மன்னார் மனிதப் புதை குழியிலிருந்து இதுவரை 79 எலும்புக் கூடுகள் மீட்பு: அகழ்வுப் பணிகள் தொடர்கிறது
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதை குழியிலிருந்து இதுவரை 79 எலும்புக் கூடுகள் மீட்கப் பட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் நேற்று சனிக்கிழமை 29 ஆவது தடவையாக மனிதப் புதை குழி தோண்டப் பட்டது. அதன்போது, இரண்டு எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. அவற்றோடு சேர்த்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, 30 ஆவது தடவையாக இன்று ஞாயிற்றுக்கிழமையும் மனிதப் புதைகுழி தோண்டும் பணிகள் முன்னெடுக்கப் படுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு அண்மித்த வீதியொன்றில் நீர்க்குழாய் பொருத்துவதற்காக தோண்டப்பட்ட போது குறித்த மனிதப் புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.