புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

அ.தி.மு.க. வேட்பாளர்கள் ப்ளஸ்.. மைனஸ்!
வேட்பாளராகிவிட்டோம் என்ற சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும், தேர்தல் வரை அது நிலைக்க வேண்டுமே என்ற பயத்தில் திகிலடித்துப் போயிருக்கிறார்கள். இவர்களில் பலர் அறிமுகமே இல்லாத புதுமுகங்கள். எது எப்படியோ... அடுத்த அறிவிப்பு
வரும்வரை அ.தி.மு.க-வின் எம்.பி. வேட்பாளர்கள் இவர்கள்தான்! இவர்களைப் பற்றிய ப்ளஸ் மைனஸ் கலந்த 'பய’டேட்டா இதோ...
 th vikatan
நெல்லை: கே.ஆர்.பி.பிரபாகரன்
வழக்கறிஞரான இவர், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர். கட்சியின் தீவிர விசுவாசி என்கிற ஒரே தகுதியில்தான் வேட்பாளர் ஆகியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் பிரபாகரன் மீது அவரது கட்சியைச் சேர்ந்த ஒருவரே, 'எனது கையெழுத்தைப் போலியாகப் போட்டு தில்லு முல்லு செய்து, நீதிமன்றத்தில் ஆஜராகி, எனது வீட்டை ஏலத்தில் போகவைத்து, பினாமி பெயரில் அவரே ஏலம் எடுத்துக்கொண்டார்’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
கரூர்: தம்பிதுரை
மீண்டும் கரூர் தொகுதி வேட்பாளர் ஆகி​யிருக்கிறார் தம்பிதுரை. கரூரில் இவரைப் பார்ப்பதே அரிது என்பது தொகுதி மக்களின் புகார். அத்துடன் மாவட்ட அமைச்சரான செந்தில் பாலாஜிக்கும் இவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். எல்லாவற்றையும் தாண்டி கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் தமிழக பிரச்னைகளுக்காக அதிகம் பேசியதும் கூட்டணி கூட்டங்களில் பங்கேற்க இவரையே ஜெயலலிதா அனுப்பிவைப்பதும் தம்பிதுரைக்கு தகுதியைக் கூட்டிக் கொடுத்துள்ளன.
விழுப்புரம்: ராஜேந்திரன்
ராஜேந்திரனை 'அமைதிப்படை சத்யராஜ்’  என்று  கிண்டலடிக்கின்றனர் அ.தி.மு.க-வினர். இவருக்கான தேர்தல் செலவுகளை அதே மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் ஏற்றுக்கொள்வதாக சொல்லி யிருக்கின்றனராம். மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராகப் பதவி வகித்தவர். இவரது பழைய தி.மு.க. தொடர்புகளும் கார்டனுக்கு புகாராக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் செட்டிலாகிவிட்டவர் என்பது  மைனஸ்.  
தென்காசி: வசந்தி முருகேசன்
இவருக்கு நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டும், ஜெயிக்கவில்லை. அதை அடுத்தே இந்த வாய்ப்பு. தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். ஆனாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய புகார் மனுக்கள் கார்டனை நோக்கிப் பறக்க ஆரம்பித்துள்ளன.
ஆரணி: ஏழுமலை
இவர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அணியில் மேல்மலையனூர் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டார். 2001-ல் செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ. ஜூனியர், சீனியர் என பாகுபாடு பார்க்காமல் எல்லோரிடமும் இறங்கிப் பழகும் தன்மை கொண்டதால் இவரின் பதவிக்கு பங்கம் வந்தது இல்லை. எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக ஏழுமலை தொடர்ந்து இருந்து வருகிறார். அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியின் ஆதரவும் இவருக்கு இருப்பது கூடுதல் பலம்.
திருச்சி: குமார்
மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும் சிட்டிங் எம்.பி-க்களில் குமாரும் ஒருவர். சில மாதங்களுக்கு முன்பு  இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அத்துடன் சென்னை தலைமைக்கழகத்தில் அமர்ந்து கட்சியினரிடம் புகார் மனு வாங்கும் நால்வர் கமிட்டியிலும் குமாருக்கு இடம் கிடைத்தது. கட்சியில் இருக்கும் கோஷ்டிப்பூசல்களை குமார் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதே கேள்வி!
