குற்றவாளிகளை இனங்காண தானியங்கி கைவிரல் அடையாள முறைமை
பொலிஸ் அறிக்கை பெற நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை
பொலிஸ் திணைக்களம், குற்றவாளிகளை இனங்கண்டுகொள்வதற்காக தானியங்கி கைவிரல் அடையாள முறைமையை
நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளது. இதன்மூலம் மனித உரிமைகள் மீறப்படாத வகையில் சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை செய்ய முடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும் சுமார் மூன்று நிமிடங்களில் இதற்கான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியுமென்பதனால் வெளிநாடுகளுக்குச் செல்வோர் பொலிஸ் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது எனவும் அவர் கூறினார்.
இந்த விசேட மென்பொருளினை கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனிப் பிரிவு பொலிஸ் திணைக்களத்துக்குப் பெற்றுக்கொடுத்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர், மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார். பொலிஸ் திணைக்களத்திடம் சுமார் 5 இலட்சம் கைவிரல் அடையாளங்கள் உள்ளன. இவற்றுள் சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் அடையாளங்களுக்குச் சொந்தக்காரர்கள் உயிரிழந்திருக்கலாமென நம்பப்படுகிறது. மிகுதி 3 இலட்சத்து 70 ஆயிரம் பேரினது கைவிரல் அடையாளங்களும் கணனி மயப்படுத்தப்படும்.
இதன் மூலம் கைவிரல் அடையாளத்தைப் பெற்றவுடன் குறித்த நபர் ஏற்கனவே ஏதேனும் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளாரா என்பது குறித்து 3 நிமிடங்களில் அறிந்துகொள்ளக் கூடியதாகவிருக்கும். முன்னர் இதற்கு 14 மணித்தியாலங்கள் தேவைப்பட்டது எனவும் அவர் கூறினார்.