புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014


புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் எளிமையாக நடத்திய “பூவரசம் பொழுது 2013″ ஒளித்தட்டு வெளியீட்டு வைபவம் (Photos)

ஊரிலே நடைபெறும் வருடாந்த ஆலய மகோற்சவத்தில் இடம் பெறும் தேரோட்டத் திருவிழாவின்போது, ஊரின் நான்கு புறமும் வலம் வரும் கண்கவர் தேரினை ஆர்வமும் பக்தி சிரத்தையும் கொண்ட ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து
தேரின் வடம் பிடித்து நிலைக்கு கொண்டு வரும் மரபிற்கேற்ப, கனடா வாழ் புலம் பெயர் தாயகத் தமிழர்களின் ஒற்றுமையுணர்விற்கும், தங்கள் சமூகத்தின் மேம்பாட்டிற்கும் துணை நிற்பதே இந்நாட்டில் உள்ள நூற்றுக்கும் அதிகமான ஊர் சங்கங்கள் தான் என்றால் மிகையில்லை.
அவ்வகையில் புங்குடுதீவைச் சார்ந்த பல நூற்றுக்கணக்கான தாயகத் தமிழ் குடும்பங்கள் தாங்கள் வாழ்ந்த புங்குடுதீவின் மண் வாசனையுடன் தமிழுக்கும், தமிழர்களின் கலை இலக்கிய ஆன்மீகக் கலாச்சாரங்களைப் போற்றி பேணி பாதுகாத்து, அனைத்துத் துறைகளிலும் முன்னேறி எண்ணற்ற சாதனைகள் புரிந்து உலகில் பல நாடுகளில் புங்குடுதீவிற்கு பெருமை சேர்த்து வருவதை தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறியும்.
அதே மனப்பக்குவத்துடனும், தாயக உணர்வுடனும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதே ‘புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்-கனடா” எனும் ஊர் சங்கம் ஆகும்.
ஒவ்வொரு வருடமும் அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடி மகிழும் ‘பூவரசம் பொழுது” கலையிரவும், குறிப்பாக தாயக மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்கு அவர்கள் ஆற்றி வரும் மனிதாபிமான சேவைகளும் அளப்பரியது என்றால் அதற்கு பின்னணியாக செயல்பட்டு வரும் நிர்வாக சபை உறுப்பினர்களும், தன்னார்வலர்களும், இங்குள்ள வர்த்தக வியாபார பிரபலங்களும், ஊடகங்களும், விழா அனுசரணையாளர்களும் மிகவும் பாராட்டுதலுக்குரியவர்களாவார்கள்.
அதிலும் கூடுதலாக ‘அறிவு அற்றம் காக்கும் கருவி” எனும் வள்ளுவரின் குறளின்படி, தாயகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி வசதிகள் மேம்படும் வகையிலும், ஏழை மாணவர்களின் கல்வி செலவினங்களுக்கு கணிசமாய் நிதி திரட்டி நன்கொடை வழங்குவதும், விதவைப் பெண்களின் அவலங்களைப் போக்கிடும் வகையில் சுய வேலை வாய்ப்பு வசதிகளை அளித்து வருவதும், போர், இயற்கை அனர்த்தங்களான சுனாமி, வெள்ளம், புயல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து ஆற்றி வரும் உதவி மற்றும் நிவாரணப் பணிகள் யாவும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு தன்னலமற்ற சேவை மனப்பான்மையுடன் ‘ஒற்றுமையும் ஆற்றலும் ஒருங்கிணைந்து உழைப்போம்’ என்ற தாரக மந்திரத்துடன் தற்போது அதன் தலைவர் திரு அருண் குலசிங்கம், செயலாளர் திரு எஸ்.எம். தனபாலன், பொருளாளர் திரு கதிர் மகாத்மன் ஆகியோரின் முழு ஈடுபாடும் பங்களிப்பும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் திகதி மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்ற ‘பூவரசம் பொழுது-2013″ ஒரு தனித்துவமான அந்தஸ்த்தை பெற வைத்துள்ளது.