கள்ளக்குறிச்சி: காமராஜ்
எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கலிதீர்த்தானின் மகன்தான் இந்த காமராஜ். ஜெயலலிதாவுக்கு எதிராக ஆர்.எம்.வீரப்பன் தொடங்கிய எம்.ஜி.ஆர். கழகத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலாளராக இருந்தவர் கலிதீர்த்தான். சென்னையில் மருத்துவராக இருந்த காமராஜ் 2006-ல் கள்ளக்குறிச்சிக்கு குடிபெயர்ந்தார். அமைச்சர் மோகனின் நெருங்கிய உறவினர் என்பதே இவரது தகுதி.
கடலூர்: அருண்மொழிதேவன்
கிளைக்கழகச் செயலாளராக கட்சிப் பணியைத் தொடங்கி ஒன்றிய கவுன்சிலர், அம்மா பேரவைச் செயலாளர், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் என படிப்படியாக வளர்ந்தவர் அருண்மொழிதேவன். இப்போது சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவராகவும், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். இவருக்கு எதிராக யார் முஷ்டியை முறுக்கினாலும் உடனடியாக பதவியைக் கொடுத்து தன்னுடைய பக்கத்திலே வைத்துக்கொள்வார். இதுவரை வீண் சர்ச்சைகளில் சிக்கியது இல்லை.      
வேலூர்: செங்குட்டுவன்
புதிய நீதிக் கட்சியில் இருந்து அ.தி.மு.க-வுக்கு வந்தவர் செங்குட்டுவன். அமைச்சர் வீரமணிக்கு நண்பர் என்பது மட்டுமே இவரது ஒரே தகுதி. இவர் தி.மு.க-வினரோடு அதிகம் நெருக்கம் காட்டுபவர் என்ற புகாரும் உண்டு. இவர் எழுதிய ஒரு நூலை சென்னையில் தி.மு.க. பிரமுகர் ஒருவர்தான் வெளியிட்டார் என்றும் அ.தி.மு.க-வில் புகார் வாசிக்கிறார்கள்.
ராமநாதபுரம்: அன்வர்ராஜா
எம்.ஜி.ஆர். காலத்திலேயே கட்சியின் ஆட்சி மன்றக் குழுவில் இருந்தவர் அன்வர்ராஜா. சிறந்த பேச்சாளர், தேர்தல் பணிகளைக் கையாள்வதில் கைதேர்ந்தவர். கோஷ்டிப்பூசலில் சிக்காதவர் என்றெல்லாம் இவரைப் பற்றி நல்ல தகவல்கள் சொன்னாலும், 'கட்சி செலவுகளுக்கு பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கவே மாட்டார்’ என்ற இமேஜ் தொண்டர்கள் மத்தியில் உண்டு. அன்வர்ராஜாவின் குடும்பப் பிரச்னைகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டி அவர் மீது புகார்கள் பறந்தபடி இருக்கிறது.
தஞ்சாவூர்: கு.பரசுராமன்
தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக இருக்கும் இவர், தஞ்சையை ஒட்டிய நீலக¤ரி ஊராட்சி மன்றத் தலைவராக மூன்றாவது முறையாக இருக்கிறார். பிரதான தொழில், ரியல் எஸ்டேட். அமைச்சர் வைத்திலிங்கத்திடம் நெருக்கம் அதிகம். கட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்காதவர். கீழ்மட்ட கட்சியினரிடையே நெருக்கம் இல்லாதவர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இவருடைய வீட்டை சோதனைசெய்த வருமானவரித் துறையினர் சில ஆவணங்களைக் கைப்பற்றிச் சென¢றனர். நில அபகரிப்பு வழக்குகளும் இவர்மீது எழும்பி அடங்கியிருக்கிறது.
நாகப்பட்டினம்: கே.கோபால்
1991-ல் நன்னிலம் எம்.எல்.ஏ., 1996-ல் அதே நன்னிலத்தில் தோல்வி, 1998-ல் நாகை எம்.பி. தொகுதியில் தோல்வி, 2011-ல் திருத்துறைப்பூண்டி வேட்பாளராக அறிவித்து, பிறகு மாற்றம் என இவருக்கு நீண்ட தேர்தல் வரலாறு உண்டு. ஜெயலலிதா பேரவைத் தலைவர், மாவட்ட துணைச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்தவர், இப்போது மாவட்ட மருத்துவ அணிச் செயலாளராக இருக்கிறார். அமைச்சர் காமராஜின் ஆதரவாளர். இவருடைய சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் என்பதால், நாகை மாவட¢ட அ.தி.மு.க-வினருடன் ஈடுபாடு குறைவுதான். கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்தத் தொகுதியைக் கேட்டால் கோபால் கழற்றிவிடப்படலாம்.  
