8 ஜூலை, 2013

புலிகளிடம் சிக்கிய குழுவினர் மூன்று நாட்களாக உயிருக்கு போராட்டம்

இந்தோனேஷியாவில் மான் வேட்டைக்கு சென்ற குழுவினர், புலிகள் கூட்டத்தில் சிக்கி கொண்டு சுமார் 3 நாட்களாக மரத்திலேயே தவிக்கின்றனர்.
இந்தோனேசியாவின் வடபகுதியில் உள்ள சுமத்ரா தீவில் குனுங்லியூசர் தேசிய வனவிலங்கு பூங்கா உள்ளது.
இப்பூங்காவிற்கு கடந்த 4ம் திகதி சிம்பங் பகுதிவாசிகள் 6 பேர் மான் வேட்டைக்காக நீண்ட தூரம் சென்றுள்ளனர்.
இரவு நேரத்தில் மான் ஒன்றை வேட்டையாடி உள்ளனர், உடனே 6 பேரும் சூழ்ந்து கொண்டு அதை ஈட்டியால் குத்தி கொன்று தோலை உரிக்க முற்பட்டனர்.
அப்போது தான் தெரிந்தது வேட்டையாடியது மான் இல்லை, புலி என்று.
அதற்குள் இறந்து போன புலியை தேடி, புலிக்கூட்டமே திரண்டு வந்தது. புலி இறந்ததை பார்த்ததும் அந்த குழுவினரை விரட்டி சென்று தாக்கியதில் ஒருவர் பலியானார்.
மற்றவர்கள் உயிருக்கு பயந்து அருகில் இருந்த மரத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
சுமார் 3 நாட்களாக புலிகள் காவல் காப்பதால் கலங்கிப்போன அவர்கள் தங்களின் நிலையை விளக்கி வனத்துறை காவலர்களுக்கு நேற்று செல்போன் மூலம் தகவல் அளித்தனர்.
இந்த தகவலையடுத்து அவர்களை மீட்க வனத்துறையினர் விரைந்துள்ளனர்.
எனினும் காட்டுப் பகுதியில் வெகுதூரம் அவர்கள் சென்றுள்ளதால் அந்த இடத்தை வனத்துறையினர் சென்றடைய 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என தெரிகிறது.
இதற்கிடையே நாங்கள் போய் சேரும் வரை அந்த மரத்தை விட்டு புலிகள் போகாமல் இருந்தால், மயக்க ஊசியால் புலிகளை சுட்டு அந்த 5 பேரையும் காப்பாற்ற வேண்டும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.