21 மே, 2013


ஐ.பி.எல். சூதாட்டத் தலைவர் போலீஸில் சரண்

அந்தத் தகவலின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சென்னையில் தீவிரமாக சோதனை நடத்தி சூளைமேட்டைச் சேர்ந்த ஹரிஸ் பஜாஜ், ராஜாஅண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த வேதாச்சலம் என்ற விருதாச்சலம், புரசைவாக்கத்தைச் சேர்ந்த லக்கி என்ற நர்பத், சௌகார்பேட்டையைச் சேர்ந்த பிரவீண்குமார் என்ற பப்பு, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தீபக் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
ஆனால் சென்னையில் சூதாட்ட கும்பலின் தலைவராக செயல்பட்ட அயனாவரம் மேடவாக்கம் டேங்க் சாலை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் தலைமறைவாகி விட்டார். இதில் பிரசாந்த் கார் சென்னை விமான நிலையத்தில் நின்றதால், அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடி இருக்கலாம் என போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டது. இதனால் அவரை கைது செய்வதற்குரிய தீவிர நடவடிக்கைகளை போலீஸார் முடுக்கிவிட்டிருந்தனர்.
இந்நிலையில், பிரசாந்த் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் திங்கள்கிழமை நண்பகல் சரணடைந்தார். சரணடைந்த அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பிரசாந்தை அழைத்துக் கொண்டு அவர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சோதனை செய்தனர். இதில் சூதாட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்ட லேப் டாப், கம்ப்யூட்டர், செல்போன்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதேபோல வேப்பேரி,கெல்லீஸ் உள்ளிட்ட 3 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சோதனை நடத்தினர். இதனிடையே பிரசாந்த் கொடுத்த தகவலின்பேரில் சூதாட்டத்தில் முக்கிய புள்ளிகளாக செயல்பட்ட சஞ்சய், விஜயகுமார் 2 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சூதாட்ட கும்பலின் தலைவரான பிரசாந்த் சரணடைந்து இருப்பது இந்த வழக்கில் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. பிரசாந்த் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுப்பட்ட அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் நினைக்கின்றனர். இதில் சென்னையில் உள்ள பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கூறப்படுகிறது.