8 ஜூலை, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கிராம யாத்திரையில் அராஜகமாகச் செயற்பட்ட சீருடை தரித்தோர்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராம யாத்திரையின் தொடர்ச்சியாக உதயநகர் மேற்குப் பகுதியில் மக்கள் சந்திப்பும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டாளராகிய திரு. தி. சிவமாறன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் திரு.நா.வை குகராசா கலந்து கொண்டு கருத்துரை வழங்கும் போது, வரப் போகும் மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும், 13ம் திருத்தச் சட்டம் என்றால் என்ன என்பதையும் அதைப்பற்றி ஏன் தமிழ் மக்களாகிய நாம் அக்கறைப் படத் தேவையில்லை என்பது குறித்த விளக்கத்தினையும் அவர் வழங்கினார்.
மேலும் அவர் "கிளிநொச்சி மத்திய கல்லூரியின் மைதானம் எவ்வேளையிலும் சீருடை தரித்தோரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அங்கு நடைபெறும் நிகழ்வுகளால் அங்கு பயிலும் மாணவர்களது கல்வி எவ்வாறு பாதிப்படைகிறது என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த ஒன்று. எமது மாணவர்களது கல்வி திட்டமிட்டவகையில் எவ்வாறு சீரழிக்கப்படுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் 5க்கும் மேற்பட்ட சீருடை தரித்தோர் உட்புகுந்து அந் நிகழ்வினைக் குழப்பும் வகையிலும் அங்கு குழுமியிருந்த மக்களை அச்சுறுத்தும் வகையிலும் அங்கு சமூகம் தந்திருந்த பிரதேச சபை அங்கத்தவர்களையும் மக்களையும் தனித்தனியாகவும் குழுக்களாகவும் புகைப்படம் பிடித்துள்ளனர்.
இச் செயற்பாடு குறித்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தமது அதிருப்தியினை வெளியிட்டுள்ளனர். இக் கிராம யாத்திரையின் முடிவில் அங்கு சமூகமளித்திருந்த மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இக் கற்றல் உபகரணத் தொகுதிக்கு சுவிற்சர்லாந்து நாட்டில் வதியும் பெயர் குறிப்பிட விரும்பாத புலம் பெயர் அன்பர் ஒருவர் பங்களிப்புச் செய்திருந்தார். அந்த புலம் பெயர் அன்பருக்கு மாணவர்களும் பெற்றோரும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் நா.வை குகராசா, உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன், உறுப்பினர்கள் த.சேதுபதி, மா.சுகந்தன், கிளிநொச்சி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கு.சர்வானந்தா, கட்சி செயற்பாட்டாளர் தி.சிவமாறன், உதய நகர் மேற்கு கிராம அபிவிருத்தித் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், மாணவர்கள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.