12 நவ., 2012

பருதியின் படுகொலை,இலங்கையின் இராணுவ புலனாய்வு பிரிவினரினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை -தமிழர் மனித உரிமைகள் மையம்
ச. வி. கிருபாகரன்,
பொதுச் செயலாளர்,
தமிழர் மனிதர் உரிமைகள் மையம்,
பிரான்ஸ்,
11 நவம்பர் 2012
tchrfrance@hotmail.com


தமிழர் மனித உரிமைகள் மையத்தினராகிய நாம், இன்று ஆழ்ந்த கவலையுடனு, சோகத்துடனும் இப் பத்திரிகை செய்தியை, இலங்கை இராணுவ புலனாய்வினரினால் பாரிஸில் படுகொலை செய்யப்பட்ட, பிரெஞ்சு பிரஜையான திரு. நடராசா மதிந்திரன், பருதி என அழைக்கப்படும் தமிழ் செயற்பாட்டாளரின் படுகொலையை கண்டிக்கும் முகமாக வெளியிடுகிறோம்.
பருதியின் படுகொலையை, இலங்கை ஜனதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரர் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும், இலங்கையின் இராணுவ புலனாய்வு பிரிவினரினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதனை இங்கு பல ஆதராங்களுடன் கூற விரும்புகிறோம்.
கடந்த 8ம் திகதி வியாழக்கிழமை, பருதி தனது காரியாலயத்திலிருந்து இரவு 9.00 மணிக்கு, தனது பல சகாக்களுடன் வெளிவரும் வேளையில், பருதியின் தினசரி நடமாட்டங்ககளை நன்கு தெரிந்துள்ள கொலையாளி, பருதியை அவரது பல சகாக்கள் முன்னிலையில,; தனது கைத் துப்பாக்கியால சுட்டுப் படுகொலை செய்துள்ளான்.
பருதி, 1983ம் ஆண்டு தன்னை ஓர் போராளியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்து, இலங்கை அரச படைகள் மீதான பல தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த வேளையில், போரில் ஏற்பட்ட சில காயங்களின் காரணமாக, 1989ம் ஆண்டளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி, பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் புகுநதிருந்தார். பிரான்ஸ் நாட்டில் தனது மனைவி, மகள் ஆகியோருடன், கணக்கு லிகிதராக கடமையாற்றி கொண்டிருந்தார். இவர் 2004ம் ஆண்டில், பாரிஸ்-பிரான்ஸில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளராக பொறுப்பேற்று தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு பெரிதும் உதவி வந்தார்.
இவ்வேளையில் இலங்கையில் சமாதானக் காலமென கூறப்பட்ட காரணத்தினால், இவர் இலங்கைக்கு விஜயம் செய்த வேளையில், கொழும்பு விமான நிலையத்தை இவர் சென்றடைந்தது முதல், இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர், பருதியை மிரட்டுவதுடன் பின் தொடர்ந்தார்கள். இலங்கையின் புலனாய்வுப் பிரிவினரின் தொல்லைகளிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக, இறுதியில் பருதி கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதுவராலயத்திற்கு சென்று முறைப்பாடு செய்தார். இச் சம்பவத்தை கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதுவராலயம் நன்கு அறியும்.
சர்வதேச ரீதியாக, தழிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்சக்திகள் மிகவும் திட்டமிட்டு செய்து வந்த பரப்புரைகளின் காரணிகளினால், பருதியும் அவரது சகாக்கள் பதின்மூன்று பேரும், பிரான்ஸ் அரசின் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப்பட்டு, 2010ம் ஆண்டு வரை சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது.
பருதி சிறையிலிருந்து வெளிவந்த வேளையில், புலம்பெயர் வாழ் மக்கள் பெரும்பாலானோர் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர், வெறுப்பும் அதிர்ச்சியும் அடைந்திருப்பதை அவதானித்த பருதி, மீண்டும் தனது தமிழீழ விடுதலைக்கான அர்ப்பணிப்புக்களை தொடர்ந்தும் ஆற்ற ஆரம்பித்தார்.
கடந்த ஆண்டு ஓக்டோபர் மாதம், இவர் சென்ற வியாழக்கிழமை படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு பல யார் தூரத்தில், இனத் தெரியாதோரினால் இவர் மீதான ஓர் கொலை முயற்சி, பொல்லுகள் வாள்களினால் மேற்கொள்ளப்பட்ட பொழுதிலும், இவர் தனது கராத்தே நிபுணத்துவம் மூலம் அக் கொலை முயற்சியிலிருந்து சில காயங்களுடன் தப்பித்துக் கொண்டார். இவருடன் அவ்விடத்திலிருந்து இரு சகாக்களும் இச் சம்பவத்தில் காயமுற்றனர்.
கடந்த வியாழக்கிழமை பாரிஸில் பருதி படுகொலை செய்யப்பட்டுள்ள முறைக்கும், இலங்கையில் இனந்தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொலையென கூறப்படும், இலங்கையின் புலனாய்வு பிரிவினரினால் மேற்கொள்ளப்படும் கொலைகளுக்குமிடையில் நிறைய ஒற்றுமைகள் உண்டு என்பதுடன், இலங்கை இராணுவ புலனாய்வினரின் கொலைவெறி இன்று பாரிஸ்-பிரான்ஸ் வரை வியாபித்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில காலங்களுக்குள் இலங்கை அரசு, பல இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர்களை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பியுள்ளதுடன், இவர்கள் இலங்கை தூதுவராலயங்களுடன் எந்த தொடர்புமில்லாது, தூவராலயங்களுக்கு வெளியிலிருந்து, இரவு பகலாக தமது நசகார வேலைகளான - புலம்பெயர் வாழ் தமிழ் செயற்பாட்டாளர்களை கண்காணித்து வருவதுடன், பின் தொடர்ந்தும் வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் இவ் இலங்கை இராணுவ புலனாய்வினரின் செயற்பாடுகளுக்கு, பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினர் உதவுவதாக நம்பப்படுகிறது.
