21 மே, 2013


நம்பவைத்து கழுத்தறுத்தனர்… மனைவி, அப்பாவை இழந்த நாகர்கோவில் இளைஞர் கண்ணீர்

நாகர்கோவில்: காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்காக நம்பவைத்து கழுத்தறுத்து கொலை செய்துவிட்டார் மனைவியின் சகோதரர் என்று இரண்டு உயிர்களை பறிகொடுத்த இளைஞர்
கூறியுள்ளார். நாகர்கோவிலை அடுத்த வாத்தியார் விளையை சேர்ந்தவர் சிவா. இவர் சென்னையை அடுத்த பொன்னேரியை சேர்ந்த சவுமியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு சவுமியாவின் சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நண்பர்களுடன் சென்ற சவுமியாவின் மூத்த அண்ணன் சபரிநாதன் தனது சகோதரியையும், அவளது மாமனார், கணவர் ஆகியோரையும் கத்தியால் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே சவுமியாவும், அவரது மாமனாரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சிவா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வடசேரி போலீசார் கொலை நடந்த 2 மணி நேரத்தில் கொலையாளிகள் சபரிநாதன், சேகர், செல்லபாண்டியன் ஆகிய 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மனைவியின் மூத்த அண்ணன் தன்னுடைய குடும்பத்தினரை நம்பவைத்து கழுத்தறுத்து ஏமாற்றி கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். இறுதி ஆண்டு படித்து வருகிறேன். எதிர்பாராதவிதமாக எனக்கும் சவுமியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. 2 ஆண்டுகளாக நாங்கள் காதலித்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் எங்களின் காதல் விவகாரம் சவுமியாவின் சகோதரர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் சவுமியாவை எச்சரித்தனர். இருந்தாலும் எதிர்ப்பையும் மீறி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எனவே வடசேரி போலீசார் சவுமியாவின் பெற்றோரை போலீஸ் நிலையம் அழைத்தபோது அங்கிருந்து அவரது இளைய அண்ணன் கார்த்தி மட்டுமே வந்தார். அவருடன் செல்ல சவுமியா மறுத்து விட்டார். இதனால் போலீசார் எங்களை குடும்பம் நடத்த அனுமதித்தனர். என் மனைவியின் மூத்த அண்ணன் சபரிநாதன் மீது சவுமியாவுக்கு பாசம் அதிகம். அவரை மிகவும் நம்பினார். எங்கள் திருமணம் நடந்தபோது அவர் டெல்லியில் இருப்பதாக கூறினார். ஊருக்கு வந்ததும் நாகர்கோவில் வந்து உங்களை பார்க்கிறேன் என்று தெரிவித்தார். அதுபோல அவர் ஊருக்கு வந்து எங்களிடம் பாசத்தோடு பழகினார். இந்த நடிப்பை பார்த்து மயங்கி விட்டேன். அவரை முழுமையாக நம்பினேன். ஆனால் எங்களை நம்ப வைத்து கழுத்தறுத்து கொன்று விட்டார். இன்றைக்கு என் மனைவி, அப்பாவை இழந்து தவிக்கிறேன். என் உயிருக்கும் ஆபத்து உள்ளது. அவர்களிடம் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும். எனது மனைவியின் நகைகளைகூட அவர்களிடம் கொடுத்து விட்டு அவள் மட்டும் போதும் என்று கூறினேன். என்னை இப்படி அனாதை ஆக்கி விட்டார்கள் என்று கூறி கதறி அழுதார். இந்த நிலையில் கொலையான சவுமியாவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களின் சொந்த ஊரான குறும்பூருக்கு கொண்டு சென்று இறுதி சடங்குகள் செய்தனர் அதேபோல் சிவாவின் தந்தை ஜெயராம் உடல் நேற்று பிரேதபரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன

.