புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2013



           ராஜபக்சேவின் ராணுவம் தமிழீழத்தில் நடத்திய போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களை, "நோ ஃப்யர் ஸோன்' என்கிற தலைப்பில் வெளியிட்டு வருகிறது சேனல் 4.   சிங்கள ராணுவத்தின் கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளாகி சுட்டுக் கொல்லப் பட்ட இசைப்பிரியாவின் உடல், ஆடைகள் அகற்றப் பட்டும் வெள்ளைத்துணி போர்த்தப்பட்டும் கிடந்த காட்சி ஏற்கனவே வெளி யானபோது தமிழகமும் உலகத் தமிழினமும் அதிர்ந்துபோனது.  "யுத்தத்தில் அவர் கொல்லப் ட்டார்' என்று சொல்லி வீடியோவை மறுத்தது இலங்கை அரசு. 



இந்தச் சூழலில், சிங்கள ராணுவத்திடம் மேலாடையின்றி உயிருடன்  இசைப்பிரியா அகப்பட்டுக் கொண்ட வீடியோ காட் சியை கடந்த 31-ந் தேதி வெளியிட்டது சேனல் 4. அந்த வீடியோவில், ஒரு சேற்று பகுதியில் மேலாடை யின்றி  உட்கார்ந்திருக்கிறார் இசைப்பிரியா. சிங்கள ராணுவத்தினர் 5 பேர் ஓடி வந்து இழுக்கிறார்கள். துணி வேண்டும் என்கிறார் இசைப்பிரியா. ஒரு வெள்ளைத்துணியை கொண்டு வருகிறான் ஒருவன். அந்த துணியை இசைப் பிரியாவின் உடம்பில் போர்த்தி இழுத்து வருகிறார்கள். "தம்மை எதுவும் செய்து விட வேண்டாம்' என கதறுகிறார் அவர். அப்போது ஜட்டியுடன் ஒரு நபர் அவரோடு இணைந்து செல்வது போல வருகிறது.

  அப்போது ஒருவன், "இவள் பிரபாகரனின் மகள்' என்று சொல்ல, "அய்யோ... நான் அவர் இல்லை' என்கிறார் இசைப்பிரியா. அடுத்து இசைப்பிரியா கொல்லப்பட்டு ஆடையின்றியும் வெள்ளைத் துணியுடனும் கிடக்கிறது அவரது உடல்.  இந்த காட்சிகள் தற்போது  சர்வதேச சமூகத்தையும் இந்திய அரசையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. 

இசைப்பிரியா. 27 வயதே ஆன இளம் பெண். மனதில் ஒட்டிக்கொள்ளும் அழகான குழந்தை முகம். யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியை பூர்வீகமாக கொண்ட இசைப்பிரியா, தர்மராஜா- வேதரஞ்சனியின் 4-வது மகள். இசைப்பிரியாவிற்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் ஷோபனா. பிறக்கும்போதே இதயத்தில் சிறு ஓட்டை இசைப்பிரியாவுக்கு இருந்துள்ளது. மருத்துவர் களோ புள்ளி மாதிரி இருக்கும் அந்த சிறு துளையால் எதிர்காலத்தில் எந்த பிரச்சினையும் வராது என்று நம்பிக்கைத் தந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் தமிழ் பாடத்தில் புலமை பெற்றார் ஷோபனா. யாழ்ப்பாணத்தை சிங்கள அரசு 1995-ல் கைப்பற்றியபோது, பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வன்னியை நோக்கி இடம் பெயர்ந்தன. அப்போது  ஷோபனா குடும்பமும் வன்னியில் குடியேறியது. அங்கு தனது மேற்படிப்பை தொடர்ந்தார் ஷோபனா. அப்போது விடுதலைப் புலிகளின் பிரச்சார வகுப்புகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்ட ஷோபனா, 1999-ல் இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டார். 


