புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2013


லயன் எயர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா, கடத்தப்பட்டதா?: புதிதாக கிளம்பும் சந்தேகம்
இரணைதீவுக் கடலில் 1998ம் ஆண்டில் வீழ்ந்த லயன் எயர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது கடத்தப்பட்டதா என்ற சந்தேகம், அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இரணைதீவுக் கடலில் இந்த மாதம் 4ம் நாள் தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் வழிகாட்டலில், லயன் எயர் விமானத்தின் சிதைவுகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டனர். கடலில் 25 அடி ஆழத்தில் இருந்த சுழியோடிகளால் விமானத்தின் இரண்டு இறக்கைகள், மூன்று சக்கரங்கள் உள்ளிட்ட பல பாகங்கள் மீட்கப்பட்டன.
இரண்டு நாட்கள் நீடித்த இந்த மீட்புப் பணியின் போது, பெண் ஒருவரின் தேசிய அடையாள அட்டை, செயற்கைப் பல், மற்றும் மனித எலும்புகள் சிலவும் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது.
லயன் எயர் 602 விமானம் பலாலி விமான நிலையத்தில் இருந்து 1998 செப்ரெம்பர் 29ம் நாள், 48 பயணிகள், உக்ரேன் நாட்டவர்கள் உள்ளிட்ட 7 பணியாளர்களுடன் இரத்மலானை விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டு, 10 நிமிடங்களில் ரேடர் திரையில் இருந்து மறைந்து போனது.
அந்த விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவே நம்பப்பட்டது. அந்த விமானம் கோமெலாவியாவிடம் இருந்து வாடகைக்குப் பெறப்பட்டது.  அதனை உக்ரேனிய நாட்டவரான அனுபவம்மிக்க விமானி மடோச்கோ அன்ஸ்ரோலி இயக்கினார்.
ரஸ்யாவின் ஏஎன் 24 ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தின் சிதைவுகள் இரணைதீவுக்கு தெற்கு 1.5 கி.மீ தொலைவில், தலைமன்னாருக்கு வடக்கே 15 கடல்மைல் தொலைவில், வன்னிப் பெருநிலப்பரப்புக்கு அருகே மூழ்கியிருந்தன.
யாழ்.குடாநாட்டைத் தனிமைப்படுத்தும் உத்தியாகவே விடுதலைப் புலிகள் அந்த விமானத்தைச் சுட்டுவீழ்த்தியதாக அப்போது கருதப்பட்டது.
முன்னதாக யாழ் - கண்டி வீதியை மீளத் திறப்பதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளை விடுதலைப் புலிகள் தோற்கடித்திருந்தனர். தரைவழிப்பாதை இல்லாத நிலையில், லயன் எயர் மற்றும் மொனரா எயர் விமானங்கள் பலாலிக்கும் இரத்மலானைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டன.
இந்த விமானங்களை அரசாங்க அதிகாரிகள், இராஜதந்திரிகள், அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் பயன்படுத்தினர்.
சிறிலங்கா இராணுவ அதிகாரிகளின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் சிறிலங்கா விமானப்படை இருந்ததால், சிறிலங்கா இராணுவம் கூட இந்த விமானங்களைப் பயன்படுத்தியது.
யாழ்ப்பாணத்துக்கான விமான சேவைகளை நிறுத்தும் படியும் இல்லாது போனால் விளைவுகளை சந்திக்க வேண்டிருக்கும் என்றும் விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, மொனரா எயர் தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது. இருந்தபோதிலும் லயன் எயர் தொடர்ந்து சேவைகளை நடத்தியது.
அந்த துக்ககரமான நிகழ்வு நடைபெற்ற நாளில், சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கூட அந்த விமானத்தில் பயணம் செய்தனர். அந்த விமானத்தின் ஒரு பெண் பணியாளர் 21 வயதான தர்சினி.
அவரது தாயார் ரஞ்சனி “அந்த விமானத்தைச் செலுத்திய விமானி மடோச்கோ அன்ஸ்ரோலி அனுபவம்மிக்க விமானி என்றும், அவருக்கு 20 ஆண்டு அனுபவம் இருந்தது” என்றும் சொல்கிறார்.
விமானம் கிளம்பிய 10 நிமிடங்களில் காணாமற்போனதில் சந்தேகம் உள்ளது என்கிறார் இவர். “அவர் லயன் எயர் நிறுவனத்தில் இருந்து ஓய்வுபெற்று ரஸ்யாவுக்குத் திரும்பிச் சென்றார். மூன்று வாரங்களில் மீண்டும் திரும்பி வந்து லயன் எயரில் இணைந்து கொண்டார்.