அதன் சிறப்பு என்னவென்றால், புங்குடுதீவில் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய லட்சியத்துடனும், குறிப்பாக அங்கு கல்வி கற்கும் இளைய சந்ததியினரின் ஆற்றல்களையும், திறன்களையும் அடையாளப்படுத்தி அனைவரின் அங்கீகாரத்தை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், மாணவ சமுதாயத்தை முன்னிலைப்படுத்தி அவர்களுக்காவே ‘மாணவத்துவம்” என விழா மலர் வெளியிட்டு பெருமைப்படுத்தியதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
அந்த அளவிற்கு கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட விழா மலரில் வெளியிடப்பட்ட கட்டுரைகள், கவிதைகள் போன்ற அனைத்து வகை படைப்புகள் யாவும் இளையோர் ஆக்கங்களாக அமைந்திருந்தது ஒரு புது விதம் என்பதோடு, இயல்பாகவே இன்றைய இளைய சந்ததியினரின் முற்போக்கு சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனமாகும் இவ்வாறு இச்சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தும் அன்று தொட்டு இன்று வரை மேலோங்கி பல் கலாச்சார நாடான கனடாவில் தமிழுக்கும் தமிழர்களின் மாண்புகளுக்கும், எதிர்கால இளைய சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இவ்விழாவின் அனைத்து நிகழ்வுகளையும் ஒளித்தட்டில் பதிவு செய்து, அதன் வெளியீட்டு விழா மிக எளிதானதொரு வைபவமாக 16.3.2014 அன்று 80.Nashdene Ave. Unit # 96 Scarborough (மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி குருமன்றம்) அருகில் உள்ள கலையரங்கில் சங்கத் தலைவர் திரு அருண் குலசிங்கம் அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு இங்குள்ள முக்கியப் பிரமுகர்கள், உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு ஆர்.என்.லோகேந்திரலிங்கம், எதிர்வரும் அக்டேபர் மாதம் நடைபெற உள்ள மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் அரசியல் பிரமுகர்களான ஸ்காபரோ வார்ட் 42 வட்டாரம் திரு நீதன் சபாரட்னம் மற்றும்
ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் கில்வுட் தொகுதியில் கனசர்வேடிவ் கட்சியின் சார்பில் போட்டியிடும்
திரு கென் கிருபா, வீடு விற்பனை முகவர் திருமதி கமலி சண்முகலிங்கம், என்.டி.பி.கட்சியின் ஸ்காபரோ
ரூஜ்ரிவர் தொகுதி அமைப்பாளர் திரு கணேசலிங்கம் தாசன், வீடு விற்பனை முகவர் திரு பிரபா நல்லதம்பி, மொன்றியலிருந்து வருகை புரிந்திருந்த Sri Durga Furniture அதிபர் திரு ஸ்ரீ, வீடு விற்பனை முகவர் திரு ஜம்போ விஸ்வலிங்கம், திரு கைலாயநாதன் கோபால் பிள்ளை, வர்த்தகப் பிரமுகர் திரு மாணிக்கவாசகர், ஊடகவியலாளர் திரு ஆர்.ஆர்.பிரபா, பிரபல நடனக் கலைஞரும், சமூக கலாச்சார நிகழ்வுகளின் தொகுப்பாளினியாகிய செல்வி சஹானா இரட்ணேஸ்வரன் போன்ற முக்கியஸ்தர்கள் வருகை
தந்து சிறப்பித்தார்கள்.
அன்றைய நிகழ்வுகள் அனைத்தையும் தமிழ்வன் தொலைக்காட்சி நிறுவன ஒளிப்பதிவாளர்
திரு பவன் பதிவு செய்ததையும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும். ஏனென்றால் எனக்குத் தெரிந்த வரை
நம்மைச் சுற்றி நடைபெறும் அனைத்து கலாச்சார நிகழ்வுகளையும் தமிழ்வன் தொலைக்காட்சி
பதிவு செய்து அவ்வப்போது ஒளிபரப்பு செய்து, இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கு பற்றிட
தவறியவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதே மிகவும் பாராட்டுதலுக்குரியதாகும்
என்பதே எனது தாழ்மையான அபிப்ராயம் ஆகும்.
விழா அரங்க மேடையில் ஒளிப்பேழைகளும், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ‘பூவரசம்
பொழுது-2013 மாணவத்துவம்” சிறப்பு மலரும், சங்கத்தின் பதாதையும் காட்சி தர அமைதி
வணக்கத்துடன் இவ்வைபவம் தொடங்கியது.
சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினரான திரு சுகுணேஸ்வரன் மார்க்கண்டு அவர்கள் அனைவரையும்
வரவேற்று முன்னுரை ஆற்றினார்.
திரு அருண் குலசிங்கம் தனது தலைமை உரையில் சங்கத்தின் சாதனைகளை பற்றியும்,
கடந்த ஆண்டு நடைபெற்ற பூவரசம் பொழுதின் வெற்றிக்கு உறுதுணையாக நின்று செயல்பட்ட
அனைவரையும் பாராட்டி மலரும் நினைவாக பகிர்ந்துகொண்டு, அன்று வெளியிடப்படும் ஒளித்தட்டினைப்
பற்றியும், பூவரசம் பொழுதின் சிறப்பையும் பற்றியும் முன்னுரை வழங்கி அனைவருக்கும் நன்றி
பாராட்டி தனது உரையை நிறைவு செய்தார்.
அடுத்து ஒளித்தட்டின் வெளியீட்டுரை வழங்கிய சங்கச் செயலாளர் திரு எஸ்.எம்.தனபாலன் அவர்கள்
சங்கம் ஆற்றியுள்ள சேவைகளை பட்டியலிட்டதோடு, வருங்காலத்தில் மேற்கொள்ள உள்ள
முன்னேற்றப் பணிகளைப் பற்றியும், குறிப்பாக கடந்த ஆண்டு தாயகத்தில் கல்வி கற்கும்
மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக உதவி நிதி வழங்கியதையும் பெருமைப் படக் கூறினார்.
