ஆட்சிக்கு வந்த மறு வருடம் சட்டமன்றத்தில் "திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் ஒரு கலைக்கல்லூரி தொடங்கப்படும்' என்று ஜெ. அறிவித்தார்.
அறிவித்தபடி போன வருடத்தில் இருந்து வேடசந்தூரில் அரசு மேனிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பழைய கட்டடமொன்றில் தற்காலிகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது
கல்லூரி.நக்கீரன் நன்றி
இந்தக் கல்லூரிக்காக 10 ஏக்கர் நிலத்தை தானமாக எழுதிக் கொடுத்தார் தி.மு.க. முன்னாள் ஒ.செ. நாகையகோட்டை அப்துல்காதர். பட்டாவும் அரசுத் தரப்புக்கு மாற்றப்பட்டு விட்டது. இந்த நிலையில் "அப்துல்காதர் தானமாகக் கொடுத்த நிலம் நமக்கு வேண்டாம், நாம் வேறு இடத்தில் கல்லூரி கட்டுவோம்' என்று அந்த தானக்கிரயப் பத்திரத்தையே திருப்பிக் கொடுத்துவிட்டார் வேடசந்தூர் எம்.எல்.ஏ. பழனிசாமி.
என்னதான் நடந்தது இடையில்?
வேடசந்தூர் ர.ர.க்களிடம் விசாரணையைத் துவக்கினோம்.
""வேடசந்தூர் தொகுதியிலேயே 150 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர் நாகையகோட்டை அப்துல்காதர் சேட். அவரிடம் குறைந்த விலைக்கு 20 ஏக்கரை வாங்கி 10 ஏக்கரை கல்லூரிக்கு கொடுத்துவிட்டு, மீதி 10 ஏக்கரை தனது வருமானத் திற்காக பயன்படுத்த விரும்பியிருக்கிறார் எங்க எம்.எல்.ஏ. பழனிசாமி. எம்.எல்.ஏ. எண்ணம் நிறைவேறலை. அதனால இந்தப் பழம் புளிக்கும்னு திருப்பிக் கொடுக்கச் சொல்லிட்டாரு. நாகைய கோட்டை ஊராட்சிமன்றத் தலைவர் ஆறுமுகத்தை தெரியுமா? அவர்தான் இந்த விஷயத்தில் ரொம்ப மெனக்கெட்டவர். அவர்கிட்ட கேளுங்க விலாவாரியா சொல்லுவார்'' என்றார்கள் ர.ர.க்கள்.
நாகையகோட்டை ஊராட்சிமன்றத் தலைவர் ஆறுமுகத்தைத் தேடிச் சென்றோம்.
""31-8-2013 அன்று உயர் கல்வி அமைச்சர் பழனியப்பனும், கலெக்டர் வெங்கடாசலமும், எம்.எல்.ஏ.வும், அதிகாரிகளும் வந்து, நான் கொடுத்த 10 ஏக்கர் நிலத்தையும் பார்த்துவிட்டுப் போனார்கள். இப்ப என்னடான்னா... இது வேணாம்னு வேற இடம் தேடுறாங்களாம். எம்.எல்.ஏ.வோட சுயநலத்தால் வேட சந்தூர் கலைக் கல்லூரி கட்டும் வேலையே முடங்கிப் போய் விட்டதே'' வருத்தத்துடன் சொன்னார் அப்துல்காதர் சேட்.
"தானம் கொடுத்த நிலத்தை எதற்காக திருப்பிக் கொடுத்தீர்கள்?' -எம்.எல்.ஏ. பழனிசாமியிடம் கேட்டோம்.
""அந்த இடத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் வந்து பார்த்தார். போக்குவரத்துக்கு வசதியில்லாத இடமாக இருக்கிறது. இது வேணாம்னு சொல்லிவிட்டார். வேளாண் மைத் துறைக்குச் சொந்தமான வெங்காய குடோன் உள்ள இடத்தையும் தண்ணீர் பந்தல்பட்டி அருகே ஒரு இடத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்'' -எரிச்சலோடு சொன்னார் எம்.எல்.ஏ. பழனிசாமி. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலத் திடம் கேட்டோம்.
""எம்.எல்.ஏ. சொன்னதால்தான் அந்த இடத்தைப் போய்ப் பார்த்தேன். அதே இடத்தைப் பார்த்த அமைச்சர், "வேறு இடம் பாருங்கள். இது போக்குவரத்து வசதியற்ற இடம்' என்று கூறினார். எம்.எல்.ஏ.வுக்கும் இடத்துக்காரருக்கும் ஏதோ பிரச்சினை என்றும் பேசிக்கொள்கிறார்கள். என்னவோ தெரியவில்லை'' என்றார் ஆட்சியர்.
என்ன செய்யப் போகிறார்கள் ஏரியா மக்கள்?
""அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதே தங்கள் கொள்கை யென வாழ்கின்ற ஆயிரமாயிரம் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தனது நிலத்தை -அதுவும் சுமார் 180 கிரவுண்ட் நிலத்தை, கல்லூரி கட்டுவதற்காக அரசுக்கு விலையில்லாமல் எழுதிக் கொடுத்திருக்கிறார் ஒரு முஸ்லிம் வள்ளல். தனக்கு பத்து ஏக்கர் நிலத்தை எழுதித்தரவில்லை என்பதற்காக அந்த இடத்தை நிராகரித்து கல்லூரி கட்டு வதையே முடக்கிப் போட்டிருக்கிறார் எங்கள் எம்.எல்.ஏ. இந்த எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுத்து இப்படிப்பட்ட தன்னலவாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று முதலமைச்சருக்கும் கல்வி அமைச்சருக்கும் புகார் அனுப்பப்போகிறோம்.'' என்கிறார்கள் வேடசந்தூர் தொகுதி நாகைய கோட்டை மக்கள்.
-சக்தி