விருதுநகர்: ராதாகிருஷ்ணன்
கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகப் பதவி வகித்தவர். இப்போதைய மாவட்டச் செயலாளரும் செய்தித் துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, அப்போது கட்சியில் சாதாரண நிலையில் இருந்தார். அவர் ராதாகிருஷ்ணனின் விசுவாசி. பின்னர் ராதாகிருஷ்ணன் மாவட்டச் செயலாளர் பதவியை இழக்க... ராஜேந்திர பாலாஜி சிவகாசி எம்.எல்.ஏ. ஆனார். அமைச்சர், மாவட்டச் செயலாளர் பதவிகள் தேடிவந்தன. சீனியரான ராதாகிருஷ்ணன் ஈகோ பார்க்காமல், ராஜேந்திர பாலாஜியிடம் ஒட்டிக்கொண்டார். அதற்குக் கைமாறாகக் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராதாகிருஷ்ணனுக்கு சிவகாசி யூனியன் சேர்மன் பதவி கிடைத்தது. இப்போது வேட்பாளர் வாய்ப்பு கிடைத்ததும் ராஜேந்திர பாலாஜியின் சிபாரிசு காரணமாகவே என்கின்றனர். இடையில் தி.மு.க-வுக்குத் தாவி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிவகாசியில் நடந்த விழாவில் 54 பவுன் தங்க செயின் அணிவித்தது, பெரிய அளவில் படிப்பு இல்லாதது.. இவரது மைனஸ் பாயின்ட்கள்.
சேலம்: பன்னீர்செல்வம்
வழக்கறிஞரான இவர், கேபிள் டி.வி. தொழில் செய்துவருகிறார். வீரபாண்டி ஆறுமுகத்தின் சம்பந்தி முறை உறவினர். 2006 முதல் 2011 வரை சேலம் 10-வது வார்டு கவுன்சிலராக இருந்தார். 2011-ல் மீண்டும் 10-வது வார்டுக்கு நின்று தோற்றுப் போனார். இப்போது சேலம் மாநகர் மாவட்ட துணைச் செயலாளராகவும் சேலம் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநராகவும் இருக்கிறார். இவர் 2009-ல் கவுன்சிலராக இருந்தபோது சேலம் மாநகராட்சியில் இருந்து மேயர் ரேகா பிரியதர்ஷினி தலைமையில் கோவா சுற்றுப்பயணம் சென்றார்கள். அதற்கு வழியனுப்பி வைக்க வந்த வீரபாண்டி ஆறுமுகத்திடம் பன்னீர்செல்வம் கைகுலுக்கி வணங்கி காலில் விழுந்ததாக சி.டி. வெளியாகி பரபரப்பு கிளம்பியது.  
நாமக்கல்: பி.ஆர்.சுந்தரம்
1997 முதல் 2000 வரை நாமக்கல் மாவட்டச் செயலாளராக இருந்தவர். இப்போது நாமக்கல் மாவட்ட அவைத்தலைவராகவும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். 1996 முதல் 2006 வரை 10 ஆண்டுகள் ராசிபுரம் எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார். கட்டப்பஞ்சாயத்து, அடாவடிக்குப் போகாதவர். எதையும் ஒளிவுமறைவின்றிப் பேசக்கூடியவர். எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்தில் தொகுதிப் பக்கம் பெரிதாகத் தலைகாட்டவில்லை என்ற புகார் இன்றுவரை சொல்லப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி: டி.ஜாண்தங்கம்
கன்னியாகுமரியின் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பதவி வகித்து வரும் இவர், 1991 முதல் 2001 வரை குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 2006-ம் ஆண்டில் நடைபெற்ற சாத்தான்குளம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வின் வெற்றிக்காகத் தீவிரமாகச் செயல்பட்டதன் பலனாக, ஒன்றியச் செயலாளர்  பதவி கிடைத்தது. ஐந்து வருடங்கள் கழித்து கடந்த ஜூன் மாதம்தான் கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தது. பின்னர் நடந்த குமரி மாவட்ட ரப்பர் வளர்ப்போர் மற்றும் உற்பத்தியாளர் விற்பனை சங்கத் தேர்தலில் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுககப்பட்டார். தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய சேர்மனாகவும் உள்ளார்.
