8 ஜூலை, 2013

,

மகளின் காதல் திருமணத்தை ஏற்காத பெற்றோர்! பெண்ணின் கணவர் மீது கடும் தாக்குதல்! யாழில் சம்பவம்
மகளின் காதல் திருமணத்தினை ஏற்க மறுத்த குடும்பத்தினரினால், குறித்த பெண்ணின் கணவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவமொன்று யாழ். நகரப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
யாழ். குருநகர் பகுதியில் இன்று மதியம் 12.30 மணியளவில் மேற்படி சம்பவம் இடம்பெற்றது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
கிறிஸ்தவ மதத்தினைச் சேர்ந்த 22 வயதுடைய பெண்ணும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 34 வயதுடைய முஸ்லிம் இளைஞரும் கடந்த 2 வருடங்களாக காதலித்துள்ளனர்.
இவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்காத நிலையில், அவ்விருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த மாதம் பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி சாரதியான கணவருடன், குறித்த பெண் குருநகர், பாங்சால் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த பெண் வீட்டார் குறித்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பல தடவைகள் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இன்று மதியம், பெண்ணின் தாயார் மற்றும் சகோதரன், சகோதரி ஆகியோரால் தனது கணவன் மிகக் கடுமையாக தாக்கப்பட்டதாக அப்பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நிலையில் அவர்கள் இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.