""அப்போது அவருக்கு இயக்கம் வைத்த பெயர் இசை அருவி. அவரது உடல் நலத்தையும் அவரது தமிழ் புலமையையும் அறிந்த பிரபாகரன், புலிகளின் ஊடகப் பிரிவில் பணியமர்த்த உத்தர விட்டார். அங்குதான் அவருக்கு இசைப்பிரியா என பெயர் சூட்டப்பட்டது. புலிகள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் நிதர்சனம் பகுதியின் செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியா, தொலைக்காட்சிக்காக பதிவு செய்யப்பட்ட தெருக்கூத்து மற்றும் மொழி சார்ந்த கலைநிகழ்ச்சிகளிலும் பங்காற்றினார். தமிழீழம் தொடர்பான சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். அவரின் உச்சரிப்பும் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் முக பாவனைகளும் தமிழர்களின் ஈர்ப்புக்கு உரியதாக இருந்தது. அதனால் இயக்கத்தில் உள்ள அனைவரின்
அன்பையும் பெற்றவர் இசைப்பிரியா''’ என்கிறார்கள் ஈழத்தமிழர்கள்.நன்றி நக்கீரன்

தனது 25-வது வயதில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான ஸ்ரீராமை 2007-ல் திருமணம் செய்துகொண்டார் இசை. இசைப்பிரியாவுக்கு அழகான பெண் குழந்தை 2008-ல் பிறந்தது. அதற்கு அகல்யா என பெயர் சூட்டினார் ஸ்ரீராம். ஈழத்தில் நான்காம்கட்ட போர் 2009-ல் உக்கிரமாக வெடித்த நிலையில், அதில் தனது கணவரையும் குழந்தையையும் பறிகொடுத்தார் இசைப்பிரியா. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நிராயுதபாணிகளாக பல்லாயிரக் கணக்கான மக்களும் போராளிகளும் ராணுவத் திடம் சரணடைந்தனர். அவர்களில் இசைப்பிரியா வின் பெற்றோர்களும் இருந்தனர். மகள் இசைப்பிரியாவை பற்றி எல்லோரிடமும் விசாரித்தனர் அவர்கள். எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேனிக் பார்ம்மில் அவர்கள் தங்கியிருந்தபோது, ராணுவத்திடம் இசைப்பிரியா சிக்கிக்கொண்டதாக தகவல் அறிந்து துடித்துப் போயிருக்கிறார்கள். இந்த சூழலில், இசைப்பிரியா கொடூரமாக கற்பழிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப் பட்ட நிலையில் அவரது உடலை  2010 அக்டோபரில் சேனல் 4 வெளியிட்டபோது அவரது பெற்றோர்கள் கதறினர். 

கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் உடலைக் காட்டிய சேனல் 4, அவர் உயிருடன் சிங்கள ராணுவத்திடம் சிக்கிய காட்சியை தற்போது வெளியிட்டு சிங்கள  அரசின் போர்க்குற்றங்களை மீண்டும் ஒருமுறை வெளிச்சப்படுத்தியிருக்கிறது. இந்த வீடியோவை வெளியிட்ட "நோ ஃபயர் ஸோன்' இயக்குநர் காலம் மெக்ரே, ""இலங்கையின் போர்க்குற்றங் களை வெளிச்சப்படுத்தும் புதிய வீடியோ இது. காமன்வெல்த் மாநாடு நடக்கவிருக்கும் நிலையில் இலங்கையின் கோர முகத்தை சர்வதேச நாடுகள் தெரிந்துகொள்ளவே இந்த வீடியோவை ரிலீஸ் செய்திருக்கிறோம்'' என்கிறார்.  மாநாடு நெருங்க... நெருங்க... இன்னும் அதிர்ச்சி தரக்கூடிய காட்சிகளை வெளியிட இருக்கிறார்களாம்.

இந்த வீடியோ இலங்கையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்த... நம்மிடம் பேசிய தமிழ்  தேசிய கூட்டமைப்பினர், ""இலங்கையின் 53 மற்றும் 57-வது படைப்பிரிவில் யுத்தத்தின்போது சரணடையும் தமிழ்ப் பெண்களையும், அகப்படும் தமிழ்ப் பெண்களையும் கற்பழித்து, படுகொலை செய்ய ஒரு பிரிவு இருந்தது. அதை நிரூபிக்கும் விதமாக இசைப்பிரியாவின் வீடியோவில் ஒருவன் ஜட்டியுடன் வருவது அம்பலமாகியிருக்கிறது'' என்கிறார்கள். 

இப்படிப்பட்ட சூழலில்தான், இலங்கையில் இம்மாதம் 15, 16, 17 நாட்களில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள பிடிவாதமாக இருக்கிறது இந்தியா. ஆனால் கலந்துகொள்ளக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகத்தின் அரசியல் தலைமைகளும் (மார்க்சிஸ்ட் நீங்கலாக) தமிழகத்திலுள்ள பல்வேறு அமைப்புகளும் குரல் கொடுத்தும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் வருகின்றன. தமிழக சட்டமன்றத் தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட் டிருக்கிறது.

