புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014

திருவண்ணாமலை அருகே ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது; தொடரும் அலட்சியம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இன்று மீண்டும்   மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
திருவண்ணாமலை அருகே கலசம்பாக்கத்தையடுத்து உள்ள  கிடாம்பாளையம் என்ற இடத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தவறி விழுந்த குழந்தையின் பெயர் சுஜித். துரை - ஜெயலட்சுமி என்ற தம்பதியரின் மகன் ஆவான்.

160 அடி ஆழம்
குழந்தை சுஜித் விழுந்துள்ள ஆள்துளை கிணறு அமைந்துள்ள இடம் ஜெயபால் என்பவருக்கு சொந்தமானது என்றும், அந்த ஆழ்துளை கிணறு 160 அடி ஆழம் உடையது என்றும், குழந்தை சுமார் 40 அடி ஆழத்தில் சிக்கி இருக்கலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணி தீவிரம்
தகவலறிந்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டுள்ள நிலையில், இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ், காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீட்பு பணிக்காக விரைந்து வந்துள்ளனர்.
குழந்தை விழுந்துள்ள இடத்தின் அருகே பக்கவாட்டில் பள்ளம் தோண்டுவதற்காக 3 பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டுபள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அந்த 3 பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 8 மணி அளவில் 20 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது
இதனிடையே ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை மயக்கமடைந்துவிடாமல் இருப்பதற்காக குழிக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
மதுரையில் இருந்து ரோபோட்டிக் குழு விரைவு
இதுபோன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்பதில் நிபுணத்துவம் பெற்ற மதுரை மற்றும் கோவையை சேர்ந்த ரோபோட்டிக் எந்திரம் வைத்துள்ள மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்துகொண்டிருப்பதாக தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உரிமையாளர் கைது
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்த நிலத்தின் உரிமையாளர் ஜெயபாலை கைது செய்தனர்.
'மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை'

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கூறுகையில்,"இந்த விவகாரத்தில் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. மூன்று நாட்களுக்கு முன்னரே நில உரிமையாளரிடம் அறிவுறுத்தியும் சம்பவம் நடந்துள்ளது. மதுரை மற்றும் கோவையிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது" என்றார்.
10 தினங்களுக்கு மூன்றாவது சம்பவம்
நேற்றுதான் நெல்லை மாவட்டம், சங்கரன் கோவில் அருகே 3 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.
அதற்கு சில தினங்களுக்கு முன்னர், அதாவது ஏப்ரல் 5 ஆம் தேதியன்று விழுப்புரம் அருகே பல்லகசேரி கிராமத்தில் மதுமிதா என்ற மூன்று வயது சிறுமி தவறி விழுந்து, பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மறுதினம் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தாள்.
10 தினங்களுக்குள் தமிழகத்தில் 3 இடங்களில் அடுத்தடுத்து ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைகள் தவறி விழுந்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதைவிட அடுத்தடுத்து இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்த பின்னரும், ஆழ்துளை கிணறு தோண்டுபவர்கள், அதனை உரிய முறையில் மூடாமல் அலட்சியமாக விட்டுச் செல்வதும், அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

ad

ad