26 ஜூன், 2016

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி 255 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி எடுத்து சாதனை

இலங்கைக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 255 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி எடுத்து
உலக சாதனை படைத்தது.
இங்கிலாந்து கலக்கல்
இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் போட்டி பர்மிங்காமில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்தது. தினேஷ் சன்டிமால் (52 ரன்), தரங்கா (53 ரன்) அரைசதம் அடித்தனர்.
அடுத்து 255 ரன்கள் இலக்கை நோக்கி ஜாசன் ராயும், அலெக்ஸ் ஹாலசும் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய இவர்கள் போக போக அதிரடி வேட்டை நடத்தினர். குறிப்பாக ஹாலஸ் நொறுக்கியெடுத்தார். இந்த கூட்டணியை உடைக்க இலங்கை கேப்டன் மேத்யூஸ் 6 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் பிரயோஜனம் இல்லை.
சுழற்பந்து வீச்சாளர் பிரசன்னாவின் ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரி, 3 சிக்சர் விளாசிய ஹாலஸ் அந்த ஓவரில் தனது 3–வது சதத்தை நிறைவு செய்தார். மறுமுனையில் 99 ரன்களில் இருந்த போது மயிரிழையில் எல்.பி.டபிள்யூ. கண்டத்தில் இருந்து தப்பித்த ஜாசன் ராய் அதன் பிறகு பந்தை தூக்கியடித்து தனது 2–வது சதத்தை எட்டினார். ஹாலஸ் 126 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை குணதிலகா கோட்டை விட்டார்.
முடிவில் இங்கிலாந்து அணி 34.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 256 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. 25 வயதான ஜாசன் ராய் 112 ரன்களுடனும் (95 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), 27 வயதான ஹாலஸ் 133 ரன்களுடனும் (110 பந்து, 10 பவுண்டரி, 6 சிக்சர்) களத்தில் இருந்தனர். ஒரு நாள் போட்டியில் தங்களது அதிகபட்ச ஸ்கோரை இவர்கள் பதிவு செய்தனர்.
சாதனை மேல் சாதனை
*விக்கெட் இழப்பின்றி ஒரு அணி வெற்றிகரமாக துரத்திப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச ஸ்கோர் இது தான். இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 236 ரன்கள் (42.2 ஓவர்) எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த உலக சாதனையை இங்கிலாந்து முறியடித்தது.
*ஹாலஸ்–ராய் ஜோடி எடுத்த 256 ரன்களே, ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து ஜோடி ஒன்றின் அதிகபட்சமாகும். இதே மைதானத்தில் 2010–ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக ஆன்ட்ரூ ஸ்டிராஸ்– ஜோனதன் டிராட் இணை 2–வது விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்ததே இங்கிலாந்து ஜோடியின் முந்தைய சிறந்த ஆட்டமாக இருந்தது.
*10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி காண்பது இது 6–வது முறையாகும். இலங்கை இவ்வாறு 10 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணை கவ்வுவது 5–வது நிகழ்வாகும்.
*இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் செஞ்சுரி அடிப்பது இது 2–வது முறையாகும்.
கேப்டன் பெருமிதம்
வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில், ‘உண்மையிலேயே இது ஒரு விசேஷமான ‘சேசிங்’ ஆகும். இது போன்ற ஒரு அனுபவத்தை ஒரு போதும் கண்டதில்லை. நெருக்கடியின்றி ஆட்டம் முழுவதும் எங்களது கட்டுப்பாட்டில் இருந்தது. ஹாலஸ், ஜாசன் ராயின் பேட்டிங் மிக அற்புதமாக இருந்தது’ என்றார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதலாவது ஆட்டம் சமனில் முடிந்திருந்தது. 3–வது ஒரு நாள் போட்டி பிரிஸ்டல் நகரில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.