புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2013

,

கிழக்கு மாகாணசபை கலைந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாண சபையினை ஆட்சியமைக்கும். அதற்குரிய காலம் மிகவிரைவில் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
பின்னர் வட, கிழக்கை நாங்கள்தான் ஆட்சி செய்வோம். மக்களின் அபிலாசைகளை துரிதகதியில் முன்னெடுப்போம். இதற்குரிய காலம் கனிந்துள்ளது என வன்னிமாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை கௌரவித்தலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் 80ஆவது அகவை பூர்த்தி விழாவும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற மாபெரும் சக்திக்கு வித்திட்டவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்கள். அவர் இக்கூட்டமைப்பு வலுப் பெறுவதற்கு அயராது உழைத்தவர். 5 கட்சிகள் ஒன்றிணைந்துதான் இக்கூட்டமைப்பு உருவாகியுள்ளது. மக்களை தேசிய ரீதியாக பலப்படுத்துவதற்கும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதற்கும் இக்கூட்டமைப்புக்குள் ஒற்றுமைதான் அவசியம்.
தற்போது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு அகிம்சைப் போராட்டத்தினை கையிலெடுத்து சாத்வீக ரீதியில் செயற்பட்டு வருகின்றோம். தற்போது 5 தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு ஜனநாயகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதனூடாக செயற்பட்டு வருகின்றோம்.
கடந்த காலத்தில் நாம் ஆயுதப் போராட்டத்தினை மிகவும் சிறப்பாக முன்னெடுத்தபோது அரசாங்கம் கூறியது 13ஆவது திருத்தத்திற்கு மேலாக 13 பிளஸ் தருகின்றோம், ஆயுதங்களை கைவிடுங்கள் என்று. அரசாங்கத்தின் கருத்தினை நம்பி நாம் செயற்பட்டு ஆயுதங்களைக் கைவிட்டோம். பின்னர் 13ம் இல்லை பிளசுமில்லை. அரசு எம்மை ஏமாற்றிவிட்டு எம்மை அடக்கி ஒடுக்கியது.
அப்போது மேற்கொண்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்படும் எனவும் எதிர்பார்த்தோம். அதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை.
ஒன்றுமையாக செயற்பட்டால்தான் கைச்சாத்திட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினையாவது அமுல்படுத்துவதற்கு அரசிற்கு அழுத்தங்களைக் மேற்கொள்ளலாம்.
தற்போது வட, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்களும் எமது இனத்தின் நிலங்களையும் சூறையாடிக் கொண்டு இருக்கின்றார்கள். அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை உண்டு பண்ணுகின்றார்கள்.
இந்தியா இப்பகுதிகளை ஆக்கிரமித்துவிடும் போன்ற காரணங்களை முன்வைத்து வடக்கில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகள் கண், காது, கால் போன்ற பல அங்கங்களை இழந்து சிறையில் வாடுகின்றார்கள். தினம் தினம் முள்ளிவாய்க்காலில் நடந்த சோகத்தினை நினைந்து நினைந்து சோகக் கண்ணீர் வடித்துக் கொண்டுதான் இன்னும் இன்னும் எம்மினம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
இவையனைத்தினையும் எதிர்த்துப் போராடுவதற்று ஒன்றிணைந்துள்ள 5 தமிழ் கட்சிகளும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். இந்தியாவிலே தமிழ்நாடு எம்பக்கம் உள்ளது. ஏனைய நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள எம்மக்கள் என்றும் உறுதுணையாகவுள்ளார்கள். அவர்களின் செயல்பாடுகளால் ஜனாதிபதி கூட அந்த நாடுகளுக்கு செல்ல முடியாதுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் ஈழத்திலே இருக்கின்ற எங்கள் மண்ணை நாம் மீட்பதற்காக ஒன்று படவேண்டும்.
இலங்கை அரசாங்கத்திற்கு வடமாகாணசபைத் தேர்தல் ஒரு சவாலாகும். இத்தேர்தல் நிச்சயமாக ஒரு திருப்பத்தினைக் கொண்டு வரும். வடமாகாண சபையினை நிச்சயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும்.
அதுபோல் தற்போது கிழக்கு மாகாண சபையிலுள்ள ஆளும் கட்சியினருக்குள் பாரிய குழப்பங்கள் உருவாகியுள்ளன. நான் நிச்சயமாகக் கூறுகின்றேன் கிழக்கு மாகாணசபை கலைந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாண சபையினை ஆட்சியமைக்கும். அதற்குரிய காலம் மிகவிரைவில் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
பின்னர் வட, கிழக்கை நாங்கள்தான் ஆட்சி செய்வோம். மக்களின் அபிலாசைகளை துரிதகதியில் முன்னெடுப்போம். இதற்குரிய காலம் கனிந்துள்ளது எனக் கூறினார்.

ad

ad