உருது மொழி பேசும் சிலர் பாரிஸில் விசேடமாக லாச்சப்பல், காடினோட் கடைத் தெருக்களில் தமிழ் செயற்பாட்டாளர்களை பின் தொடருவதையும், கண்காணிப்பதையும் எம்மில் பலர் அவதானித்துள்ளோம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஓர் ஆங்கில இணையதளத்தின் பிரகாரம், “பிரான்ஸின் சட்டத்துறையினரினால், பருதி படுகொலை செய்யப்பட்ட மறுதினம், வெள்ளிக்கிழமை அவருக்கு சில இலத்திரனியல் கண்காணிப்பு கருவிகள் இணைக்கவிருந்ததாகவும், அவை ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால், பருதி படுகொலை செய்யப்பட்டது தவிர்க்கப்பட்டிருக்குமென கூறப்பட்டுள்ளது”.
இது உண்மையானால், இவ் விடயத்தை யார்? எப்படியாக, எப்பொழுது? அறிந்தார்கள் என்பதை இப் படுகொலை விசாரணைக்கான துப்பாக நாம் பார்க்க முடியும்.
இதேவேளை சர்வதேச அரசியலும், பருதியின் படுகொலைக்கு வித்திடுகிறது. கடந்த வாரம் ஜெனிவாவில் ஐ. நா. சபையில் இலங்கை மீது மேற்கொள்ளப்பட்ட காலவரை மீளாய்வுக் கூட்டத்தில், இலங்கை அரசு பல நாடுகளினால் முன்வைக்கப்பட்ட 100 பரிந்துரைகளை ஏற்க மறுத்ததை யாவரும் அறிவோம். இவ் மறுக்கப்பட்ட பரிந்துரைகளில், பிரான்ஸ் முன்வைத்த பரிந்துரை, மிகவும் கடுமையானவற்றில் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவ் மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கை சார்பாக உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்கவினால் “புலம்பெயர் வாழ் மக்கள் பற்றி கூறிய விடங்களும், இலங்கை இராணுவத்தை ஐ.நா. சர்வதேச அரங்கில் ஒரு தேவதை போல் சித்தரிக்க முனைந்தவை” போன்ற விடயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ் அடிப்படையில் பார்க்கும் பொழுது, சிறிலங்கா அரசு வெளிநாடுகளில் தமது அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் முன்நோக்குடனேயே ஐ. நா. மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் மகிந்த சமரசிங்க உரை அமைந்தது என்பது தெளிவாகிறது.
இவற்றின் அடிப்படையில் இலங்கையின் அரச பயங்கரவாதம் ஐரோப்பிய தலைநகரான பாரிஸில் ஆரம்பமாகியுள்ளதுடன் இவை மற்றைய ஐரோப்பிய தலைநகர்களுக்கும் வியாபிக்கப் போகிறது என்ற பீதி புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் மீது ஆரம்பித்துள்ளது.
திரு. நடராசா மதிந்திரன், பருதியின் படுகொலையை இலங்கை இராணுவ புலனாய்வினரினால் மேற்கொள்ளப்பட்டது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதற்கு பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினர் உதவுவியுள்ளார்களா என்ற ஐயப்பாடும் உள்ளது. இலங்கையில் கடமையாற்றிய பாகிஸ்தான் உத்தியோகத்தர், வேறுபட்ட பலநோக்குடன் பாரிஸிற்கு மிக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரச பயங்கரவாதத்தை மேற்கொண்ட நாடுகளான - ஈராக், ஆப்கானிஸ்தான், தூனிசியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளை, சர்வதேச சமுதாயம் ஓர் முடிவிற்குள் கொண்டுவந்துள்ளது. இவ் நாடுகளிலிலும் தேர்தல்கள் நடைபெற்ற பொழுதிலும,; அங்கு சட்ட ஒழுங்குகளோ ஜனநாயகமோ நிலவவில்லை.
தற்பொழுது இலங்கையும் இப்படியான அரச பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடாகவே உள்ளது. தற்பொழுது இலங்கையின் அரச பயங்கரவாதம் ஐரோப்பிய நாடுகளின் கதவை தட்ட ஆரம்பித்துள்ளது. ஆகையால் சர்வதேச சமுதாயம் புலம்பெயர்வாழ் தமிழ் மக்களை இலங்கையின் அரச பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது இங்கு முக்கிய கேள்வியாகவுள்ளது?
தமிழர் மனித உரிமைகள் மையத்தினராகிய நாம், எமது ஆழந்த அனுதபங்களை மறைந்த பருதியின் மனைவி, மகள், பெற்றோர், மற்றும் நண்பர்கள் தோழர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
“பருதியின் இழப்பால் தவிக்கும் ஒவ்வொருவருக்கும் நாம் கூறும் ஆறுதல் வார்த்தை என்னவெனில், பருதியின் படுகொலை, இன்று எமது இலட்சியத்தின் பாதையை ஒரு படி முன்னேற்றியுள்ளது.”
ச. வி. கிருபாகரன்,
பொதுச் செயலாளர்,
தமிழர் மனிதர் உரிமைகள் மையம்,
பிரான்ஸ்,
11 நவம்பர் 2012
tchrfrance@hotmail.com