நின்று வெற்றி பெறுவது என்பது மிகக் கடினம். அப்படி நின்று வெற்றிப்பெற்றாலும்,  அது அரசு அமைவதற்கு தேவையான மெஜாரிட்டியை கொடுக்கும் வெற்றியாக அமையுமா என்பது கேள்விக்குறி. 

இதை கட்சிகளும் தெரிந்து வைத்திருப்பதால்தான்,  தங்களுக்கு சாதகமான வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் கூட்டணிகளை ஏற்படுத்த போராடி கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் மக்கள் நல பிரச்னைகளை கூட ஒத்திவைத்து விட்டு,  கூட்டணிக்கு அச்சாரம் போட ஆயத்தமாகி கொண்டிருக்கும் கட்சிகளே அதிகம்.  

கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகளிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராமல்,  யூகத்தின் அடிப்படையிலேயே கூட்டணி குறித்து  பெரும்பாலான செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. இது மக்களிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியை பலப்படுத்துவதற்கு தேவையான அஸ்திரமாக கருதி, அரசியல் கட்சிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தி,   அந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க  தயாராக காத்திருக்கின்றன. இதைதான் அரசியல் விளையாட்டு என்போம். 

இங்கேதான் எவரும் தெளிவான முடிவுக்கு வரமுடியாமல், யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்ற ஒருவித விவாதத்தை பொதுவில் ஏற்படுத்தி, திரைக்கு பின்னால் கூட்டணி குறித்த அனைத்துவிதமான ஏற்பாடுகளையும் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ் , பாஜக, பாமக மற்றும் இதர கட்சிகள் சிறப்பாக நடத்தி கொண்டுதான் இருக்கின்றன. கூட்டணி பேரம் முடியும் வரை தங்களுக்கு எதிராக,  வலுவான கூட்டணி அமைந்து விடக்கூடாது என்பதிலும் அரசியல் கட்சிகள் தெளிவாக இருக்கின்றன.

அதன் விளைவாகவே கடந்த சில வாரங்களாக கசியும் தேமுதிக, பாமக, பாஜக போன்ற கட்சிகளின் பெயரில் வந்த தொகுதி ஒப்பந்தம் குறித்த செய்தி. இது யார் மூலமாக வந்தது என்பது தெரியவில்லை. ஆனால் இதை வெளியிட்டது ஒரு ஆங்கில நாளிதழ். தேமுதிக இதை மறுக்கவில்லை என்றாலும், பாமகவின் அன்புமணி கடுமையாக மறுத்துள்ளார். இதிலிருந்தே நமக்கு ஒரு விஷயம் தெளிவாக புரியும். தேமுதிகவை முன்னிலைப்படுத்துவதன் மூலம்,  திமுக - தேமுதிக கூட்டணி ஏற்பட்டுவிடாமல் மிகவும் நேர்த்தியாக யாரோ காய் நகர்த்தியுள்ளது.
அதேபோல்தான் வைகோ ஒருங்கிணைப்பாளராக செயல்படும் மக்கள் நலன் கூட்டணியில் தேமுதிக இணைந்துவிடக்கூடாது என்பதற்காக அது,  அதிமுக ஆதரவு கூட்டணி என்ற திடீர் செய்தி. அதுவரை விஜயகாந்த் இணைய தயாராக இருந்திருந்தாலும், இந்த செய்திக்கு பிறகு தயங்கிருப்பார் என்பதே உண்மை. ஏனென்றால் அவர்,  அதிமுக அரசை நீக்க வேண்டும் என்ற வெறியோடு செயல்பட்டு கொண்டிருக்கிறார். இந்த தருணத்தில் மக்கள் நலன் கூட்டணியில் சேர்ந்து, பின்னர் அவர்கள் திடீர் என்று அதிமுக பக்கம் சாய்ந்து விட்டால் அதோடு தேமுதிகவின் நிலைமை மோசமாகிவிடும் என்பதை உணராமலும் இல்லை விஜயகாந்த். ஆக இது திட்டமிட்டு யாரோ ஒருவரால் கசியவிடப்பட்டசெய்தி.