சிவகங்கை: செந்தில்நாதன்
'கந்துவட்டி தொழில்புரியும் உங்களால் ஒரு குடும்பமே பாதிக்கப்பட்டு இருக்கிறது. உங்களுக்கு எப்படி நான் ஒன்றியச் செயலாளர் பதவி தர முடியும்?’ - சில ஆண்டுகளுக்கு முன் கொளப்பாக்கத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஜெயலலிதாவிடம் 'குட்டு’ வாங்கி, தேவகோட்டை ஒன்றியச் செயலாளர் பதவி நிராகரிக்கப்பட்ட  செந்தில்நாதன்தான் இப்போது சிவகங்கை தொகுதி வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். இப்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். வழக்கறிஞரும்கூட. யாரிடமும் அதிர்ந்து பேசாமல் அமைதி அரசியல் செய்துவந்தாலும் அனைத்து இடங்களிலும் இரண்டு கோஷ்டிகளை உருவாக்கி, தன் பதவிக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக்கொள்வது இவர் பாலிசி.
பெரம்பலூர்: மருதைராஜ்
பெரம்பலூர் ஒன்றியச் செயலாளர், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகளை வகித்துவருகிறார். முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது மட்டும்தான் அவருக்கு ப்ளஸ்.  கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, சில நாட்களில் குற்றச்சாட்டுகள் எழவே மாற்றப்பட்டார். கடந்த முறை சீட் வாங்க மன்னார்குடி வகையறாவுக்குப் பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அந்தக் கணக்கை சரிசெய்வதற்காகவே மீண்டும் மன்னார்குடி வகையறாக்கள் சீட் வாங்கி கொடுத்திருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
சிதம்பரம்: சந்திரகாசி
கடந்த தி.மு.க. ஆட்சியில் வரகூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ-வாகத் தேர்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க-வுக்கு வந்த பிறகு திமு.க. தரப்பில் பலமுறை தூது அனுப்பியும் அவற்றை சட்டை செய்யாமல்  அம்மாதான் முக்கியம் என  இருந்தவர். அந்த விசுவாசம்தான் இப்போது சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறது என்கிறார்கள். அமைதியானவர், கட்சியில் தனக்காக கோஷ்டி வளர்க்காதவர், எளிமையானவர் என்பது சந்திரகாசிக்கான அடையாளம்.
ஸ்ரீபெரும்புதூர்: கே.என்.ராமச்சந்திரன்
காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அவைத்தலைவராக உள்ளார். வண்டலூரில் பெட்ரோல் பங்க், பூந்தமல்லியில் உள்ள சக்தி மாரியம்மன் இன்ஜினீரியங் கல்லூரி ஆகியவற்றை நடத்தி வருகிறார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் ஏ.கே.மூர்த்தியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2011-ம் ஆண்டு செங்கல்பட்டு சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தே.மு.தி.க. கூட்டணிக்குத் தொகுதியை விட்டுக்கொடுத்ததால் எம்.எல்.ஏ. வாய்ப்பு பறிபோனது. ஆங்கிலத்தில் நன்கு பேசக்கூடியவர். பசை பலம் மிக்கவர் என்பதால் தேர்தல் செலவுகளுக்கு கவலை இல்லை.
காஞ்சிபுரம்: மரகதம் குமரவேல்
திருப்போரூர் அடுத்த தையூர் ஊராட்சிக்கு உட்பட்ட செங்கண்மால் பகுதியைச் சேர்ந்தவர். அ.தி.மு.க. ஒன்றிய இளைஞர் அணி, இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலாளராகவும் திருப்போரூர் ஒன்றியக்குழு பெருந்தலைவராகவும் உள்ளார்.இவர் கணவர் குமரவேல் தையூர் ஊராட்சி மன்ற தலைவர்; கான்ட்ராக்டராகவும் உள்ளார். கட்சியினரை அரவணைத்துப் போகக்கூடியர். இதுவரை பிரச்னைகளில் சிக்காதவர். செலவு செய்யவும் தயங்க மாட்டார் என்கிறார்கள். சிறுதாவூர் பங்களா பகுதியில் உள்ளவர் என்பதாலும் கட்சி மேலிட ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருப்பூர்: சத்தியபாமா
ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரான சத்தியபாமா, கோபி ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருக்கிறார். கொங்கு வேளாளக்கவுண்டர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் தகுதி. கட்சியில் உள்ள கோஷ்டிப்பூசல்தான் சத்தியபாமாவுக்கு மைனஸ்.
