புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2016

வெள்ளோட்டமாக யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டமையும், கற்றுத்தந்த பாடங்களும்







முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் நீதிமன்ற கட்டளைக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் சாதாரண கைதிகள் போன்று சிறைச்சாலை வாகனத்தில் கொண்டுசென்றபோது அவரது தந்தை மட்டுமல்ல அதனை கண்டுகளித்த பலரது கண்கள் கலங்கியது.
இது சிங்கள மக்களின் நாடித்துடிப்பினை அறிந்து கொள்வதற்கான ஒரு வெள்ளோட்டமான கைதாகவே பார்க்கப்படுகின்றது.
வாழ்க்கையில் கஷ்டகள் என்றால் என்னவென்று தெரியாது அரண்மனையில் பிறந்து சுகபோக வாழ்க்கையில் பயணித்த யோசித ராஜபக்ஸ அவர்கள், அரசியல் அதிகாரத்தின் அதி உச்சவரம்பு வரைக்கும் அனுபவித்திருந்தார்.
அவரைப்பொறுத்தவரையில் வாழ்வு என்றால் இப்படிதான் என்று எண்ணியிருப்பார்.
அரசியல் அதிகாரம் கையில் இருக்கும்போது தன்னிலை மறந்து எதிர்காலங்களில் அது கைநழுவி செல்லும்பொழுது தனது நிலை என்ன என்று ஊகிக்க தெரியாமல் தலைக்கனத்துடன் உலாவரும் ஏனைய அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அவர்களது எடுபிடிகளுக்கும் யோசிதவின் நிலை ஒரு படிப்பினையை வழங்கியுள்ளது.
எமது நாட்டை பொறுத்தவரையில் சட்டத்தின்முன் யாவரும் சமம் என்ற கோட்பாடு ஏட்டில் மட்டும் எழுதி உள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் அதிகாரத்துடன் சட்டத்தினை எப்படி வேண்டுமானாலும் அனுபவிக்கவும், குற்றமிளைக்கவும், துஸ்பிரயோகம் செய்யவும் முடியும் என்ற நிலை காணப்படுகின்றது.
அதேநேரம் எந்தவித ஆட்சி அதிகாரம் இல்லாதவர்களும், அப்பாவி பாமர மக்களும் சட்டத்திற்கு முழுமையாக கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நியதியும், குற்றமிழைக்கும் பட்சத்தில் அதற்குரிய தண்டனையை அனுபவிக்கவும் வேண்டும்.
இதனால்தான் சட்டத்தின்முன் யாவரும் சமம் என்பது ஏட்டில் மட்டும் எழுதப்பட்ட ஒன்றாகும்.
மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் அதிகார துஸ்பிரயோகங்களையும், நிதிமோசடிகளையும் யோசித ராஜபக்ஸவும், அவரது குடும்பத்தினர்கள் மட்டும் செய்யவில்லை.
மாறாக மகிந்தவின் ஆட்சியில் பாரிய ஊழல் செய்த பல அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆட்சி கவிளப்போகின்றது என்று தெரிந்தவுடன் தனது நிறத்தை மாற்றிக்கொண்டு, இன்று நல்லாட்சி என்ற பெயர் தாங்கிய அரசாங்கத்தில் தொடர்ந்து அரசியல் அதிகாரத்தில் அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் உலாவருகின்றார்கள்.
எனவேதான், அவர்கள் எவ்வளவுதான் ஊழல் செய்தாலும் ஆட்சி அதிகாரம் என்கின்ற கவசம் அவர்களை முழுமையாக பாதுகாக்கின்றது. இன்று ராஜபக்ஸ குடும்பம் அரசியல் அதிகாரத்தில் இருந்திருந்தால் யோசிதவுக்கு சிறை செல்லும் நிலை ஏற்பட்டிருக்காது.
அவர் குற்றமற்றவராகவே இருந்திருப்பார்.
யோசிதவின் நிலையை கண்டு கண்கலங்குகின்றவர்கள் அவரது தந்தையின் ஆட்சி எப்படி இருந்தது என்று ஆழமாக சிந்திகாவிட்டாலும், மேலோட்டமாக பார்ப்பது பொருத்தமானது.
ஒரு ஜனநாயக நாடு என்றால் அங்கு கருத்து சுதந்திரம் இருக்கும். அதாவது ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கும், அநீதிகளுக்கும், அதிகார துஸ்பிரயோகங்களுக்கும் எதிராக மாற்றுக்கருத்துக்களை வெளியிடுவர்.
ஆனால் மகிந்தவின் ஆட்சியில் ஜனநாயக நாடு என்ற போர்வையில் அத்தனை சர்வாதிகாரமும் அரங்கேற்றப்பட்டிருந்தது.
மாற்றுக்கருத்துடையோர் அடக்கப்பட்டனர்.
தனது புன்னகையுடன் கூடிய முகத்தினை வெளியே காட்டிக்கொண்டு, தனக்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் மாற்றுக்கருத்துடைய அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும், அதிகாரிகளும் கொலை செய்யப்பட்டார்கள்.
வெள்ளை வேன் மூலம் சிலர் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள். அரசாங்கத்தின் இப்படியான பாதாளலோக செயட்பாட்டுக்கென இராணுவத்தின் தனிப்பிரிவும், மற்றும் கருணா, புள்ளயான், டக்ளஸ் தேவானந்தாவின் துணை இராணுவ பிரிவினரும் பயன்படுத்தப்பட்டனர்.