இந்நிலையில், இதுகுறித்து விவாதிக்க சோனியா தலைமையில் டெல்லியில் நடந்த காங்கிரஸின் உயர்நிலைக்குழு கூட்டத்தில், பிரதமர் பங்கேற்கலாம் என எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளும் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும் 31-ந் தேதி காலையிலேயே கொழும்புக்கு விரைந்து சென்று, பிரதமர் மற்றும் மாநாட்டில் கலந்துகொள்ள விருக்கும் இந்திய பிரதிநிதிகள் ஆகியோர் தங்கும் இடம், மாநாடு நடக்கும் இடம், தங்குமிடத்திற்கும் மாநாடு நடக்கு மிடத்திற்குமுள்ள தொலைவு, தங்குமிடத் திலிருந்து மாநாட்டிற்கு செல்லும் பாதை உள்ளிட்டவைகளை ஆய்வு நடத்தியுள்ளனர்.

தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் துரைமுருகனிடம் இதுகுறித்து கேட்ட போது, ""காமன் வெல்த் மாநாட்டில் இந்தியாவில் இருந்து யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்பதுதான் தி.மு.க.வின் நிலை. கொடுங்கோலன் ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கு எத்தனையோ ஆதாரங்கள் வெளிவந்துவிட்டன. அதை யெல்லாம் பார்க்கும்போது நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது. அப்படி யிருந்தும் இலங்கைக்கு வால் பிடிக்கும் வேலையையே இந்தியா செய்துகொண்டிருக்கிறது. எங்கள் தலைவர் சொன்னதுபோல, தமிழகத்தின் உணர்வுகளுக்கு எதிராக இந்தியா ஒரு நிலை எடுக்குமானால்... வினை விதைத்தவர்கள் வினை அறுப்பார்கள்''’என்கிறார் காட்டமாக.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,’ ""இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை  ஐ.நா.சபை பொதுச்செயலர் பான்-கீ-மூன் அமைத்த "தரூஸ்மன் குழு' உறுதிப்படுத்தியிருக்கிறது. டப்ளினில் அமைக்கப்பட்ட மக்கள் தீர்ப்பாயமும் "இலங்கையில் நடந்திருப்பது இனப்படுகொலைதான்' என தீர்ப்பளித்திருக்கிறது. இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தவும் காமன்வெல்த் நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கையை நீக்கவும் இந்தியா முன்வரவேண்டும்'' என்கிறார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,’""காமன்வெல்த்தில் இந்தியா  கலந்துகொண்டால்.. தமிழகத்தில் காங்கிரஸை வேரறுப்போம். மத்திய அரசின் ஒரு அலுவலகமும் தமிழகத்தில் இருக்காது. அப்புறம்தான் காங்கிரஸ் தலைமைக்கு நாங்கள் யாரென்று தெரியும்''’என்கிறார் ஆவேசமாக.

விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன்,’""தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவெடுக்கப்படும் என்று கலைஞருக்கு பிரதமர் கடிதம் எழுதி உறுதியளித்திருக்கிறார். அதனால்  காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று நினைத்த வேளையில் அதற்கு எதிரான நிலையை காங்கிரஸின் உயர்நிலைக் குழு எடுத்திருப்பது ஏமாற்றத்தை தந்துள்ளது. தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதுடன் போர்க்குற்றங்களை மறைத்து வரும் சிங்கள வெறியர்களை பாதுகாத்து வரும் காங்கிரஸின் முகம் விரைவில் அம்பலமாகும்''’என்கிறார்.

இதேபோன்ற கருத்துக்களையே ஈழ ஆதரவு அமைப்புகளும், ஈழ ஆதரவு அரசியல் கட்சிகளும் எதிரொலிக்கின்றன. இந்த நிலையில், பிரதமரை சந்தித்த ஜி.கே.வாசன், ""இலங்கைக்கு இந்தியா செல்லக்கூடாது'' என்பதை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். இவரைத் தொடர்ந்து ஏ.கே.அந்தோணி, ஜெயந்தி நடராஜன் போன்றவர்களும் பிரதமரிடம் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர். காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்கிற குரல்கள் தமிழகம் முழுவதும் வலுக்கத் தொடங்கியிருக்கிறது. 

-இரா. இளையசெல்வன்

ad

ad