மதுரை: இரா.கோபாலகிருஷ்ணன்
துணைமேயரான கோபாலகிருஷ்ணன்தான் வேட்பாளர். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறார். ஆரம்பத்தில் புறநகர் மாவட்ட ஜெ. பேரவை துணைச்செயலாளராக இருந்தார். ராஜகண்ணப்பனை மீண்டும் கட்சியில் தலைதூக்க விடக்கூடாது என்று அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி சிவகங்கைக்கு மீண்டும் அவரை அறிவிக்காமல் பார்த்துக்கொண்ட ஓ.பி.எஸ். டீம், அதே யாதவ கோட்டாவில் கோபாலகிருஷ்ணனைப் புகுத்திவிட்டனர் என்கின்றனர்.
திண்டுக்கல்: உதயகுமார்
நிலக்கோட்டை நகர செயலாளரான இவர் ஒரு வழக்கறிஞர். இப்போது நிலக்கோட்டை தொடக்கக் கூட்டுறவு வங்கித் தலைவராகவும் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநராகவும் திண்டுக்கல் கூட்டுறவு ஒன்றிய இயக்குனராகவும் பதவி வகிக்கிறார். கல்லூரி காலத்தில் இருந்து அ.தி.மு.க. மாணவர் அணியில் இருக்கிறார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, ஜெ. அணியில் இருந்தவர். 2006ம் ஆண்டு நிலக்கோட்டை பேரூராட்சி துணைத் தலைவராக இருந்தவர். கடந்த உள்ளாட்சி தேர்தலில், நிலக்கோட்டை பேரூராட்சிக்கான தேர்தலில், 11-வது வார்டில் தோல்வியைத் தழுவியவர். நிலக்கோட்டை தவிர, மாவட்டத்தின் மற்ற தொகுதிகளில் பரிச்சயம் இல்லாதவர் என்பது மைனஸ்.
பொள்ளாச்சி: மகேந்திரன்
200 ஏக்கரில் விவசாயம், மூன்று வணிக வளாகம், கெஸ்ட் ஹவுஸ், பஸ் டிரான்ஸ்போர்ட்ஸ் என வசதி வாய்ப்புகளுக்கு பஞ்சம் இல்லாதவர். கட்சியில் எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக இருக்கிறார். 'தொகுதிக்கு 20 கோடி ரூபாய் வரை செலவழிக்கத் தயார்’ என்று சொன்னாராம் மகேந்திரன். அதிருப்திகளை பணம் சரி செய்துவிடும் என்பதே மகேந்திரனின் எண்ணம்.
தென் சென்னை: ஜெயவர்தன்
1987-ல் கட்சியில் வளர்ந்துகொண்டிருந்த ஒரு நிர்வாகியின் மகனுக்கு பெயர் சூட்டினார் ஜெயலலிதா. அதே பெயரை 26 ஆண்டுகள் கழித்து வேட்பாளர் பட்டியலிலும் எழுதியிருக்கிறார். அவர், முன்னாள் சபாநாயகர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன். 100 நாட்களுக்கு முன்புதான் ஜெயவர்தனின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார் ஜெயலலிதா. அதற்குள் 'புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ எனப் பாட வைத்துவிட்டார். சபாநாயகர் பதவியில் இருந்து இறக்கப்பட்டு அரசியலில் இறங்கு முகம் காட்டிக்கொண்டிருந்த ஜெயகுமார் வாரிசுக்கு சீட் கிடைத்தது பலருக்கும் ஆச்சர்யம். ஜெயகுமாரின் அரசியல் வாழ்வு வட சென்னையில்தான். அப்படியிருக்கும்போது தென் சென்னையில் மகனுக்கு சீட் வாங்கியது ஏனாம்? வட சென்னை தா.பாண்டியனுக்குப் போகும் என்பதால் தென் சென்னையை வழங்கினாராம் ஜெயலலிதா.
கிருஷ்ணகிரி: அசோக்குமார்
அமைச்சர் கே.பி.முனுசாமியின் வலது கரம் என்ற அடையாளத்துடன் வலம் வருபவர் அசோக்குமார். மாவட்ட அவைத்தலைவராக இருக்கும் இவர் 26 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறார். கட்சியின் முக்கியப் பொறுப்புகள் பலவற்றிலும் பல்வேறு காலகட்டங்களில் இருந்துள்ளார். அமைச்சருக்கு கட்சிக்காரர்களுக்கும் இடையில் திரையாக இருப்பது அசோக்குமார்தான் என்ற குற்றச்சாட்டு கட்சிக்காரர்கள் மத்தியில் உண்டு.
