8 ஜூலை, 2013

,

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் திகதி அறிவிக்கப்பட்டதும் இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்கவேண்டும்: கூட்டமைப்பு
வடமாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் திகதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து வடக்கிலுள்ள இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை கேட்டுள்ளது.
ராஜகிரியவிலுள்ள தேர்தல் செயலகத்தில் நேற்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டள்ளது.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,
தேர்தல் ஆணையாளருடனான சந்திப்பின்போது நாம் பல விடயங்களை அவரது கவனத்துக்குக் கொண்டு வந்தோம். வட மாகாண சபைத் தேர்தல் காலத்தில் வடக்கில் இடம்பெறக் கூடிய இராணுவத்தினரின் தலையீடுகள் தொடர்பில் அவரிடம் தெளிவுபடுத்தினோம்.

அங்கு நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் சிவில் நிர்வாகத்தில் தலையீடு செய்வது போன்று தேர்தல் காலத்தில் தேர்தல் நடவடிக்கைகளிலும் தலையிடும் நிலை தோன்றியுள்ளது.
ஆகவே, தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரும் திகதி அறிவிக்கப்பட்டவுடன் வடபுலத்தில் செற்படும் இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்க வேண்டும்.
தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் சார்க் வலய மற்றும் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் மற்றும் உள்ளுர் தேர்தல் கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படல் அவசியம் போன்ற விடயங்களை நாம் தேர்தல் ஆணையாளரிடம் வலியுறுத்தினோம் என தெரிவித்துள்ளார்.