புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 மார்., 2014

வட மாகாண முதலமைச்சரின் நிர்வாக நியம அறிவுரைகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்மொழிந்துள்ள வடக்கு மாகாணசபையின் நிர்வாக, நியம அறிவுரை நடவடிக்கைளை நடைமுறைப்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை நேற்று இலங்கையின் உயர்நீதிமன்றம் விதித்தது.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்கள் கே. ஸ்ரீபவன், சத்திய ஹெட்டிகே ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவின் அடிப்படையிலேயே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமது கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாகவும் தம்மை பதவியில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தியே விஜயலட்சுமி தமது மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்தநிலையில் மனுவின் நியாயத் தன்மையை கருத்திற்கொண்டு நீதிமன்றம் வழக்கை விசாரணை செய்ய முடிவெடுத்தது. வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வடமாகாண முதலமைச்சரால் ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிப்பது, மாகாணசபையின் உயரதிகாரிகளின் வெளிப் பயணங்களுக்கு அனுமதி வழங்குவது, அதிகாரிகளின் மாதாந்த அறிக்கையை கோருவது, மாகாணசபையின் கீழ் வரும் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் யாவும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் அனுமதியுடன் மேற்கொள்ளப்படுவது, ஊடகங்களுக்கு கருத்துரைப்பது போன்ற விடயங்களில் முதலமைச்சரின் முன் அனுமதி பெறவேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் தம்மீது நடைமுறைப்படுத்தப்பட்டதாக பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.