இது ஒருபுறம் இருக்க,  சமீபத்தில் பாஜகவின் சுப்ரமணியசாமி திமுக - தேமுதிக - பாஜக கூட்டணி சேர்ந்து போட்டியிடும் என்று கூறியதும் ஒரு வித அரசியல் விளையாட்டுதான். இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ,  கூட்டணி குறித்த பேச்சுகளை திசை திருப்பும் செய்திதான். இதனை ஊடகங்கள் நன்கு உணர்ந்திருந்தாலும் பரபரப்பு கருதி விவாதத்தில் இறங்கிவிட்டன அவ்வளவுதான். திமுக பதில் சொல்லவில்லை. எனவே அவர்களும் பாஜக கூட்டணிக்கு தயாராகி விட்டார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது போன்ற விஷயங்களுக்கு திமுக , தேமுதிக போன்ற கட்சிகள் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
அப்படி திமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பியிருந்தால் அதை கடந்த நாடாளுமன்ற தேர்தலிலே செய்திருப்பார்கள். ஆனால் அதில் திமுகவுக்கு விருப்பம் இல்லை. 2001 சட்டமன்ற தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி வைத்து திமுக ஆட்சியை இழந்ததையும் அவர்கள் மறக்காமல் இல்லை.  மருத்துவர் அன்புமணி கூறியது போல்,  தமிழ் நாட்டை பொறுத்தவரை பாஜக சிறிய கட்சிதான். எனவே அவர்கள் தலைமையில் கூட்டணி என்பது நடக்காத காரியம். மற்ற கட்சிகளையே அவர்கள் சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலை. ஆனால் பாஜகவை சுற்றியே  அனைத்தும்  நடக்கிறது என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர முடியும். 

நாடாளுமன்றத் தேர்தலில்,  பாஜகவுடன் கூட்டணி வைக்க முன் வந்த கட்சிகளில் பெரும்பாலானவை,  சட்டமன்ற தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை என்பதை அவர்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள்.

இவ்வளவு கூட்டணி குழப்பங்கள் இருந்த போதிலும்,  எந்த வித சலனமும் இல்லாமல்,  அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் கட்சி ஆளும் அதிமுக. ஏனென்றால் அவர்களுக்கு பெரிய பலமே எதிர் கட்சிகள் சிதறி கிடப்பதுதான். அதுவே அவர்களுக்கு 50% வெற்றியை தீர்மானித்து விட்டது என்றே சொல்லலாம். அதனால்தான் தங்களுக்கு எதிராக திமுக, தேமுதிக காங்கிரஸ் என்ற மெகா கூட்டணி அமைந்து விடாமல் தடுப்பதற்கு அனைத்து தடுப்புகளையும் செய்து கொண்டுதான் வருகிறார்கள். இதனை எதிர்கட்சிகளும் உணராமல் இல்லை.  இருந்த போதிலும் குறைந்த சீட்டுக்காக கூட்டணி வைத்து,  பெரிய கட்சிகளை ஆட்சி பீடத்தில் வைத்து அழகு பார்க்க யாரும் தயாராக இல்லை என்பதை தெளிவாக உணர முடிகிறது .

எந்த சட்டமன்ற தேர்தலிலும் இல்லாத வகையில்,  ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முதன் முதலாக முன் வைத்தவர் விடுதலை சிறுத்தை கட்சியின் தொல்.திருமாவளவன். கூட்டணி பலத்தில் வெற்றிபெற்று,  யாரோ ஒரு கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுப்பதற்கு பதில்,  அனைவருக்கும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை நியாயமானதாக தெரிந்தாலும்,  தமிழக அரசியலில்  கூட்டணி ஆட்சி எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை. ஆக ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன் வைத்தே,  அனைத்து கட்சிகளும் கூட்டணியை முடிவுக்கு கொண்டு வராமல் திணறி வருகின்றன என்றே நினைக்க தோன்றுகிறது.