தன்னை ஒரு மன்னர் என்று பிரகடனப்படுத்தாவிட்டாலும், மன்னர் ஆட்சி நிலவுகின்ற எந்தவொரு நாடுகளிலும் இல்லாத அளவுக்கு அதிகார துஸ்பிரயோகத்தினை மகிந்தவும், அவரது குடும்பத்தினரும் மேற்கொண்டார்கள்.
எதிர்க்கட்சியினர் பலமடைந்து விடாமலும், தொடர்ந்து அவர்களை பலயீனப்படுத்துவதில் கண்ணும்கருத்துமாக இருந்த மகிந்த, எதிர்க்கட்சி உறுப்பினர்களை தன்னுடன் இணைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தினார்.
அதற்காக அமைச்சுப்பதவிகளையும், பிரதியமைச்சர் பதவிகளையும் பல இதர சலுகைகளையும் ஆசை காட்டி புதிது புதிதாக அமைச்சுக்களை உருவாக்கி பெருமளவு அரச நிதிகள் வீண்விரயம் செய்யப்பட்டது.
அத்துடன் சிறுபான்மை சமூகத்தின் தமிழ் முஸ்லிம் கட்சிகளை அழிக்கும் வகையில் அக்கட்சியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளையும், முக்கிய உறுப்பினர்களையும் பிரித்தெடுத்து, அவர்கள் மூலமாகவே சிறுபான்மை சமூகத்தின் குரல்வளைகளை நசுக்கி, சிறுபான்மை சமூகத்தினை அரசியல் அனாதைகளாக்குவதற்கு அவ்வப்போது அவர் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. 
 
நாட்டில் சமாதானத்தை உருவாக்குவதற்கான பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடாத்தப்பட்ட இறுதி யுத்தத்தில் 2௦௦9 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரைக்கும் நாற்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் வன்னியில் கொல்லப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றது.
அதில் காயப்பட்டவர்களும், காணாமல் போனவர்களும், கடத்தப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு சித்திரவதைக்குள்ளானவர்களும் ஏராளம்.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள். அதுபோல பெற்றவர்களுக்குத்தான் தெரியும் பிள்ளையின் அருமை. பிள்ளைக்குத்தான் தெரியும் பெற்றார்களின் பெறுமதி.
நியாயமின்றி தன் குடும்ப உறவினர்கள் தனது கண்முன்னாடி கொலை செய்யப்பட்டபோது அதில் அவர்கள் அடைந்த துன்பங்களையும், வேதனைகளையும் எழுத்தில் எழுதி முடிக்க முடியாது.
இது ஒன்று இரண்டல்ல. வன்னி போர்முனையில் ஏற்பட்ட அவலங்களையும், கொடூரங்களையும் பார்க்கும்பொழுது எந்த ஒரு மனிதாபிமானமுள்ள மனிதர்களினாலும் அந்த கொடூரத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது.
இன்று அது சர்வதேச ரீதியில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 
 
அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். எனவேதான் மகிந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது அவர்கள் செய்த மனித வேட்டைகளுடனும், சித்திரவதைகளுடனும் ஒப்பிடுகையில் யோசித ராஜபக்சவின் கைதானது பரிதாபத்துக்குரியதல்ல.
அதற்காக யாரும் கண்கலங்க தேவையுமில்லை. செய்த குற்றங்களுக்காக ராஜபக்ஸ குடும்பத்தினர்கள் தண்டனைகளை காலப்போக்கில் எதிர்கொள்வார்கள் என்பதுவே அனைவரது எதிர்பார்ப்பாகும். அதுவே உலக நியதியும். 
எனவேதான் சிங்கள மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கினை கொண்டுள்ள மகிந்த ராஜபக்சவினை கைது செய்தால் அது நல்லாட்சிக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படப்போகும் எதிர்விளைவினை அறிந்துகொள்வதற்கான வெள்ளோட்டமாக அவரது புதல்வரின் கைது பார்க்கப்படுகின்றது.
அத்துடன் அதிகாரத்தில் இருக்கும்போது அதனை துஸ்பிரயோகம் செய்யும் அரசியல்வாதிகளுக்கும் இது படிப்பினையை உண்டுபண்ணி இருக்கின்றது.
முகம்மத் இக்பால்
mughammethikbal@gmail.com
சாய்ந்தமருது

ad

ad