விமானி அன்ஸ்ரோலி மீண்டும் திரும்பி வந்து இணைந்து கொண்டது ஏனைய விமானிகளுக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும், அது ஒரு விசித்திரம் என்றும் தர்சினி கூறினார்” என அவர் குறிப்பிட்டார்.
விமானத்தைக் கடத்துவதற்கு அன்ஸ்ரோலி விடுதலைப் புலிகளுடன் பேரம் பேசியிருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். “எதற்காக அவர் திரும்பி வரவேண்டும்? உங்களுக்குத் தெரியாது, உக்ரேனியர்கள் கடற்கொள்ளையர்கள்.
அவர் தனது நாட்டுக்குத் திரும்பிச் சென்றபோது, விமானத்தை கடத்துவதற்கு புலிகள் பெருமளவு பணத்தைக் கொடுக்க முன்வந்திருக்கலாம்” என்கிறார் அவர்.
“ஏஎன் 24 விமானம் இரட்டை இயந்திரங்களைக் கொண்டது, 180 கி.மீ வேகத்தில் பறக்கத்தக்கது. அதனை 300 மீ. பகுதிக்குள் தரையிறக்கலாம். 50 மீற்றர் தார் வீதியே போதும்.
அது 27.5 அடி உயரமானது, பேசாலை கடற்பகுதி 40 தொடக்கம் 50 அடி ஆழத்தைக் கொண்டது. மீட்பு நடவடிக்கைக்கு முன்பே காண முடிந்திருக்கும்” என்கிறார் தர்சினியின் மாமன், கொலின் அஸ்பேர்ன்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் தான் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது. எனினும் அவர்கள் தேடுதல் ஒன்றை மேற்கோள்ளும் நிலையில் இருக்கவில்லை.
அண்மைய தேடுதல், தீவிரவாத தடுப்பு காவல்துறையினரின் வேண்டுகோளையடுத்தே ஆரம்பிக்கப்பட்டது.
விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தான் இரணைதீவுக் கடற்படுகையில் தேடுதலை நடத்த சிறிலங்கா கடற்படையை அவர்கள் கோரியிருந்தனர்.
கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிச் சந்தேகநபரான சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், தானே தோளில் இருந்து ஏவும் ஏவுகணை மூலம் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஒப்புக்கொண்டதாக கடந்த ஏப்ரல் மாதம் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கூறியிருந்தனர்.
இவர், போர்நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து 2002இல் நாட்டை விட்டு வெளியேறி, மேற்கு ஆசிய நாடு ஒன்றில் தங்கியிருந்த பின்னர் சிறிலங்கா திரும்பியிருந்தார்.
எனினும் 17 வயது இளைஞனால் கனரக ஏவுகணையைக் கையாள முடியுமா என்ற கேள்வி உள்ளது.
“நானும் சில காலம் இராணுவத்தில் பணியாற்றியுள்ளேன். கனரக ஏவுகணைகள் எப்படியென்று எனக்குத் தெரியும். ஒரு 17வயது இளைஞனால் அதனைத் தனியாக கையாள முடியாது” என்று அஸ்பேன் கூறுகிறார்.
தேடுதலின் போது, இரண்டு இறக்கைகள், மூன்று சக்கரங்கள், முன்பக்கம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பயணிகள் எவருடைய எச்சங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனால் கேள்வி எழுகிறது. சிதைவுகளை மீட்ட பின்னரே விமானத்தில் இருந்தவர்களின் எச்சங்களை மீட்க முடியும் என்கின்றனர் அதிகாரிகள்.
கடந்த 14ம் நாள் ஐந்து மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடக அறிக்கை ஒன்று கூறியது. இந்த அறிக்கை குறித்து ஏளனம் செய்துள்ள ரஞ்சனி, “திடீரென்று எப்படி அவை சிதைவுகளுக்குள் வந்தன?” என்று கேள்வி எழுப்புகிறார்.
“அவற்றை அவர்களே போட்டிருக்க வேண்டும். உறுதிப்படுத்துவதற்காக மரபணுப் பரிசோதனை நடத்தாது போனால், அவை பயணிகளுடையவையா அல்லது பணியாளர்களுடையவையா என்று நான் நம்பமாட்டேன்” என்கிறார் அவர்.
ஆரம்பத்தில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்ட போது தீப்பிழம்பாக விமானம் கடலில் வீழ்ந்ததைக் கண்டதாக பலர் கூறியிருந்தனர்.
பின்னர், பயணிகளின் நகைகள், கடிதங்கள் மற்றும் அடையாள அட்டைகளை பம்பலப்பிட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மன்னார் காவல்துறை கூறியிருந்தது.
தனது மகளுக்குச் சொந்தமான எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறும் ரஞ்சனி, “காண்பிக்கப்பட்ட அடையாள அட்டைகள், கடிதங்கள் போன்றன நீரில் நீண்டகாலம் இருந்திருப்பதற்கான அறிகுறிகள் இல்லை” என்றும் கூறுகிறார்.

ad

ad