26 ஜூன், 2016

அரசுடன் பேச 8 பேர் கொண்ட குழு- நியமித்தது கூட்டமைப்பு


தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்காக, இலங்கை அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்கான குழுவொன்றையும் நியமித்துள்ளது.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்றுக்காலை 10 மணி தொடக்கம், பிற்பகல் 1 மணிவரை நடந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராசா, ரெலோ சார்பில், கோவிந்தம் கருணாகரன், ஹென்றி மகேந்திரன், என்.சிறிகாந்தா, புளொட் சார்பில், தர்மலிங்கம் சித்தார்த்தன், ராகவன், சிவநேசன், ஈபிஆர்எல்எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தேர்தல் முறைமை மாற்றம்,  அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நாவுக்குப் பொறுப்புக்கூறுவதில் அரசாங்கத்தின் மெதுவான செயற்பாடுகள், வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் – அமைச்சர்கள் – உறுப்பினர்களுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகள், ஊழல், மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றம், வவுனியா மாவட்டத்தில் வடக்குக்கான சிறப்பு பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதில் காணப்படும் சர்ச்சைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

அத்துடன், அரசியல் தீர்வு, காணிகள் விடுவிப்பு, மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில், அரசாங்கத்துடன்  விரைவில் அதிகாரபூர்வ பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் சார்பில் தலா இருவர் வீதம் 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், என். சிறிகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், ராகவன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனர்.

இந்தக் குழு  விரைவில் கூடி  அரசுடன் நேரில் பேசுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.