மத்திய சென்னை: எஸ்.ஆர்.விஜயகுமார்
வழக்கில் சிக்கிய தகவல் தெரிந்து ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலில் இருந்து கழற்றிவிடப்பட்டார் தூத்துக்குடியைச் சேர்ந்த சரவணகுமார். அவர் வகித்துவந்த மாணவர் அணிச் செயலாளர் பதவியை யாருக்கு தரலாம் என்ற யோசனை நடந்துகொண்டிருந்தது. தூத்துக்குடி மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் உட்பட மூன்று பேரை கார்டனுக்கு அழைத்து விசாரித்தார் ஜெயலலிதா. அந்த மூன்று பேரில் விஜயகுமாரும் ஒருவர். கடைசியில் அவருக்குதான் மாநில மாணவர் அணிச் செயலாளர் பதவி கிடைத்தது. இப்போது வேட்பாளம் யோகமும் அடித்துள்ளது.
நீலகிரி: சி.கோபாலகிருஷ்ணன்
குன்னூர் நகராட்சித் தலைவர் கோபாலகிருஷ்ணன். கட்சியில் பெரிய அளவு பதவிகள் எதுவும் இல்லை. இவருக்கு எதிராக நகராட்சி கவுன்சிலர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதனால், தேர்தல் நேரத்தில் அவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது கஷ்டமே!
வட சென்னை: வெங்டேஷ் பாபு
வட சென்னை அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளராக சேகர்பாபு இருந்தபோது அவருடைய சிஷ்யனாக வலம்வந்தவர். சேகர்பாபு தி.மு.க-வுக்குப் போன பிறகு அந்த இடம் வெற்றிவேலுக்கு கிடைத்தது. ஜெயகுமாரின் சபாநாயகர் பதவி பறிபோனபோது, வெற்றிவேலின் மாவட்டச் செயலாளர் பதவியும் போனது. அப்படிப்பட்ட சூழலில்தான் வெங்கடேஷ் பாபு வட சென்னை மாவட்டச் செயலாளர் ஆனார். அதே வேகத்தில் வாரியத் தலைவர் பதவியும் கிடைத்தது. 'சேகர்பாபுவுடன் இன்னமும்  தொடர்பில் இருப்பவருக்கு எப்படி சீட் தரலாம்?’ என்று செய்தி பரப்பி வருகிறார்கள் இவரது எதிரிகள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வட சென்னை தொகுதி ஒதுக்கப்படும் என்பதால், அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்.
தருமபுரி: பி.எஸ்.மோகன்
எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சியில் இருக்கும் இவர், இப்போது வழக்கறிஞர் பிரிவு செயலாளர். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதற்காக மோகனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் தீவிர ஆதரவாளர்.
தூத்துக்குடி: ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி
தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ஜெயசிங். சாயர்புரம் போப் கிறிஸ்தவ கல்லூரியில் தாளாளராகவும் இருக்கிறார். ஜானகி அணியில் இருந்து மாறி ஜெ. அணிக்கு வந்தவர். நிதானமான அரசியல்வாதி. கிறிஸ்துவ மக்களின் ஆதரவு இவருக்கு அமோகமாக இருப்பதால்தான் வாய்ப்பு வழங்கியிருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், இங்குள்ள சில தொழிலதிபர்களோ, 'கிறிஸ்துவ திருமண்டல தேர்தலில் தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்பட்டவர். அதனால் அவரை மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை கார்டனுக்கு நெருக்கமான வட்டாரத்துக்கு வைத்துள்ளனர்.
ஈரோடு: செல்வக்குமார சின்னையன்
கொடுமுடி பக்கம் உள்ள தட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர். ஈரோடு மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணிச் செயலாளராக இருக்கிறார். கட்சிக்காரர்களுக்கு சட்டரீதியான பிரச்னைகளைத் தொடர்ந்து செய்துவருவதால், எல்லோருக்கும் அறிமுகமான முகம். முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அதிதீவிர ஆதரவாளர்.