மேலும் அன்று வெளியிடப்படும் ஒளித்தட்டில் சங்கத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில் கடந்த ஆண்டு மிகவும் கோலாகலமாய் நடைபெற்ற பூவரசம் பொழுது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும்
கலைநயத்துடன் மூன்று பகுதிகளாக பதிவு செய்து ஆவணப்படுத்தியுள்ளதை பெருமைப்படக் கூறினார்.
மேலும் அவ்விழாவில் பங்குகொண்ட முதன்மை மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முதல் பிற
பிரபலங்களின் பங்களிப்பையும், அன்றைய இரவு இடம் பெற்ற இசை நடனம் போன்ற கலை நிகழ்வுகளான எழுச்சி நடனம், கொஞ்சும் சலங்கைகள் எனும் பரத நாட்டியம், திரைக்கோலங்கள் எனும் திரையிசை
நிகழ்வுகள் ஆகிய அனைத்து கலை நிகழ்வுகளும் மிக உன்னதமாய் நடந்து நமது இளம்
கலைஞர்களின் ஆற்றல்களையும் திறன்களையும் அரங்கேறியதை விவரித்து பாராட்டிச் சிறப்பித்தார்.
மேலும் உறுப்பினர்கள் சேர்க்கையின் அவசியத்தைப் பற்றியும், எதிர்வரும் சித்திரை மாதம்
18ம் திகதி 2648.எக்லின்டன் அவின்யு கிழக்கில் (அமைந்துள்ள 2648.Eastern Banquet Hall)ல்
நடைபெற உள்ள வருடாந்த பொதுகூட்டத்தில் இங்குள்ள புங்குடுதீவு சார்ந்த அனைத்துத்
தமிழர்களும் பங்கு பெறுவதோடு, சங்கத்தின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் துணையாக
உறுப்பினர்கள் மேலும் அதிக எண்ணிக்கையில் சேர்ந்திட வேண்டியதின் அவசியத்தையும்
குறிப்பாக வரும் காலத்தில் தங்களைப் போன்ற முதியவர்களுக்கு ஓய்வளித்து, இன்றைய இளைய
சந்ததியினர்கள் சங்கத்தின் நிர்வாக பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதின் அவசியத்தையும்
எடுத்துரைத்தார்.
அவரது வெளியீட்டுரையைத் தொடர்ந்து ஒளித்தட்டு வெளியீடு வைபவம் இடம்
பெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருமே தலைவர் அவர்களிடமிருந்து பிரதியைப் பெற்று தங்களது நல் வாழ்த்துக்களைக் கூறி பெருமைப்படுத்தினார்கள்.
நிறைவாக பாராட்டுரை வழங்கிய உதயன் பிரதம ஆசிரியர் திரு.ஆர்.என்.லோகேந்திரலிங்கம் தனது
ஊடகச்சேவையின் மூலம் இங்குள்ள தாயக உறுவுகளின் ஊர்ச் சங்கங்கள், கலை இலக்கிய
கலாச்சார ஆன்மீக அமைப்புகள் நடத்தும் வைபவங்களில் பங்கேற்று அவைகளின் சமூக
பங்களிப்பை தகவல்களாக வெளியிட்டு வருவதை நினைவு கூறி, தமிழ் வொன், உதயன் மற்றும்
இங்குள்ள இணைய தளங்கள் மூலம் இதுபோன்ற நிகழ்ச்சியின் தகவல்கள் வெளியிடும்போது,
இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ள முடிகிறது என்பதையும், புங்குடுதீவு பழைய
மாணவர் சங்கம் ஊடகங்களை மதித்து தொடர்பு கொண்டு வரும் உன்னதப் பண்பையும் அதன் தனித்துவத்தையும் பாராட்டினார்.
மேலும் எதிர் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள உதயன் சர்வதேச விருது
விழாவிற்கான ஏற்பாடுகளுக்கிடையில், தான் இந்நிகழ்வில் பங்கு கொண்டது ஊடகங்களை மதிக்கும்
பண்பினைக் கொண்ட சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களால் தான் என்று பெருமைபடக்
கூறினார்.
இதுபோன்ற அமைப்புகள் மென்மேலும் வளர்ச்சியுற்று நமது ஒற்றுமையுணர்விற்கு கூடுதல் பலம் சேர்க்க வேண்டியதின் அவசியத்தையும் சுட்டிக்காட்டி தனது வாழ்த்துக்களைக் கூறிச் தனது உரையை நிறைவு செய்தார்.
திரு தனபால் அவர்களின் நன்றியுரையுடன் அன்றைய வைபத்தை நிறைவு செய்து அனைவரும் சிற்றுண்டி உபசாரத்துடன் கலந்துரையாடி மகிழ்ந்தனர். சங்கத்தைப் பற்றிய கூடுதல் விபரங்களையும், ஒளித்தட்டு பிரதியை பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்
தலைவர் அருண் குலசிங்கம் 416 357 2847 – செயலாளர் எஸ்.எம்.தனபாலன் 647 290 5856 பொருளாளர் கதிர் மகாத்மன் 647 465 3720
புதுவை இராமன்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12

ad

ad