26 ஜூன், 2016

சென்னையில் 2 நாட்களில் 161 ரவுடிகள் கைது! -காவல்துறை அதிரடி நடவடிக்கை

சென்னையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 161 ரவுடிகளை கைது செய்து காவல்துறையினர் அதிரடி
நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

சென்னையில் பெருகி வரும் கொலைச் சம்பவங்களை அடுத்தும், ரவுடிகளின் அட்டகாசம்அதிகரித்து வருவதாக எழுந்த புகார்களை தொடர்ந்தும், ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சென்னை பெருநகர காவல் துறைக்கு காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ''சென்னை பெருநகரில் ரவுடிகள், கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ரவுடிகள், முக்கியமாக சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் அல்லது விளைவிக்கக்கூடும் என சந்தேகிக்கும் ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் சென்னையில் 4 மண்டலங்களில், வடக்கு மண்டலத்தில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், தெற்கு மண்டலத்தில் அடையாறு, தியாகராயநகர், புனித தோமையர்மலை, மேற்கு மண்டலத்தில் புளியந்தோப்பு, அம்பத்தூர், அண்ணாநகர், கிழக்கு மண்டலத்தில் கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் ஆகிய 12 மாவட்டங்களிலும், நான்கு மண்டல இணை கமிஷனர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மத்திய குற்றப்பிரிவு ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு உதவி கமிஷனர் தலைமையில் காவல் குழுவினர் ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் மேற்கூறிய 12 மாவட்டங்களிலும் சிறப்பு தனிப்படையினர் மற்றும் ரவுடிகள் கண்காணிப்பு பிரிவினரால் 161 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வடக்கு மண்டலத்தில் மேற்கொண்ட ரவுடிகள் தேடுதல் வேட்டையில் மாதவரம் காவல் எல்லையில் 28 பேர், வண்ணாரப்பேட்டையில் 25 பேர் மற்றும் பூக்கடையில் 16 பேர் என மொத்தம் 69 ரவுடிகள் மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தெற்கு மண்டலத்தில் நடத்திய சோதனையில் தியாகராயநகர் காவல் எல்லையில் 13 பேர், அடையாறில் 15 பேர் மற்றும் புனித தோமையர்மலையில் 26 ரவுடிகள் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட 54 நபர் கள் கைது செய்யப்பட்டனர்.

கிழக்கு மண்டலத்தில் சிறப்பு தனிப்படையினர் கண்காணித்து கீழ்ப்பாக்கம் காவல் எல்லையில் 12 பேர், திருவல்லிக்கேணியில் 5 பேர், மயிலாப்பூரில் 2 பேர் என மொத்தம் 19 ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்..

இதே போல மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான படையினர் 12 ரவுடிகளை கைது செய்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ரவுடிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடர்ந்து துரிதமாக செயல்படுத்த சென்னை பெருநகர காவல்துறை உயரதிகாரிகளுக்கு ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்" என்று கூறப்பட்டு உள்ளது.