தேனி: பார்த்திபன்
ஓ.பி.எஸ். தன்னுடைய மகனுக்காக எதிர் பார்த்திருந்த தொகுதி இது. 2006-ம் ஆண்டு போடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் பார்த்திபன். மதுரை மத்திய கூட்டுறவு தொடக்க வங்கி இயக்குநர் பொறுப்பில் இருக்கிறார். டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர். நேர்காணலுக்கு சென்றபோது சாஷ்டாங்கமாக ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கியிருக்கிறார் பார்த்திபன். இதைவிட வேற என்ன தகுதி வேணும் சொல்லுங்க!
கோவை: நாகராஜன்
இவர் அரசு தரப்பு வழக்கறிஞர் என்றாலும், கட்சிக்காரர்களுடன் நெருங்கிய தொடர்பு கிடையாது என்கிறார்கள். இது அ.தி.மு.க-வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும், கூட்டணி பங்கீடு வரும்போது நிச்சயம் இந்தத் தொகுதி கம்யூனிஸ்ட் கைகளுக்குப் போய்விடும் என்ற நம்பிக்கையில் அமைதியாகவே இருக்கிறார்கள்.
திருவள்ளூர்: வேணுகோபால்
திருவள்ளூர் தொகுதியின் சிட்டிங் எம்.பி. அடிப்படையில் மருத்துவர். இன்னும் வீட்டில் கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வருகிறார். கட்சிக்காரர்களுக்கு காசு வாங்காத டாக்டர். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். தொகுதிக்காக சில வளர்ச்சிப் பணிகளைச் செய்திருக்கிறார். அதே நேரத்தில், தனியார் கல்லூரியின் சாலை வசதிக்காக தனது தொகுதி நிதியை ஒதுக்கியது சர்ச்சையை உண்டாக்கியது. எல்லாவற்றையும் தாண்டி மீண்டும் சீட் வாங்கிவிட்டார்.
மயிலாடுதுறை: பாரதிமோகன்
அமைச்சர் வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசி. ஏற்கெனவே திருவிடைமருதூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தவர். தொண்டர்களிடம் இறங்கிப் பழக மாட்டார் என்பது இவரது இமேஜ். வைத்திலிங்கம் எப்படியும் சீட் வாங்கிக்கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் கடந்த ஆறு மாதங்களாக கட்சியில் பார்க்கிறவர்களுக்கு எல்லாம் சலாம் போட்டு வந்தார். நம்பிக்கை வீண் போகவில்லை. இவர் நித்யானந்தாவுக்கு வணக்கம் வைக்கும் போட்டோ எதிரிகளால் பரப்பப்படுகிறது.
அரக்கோணம்: கோ.அரி
திருத்தணி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத்தின் செயலாளர். இவருடைய பிரதான தொழில் ரியல் எஸ்டேட். அதை தி.மு.க-வினர் ஆதரவோடு செய்கிறார் என்பது எதிர் கோஷ்டியின் குற்றச்சாட்டு. இவர் அமைச்சர் ரமணாவின் ஆதரவாளர். அதனால், ரமணாவின் எதிர் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள், அரியை பற்றிய புகார்களை கார்டனுக்குத் தட்டியபடி இருக்கிறார்கள்.
திருவண்ணாமலை: வனரோஜா
வனரோஜாவின் கணவர் சண்முகம் செங்கம் பகுதி ஒன்றியச் செயலாளராக இருந்தவர். இவர் மீது சந்தனக் கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். சத்துணவு அமைப்பாளராக இருந்தவர் வனரோஜா. வேலூர் ஒன்றியத்தின் ஆவின் துணைத் தலைவரானதும் சத்துணவு அமைப்பாளர் வேலையை ராஜினாமா செய்தார். 'அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியின் விசுவாசி.
புதுச்சேரி: ஓமலிங்கம்
ஓமலிங்கத்தின் அப்பா வைத்தியலிங்கம் 'பக்கா’ காங்கிரஸ்காரர். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி இந்திரா காங்கிரஸ், கண்ணன் காங்கிரஸ் என  இரு பிரிவுகளாக உடைந்தது. அப்போது, கண்ணன் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார் ஓமலிங்கம். 2006-ல் அ.தி.மு.க-வுக்குத் தாவியவருக்கு சீட் கிடைத்து சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். காரைக்கால் மாவட்டச் செயலாளராகவும் பதவி வகிக்கிறார். வீண் சர்ச்சைகளில் சிக்காதவர்.
ஜூ.வி. டீம்

ad

ad