புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

சர்வதேச விசாரணை கோரி ஐ.நாவில் குவியும் அழுத்தம்; ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் தீவிரம்
 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமான நிலையில் இலங்கை அரசின் செயற்பாடுகள் குறித்து ஆரம்பத்திலேயே கண்டனங்களும், கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

 
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை வலியுறுத்தும் நவிப் பிள்ளையின் அறிக்கையை ஐ.நாவின் பொதுச் செயலாளர் பான் - கீ - மூன் வரவேற்றார்.
 
இந்த நிலையில் கடந்த காலத் தில் நடந்த சம்பவங்கள் தொடர்பிலான முழு உண்மைகளும் கண்டறியப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. 
 
ஒன்றியத்தின் சார்பில் கிறீஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கொருக் கொலார் நேற்றைய ஆரம்ப அமர்வில் உரை யாற்றியிருந்தார். இலங்கையின் பொறுப்புக் கூறல் முக்கியமானது. அதுவே நாட்டின் உறுதித்தன்மையைப் பாதுகாக்கும் என்று அவர் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.
 
இது தொடர்பில், போர் முடிந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது என்றும்  கடந்த காலத்தில் இடம் பெற்ற குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலுக்கான உண்மையான வசதிகளை இந்த பேச்சு ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
கடந்த வாரம் பிரஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பில், இலங்கைப் பிரச்சினைகள் தொடர்பில் கண்காணிப்பதற்கான சர்வதேசப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கையை வரவேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. 
 
இதேவேளை, இலங்கை அரசின் மீது சர்வதேச நடவடிக்கையே இனித் தேவை என்று  பிரிட்டன் நேற்று  வலியுறுத் தியுள்ளது. பிரிட்டிஷ் வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹுகோ  சுவைர், இலங்கை மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியுள்ளார். 
 
கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற பொது  நலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதிக்கும் வருகை தந்திருந்தார்.
 
அப்போது, இலங்கை நம்பத்தகுந்த உள்ளக விசாரணைப் பொறி முறை ஒன்றை ஏற்படுத்த வில்லையென்றால், சர்வதேச விசாரணைப் பொறி முறை ஒன்றைப் பிரிட்டன் கோரும் என்றும் தெரிவித்திருந்தார்.
 
இதனையடுத்து இப்போது ஐ.நா மனித உரிமைகள் சபை மாநாட்டில் சர்வதேச விசாரணை ஒன்றுக்கான கோரிக்கையை பிரிட்டன் முன்வைத்துள்ளது.    

ad

ad