21 மே, 2013வடமாகாண ஆளுநரின் பாரிய நிதி மோசடி அம்பலம்
அபிவிருத்தி என்னும் பெயரில் வடமாகாண ஆளுநரின் பாரிய நிதி மோசடி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
இந்த மோசடி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்.நகர் புல்லுக்குளத்தை புனரமைப்புக்காக பாரியளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் கட்டுமாணப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வடமாகாண ஆளுநர் தனக்கு நெருக்கமான ஒரு ஒப்பந்தகாரருக்கு கொடுத்து அதன் மூலம் தானும் நன்மை அடைந்துள்ளார்.
குறித்த ஒப்பந்தக்காரரின் தரமற்ற நிர்மாணப் பணிகளால் புல்லுக்குளம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
யாழ் நகர் புல்லுக்குளத்தின் கிழக்குப் பகுதியின் வீதியோரக் கட்டுக்கள் தரமற்ற கட்டுமாணப் பணிகளால் இடிந்து வீழ்ந்துள்ளன.
யாழ் மாநகர சபையால் அண்மையில் பாரிய நிதி ஒதுக்கீட்டில் புல்லுக்குளத்தினை அழகுபடுத்தும் நோக்கோடும், மக்களின் பொழுதுபோக்கினை கருத்திற்கொண்டும் குளத்தை சுற்றிவர கொங்கிறீற் கட்டுக்கள் அமைக்கப்பட்டன.
இக்குளப் புனரமைப்புப் பணிகள் பெருமெடுப்பிலும், பாரிய நிதிச் செலவீனத்திலும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதன் கிழக்கு வீதியோர கட்டுக்களில் 25 மீற்றர் தூரம் வரையான கட்டுமானப் பணிகள் முற்றாக இடிந்து குளத்தினுள் வீழ்ந்துள்ளது.
மேலும் இக்குளத்தில் பொழுதுபோக்கிற்காக வந்து தினமும் கட்டுக்களில் நடந்து செல்வோர் எப்போது கட்டுக்கள் இடிந்து விழுமோ என்ற அச்ச உணர்வுடனேயே செல்வதையும் அவதானிக்க முடிகிறது.
கட்டுமானப் பணிகள் மேற்கொண்ட ஒப்பந்தகாரர்கள் உரிய முறையில் கட்டட நிர்மாணம் மேற்கொள்ளாமையே குறித்த கட்டுக்கள் இடிந்து வீழ்கின்றமைக்கு காரணம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இக்கட்டுமாணப் பணியினை மேற்கொண்ட ஒப்பந்தகாரர்கள் மீது மாநகர சபை உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும், இடிந்த கட்டுக்களை அதே ஒப்பந்தகாரர்களை கொண்டு புனரமைப்பு மேற்கொள்ளவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் சமூகவியலாளர்கள் சுட்டிக் கட்டுகின்றனர்.
இதேவேளை யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் ஒப்பந்த வேலைகளுக்கு தரமான ஒப்பந்தகாரர்களை ஈடுபடுத்துவதும், அதனை மேற்பார்வை செய்வதன் மூலம் இவ்வாறன செயற்பாடுகள் இடம்பெறாமல் தடுக்க முடியும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
உரிய காணி அதிகாரிகள் ஊடாக தொடர்ச்சியான கண்காணிப்புக்கள் மூலம் தரமான கட்டுமானங்களை மேற்கொள்வதை உறுதி செய்வதற்கு உரியதரப்பினர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.