26 ஜூன், 2016

வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட மர்ம நபர்: விரட்டி சென்று கைது செய்த பொலிசார்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில் கொள்ளையிட்ட மர்ம நபரை பொலிசார் விரட்டி சென்று கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Wildegg என்ற நகரில் மாகாண வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியில் கடந்த புதன் கிழமை அன்று பிற்பகல் 3.10 மணியளவில் மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார்.
வங்கியில் உள்ள ஊழியர் ஒருவரை அவர் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர், லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையிட்ட அந்த நபர் அங்கிருந்து கார் மூலம் தலைமறைவாகியுள்ளார்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததும், ரோந்து வாகனங்களில் பொலிஸ் பட்டாளம் ஒன்று கொள்ளையனை தேடி புறப்பட்டுள்ளது.
கொள்ளையனின் கார் சென்ற திசையில் தேடுதல் வேட்டையை நடத்திய போது, Brugg என்ற நகரில் சந்தேகத்திற்குரிய ஒரு காரை மடக்கி பரிசோதனை செய்த போது அந்த கொள்ளையன் பிடிப்பட்டுள்ளார்.
அதாவது, கொள்ளை நிகழ்ந்து 30 நிமிடங்களில் கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், காரில் இருந்த துப்பாக்கி மற்றும் கொள்ளையிட்ட பணத்தை பொலிசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இந்த கொள்ளை குறித்து பொலிசார் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட போது, ‘வங்கியில் கொள்ளையடித்தவர் 22 வயதான நோர்வே நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
தற்போது கொள்ளையிட்ட பணத்தை பறிமுதல் செய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.